தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, March 28, 2009

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்




கிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம். தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார். இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பிய முதல் பதிபு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காபகத்தின் தனிச்சிறப்பு. திருக்குறள் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன. கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.நான்கு வேதங்கள், உபநிடதங்கள்,ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், பல் சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பம்சம். தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய தூண்களும், நேப்பாள மன்னரின் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் எனப் பார்த்த இடங்களில் தன்னைக் கவர்ந்த கட்டட வடிவமைப்புகளைக் கூறி பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார். நூலகத்திற்கென தனிக் கட்டடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் உருவாக்கி மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார். இவரின் இம்முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்களிடம் உள்ள பல நூல்களை அளித்துள்ளனர். பல்லடம் மாணிக்கம் நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல் நூல்களையும் வெளியிட்டுள்ளார். வள்ளுவம் என்ற இதழையும் நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்றுபோனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும். தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என விருப்பமுடையவராக இருக்கிறார். பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன என்பது கூடுதல் சிறப்பு. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காபகம்தான். இது தொடர்பாக புலவர் பல்லடம் மாணிக்கத்தைச் சந்தித்த போது," தமிழில் எத்தனையோ அரிய நூல்களைப் பாதுகாக்க இயலாமல் இழந்திருக்கிறோம் அந்த இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது. அதை உணர்ந்தே என் காலத்தில் நூல்களைக் காப்பத்ற்கென்றே தனி கவனம் எடுத்துக்கொண்டேன். அவ்வாறு காப்பதன் மூலம் தமிழ் மொழியையும் அதில் உள்ள செறிவான் சிந்தனைகளையும் எதிர்காலத் தமிழர்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற இலக்குடனே இந்தத் தமிழ்நூல் காபகம் படிப்படியாக உருவாக்கப்பட்டது" என்றார். தங்களிடம் உள்ள அரிய நூல்களை கால காலத்திற்குக் காக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். பல்லடம் மாணிக்கம், தமிழ்நூல் காப்பகம், சேலம் நெடுஞ்சாலை, விருத்தாசலம்-606 001 பேசி: 9443042344.

5 comments:

  1. thanks for writing this post

    ReplyDelete
  2. புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களுக்கும் இடுகைமூலம் தெரிவித்த உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு - இரத்தினபுகழேந்தி அவர்களே!
    எம் போன்ற நூலக வாசகர்களுக்கு இத்தகவல் பெரிதும் உதவும்!
    எமக்கு வசதியாக அவரது விபரங்களைத் தெரிவித்தமைக்கு மேலும் ஒரு நன்றி!
    வளர்க உங்கள் தமிழ் எழுத்துப் பணி!

    ReplyDelete
  4. இந்த நூலகம் எண்மியப் படுத்தப்பட்டால், உலகத்தில் எல்லா இடங்களில் இருக்கும் தமிழர்களுக்கும் பயன் கிடைக்கும்.

    ReplyDelete
  5. பல்லடம் மாணிக்கம் ஐயாவின் பணி

    பாராட்டுக்குரியது...

    .....

    பயன்பாட்டுக்கும் உரியது என்பது

    அதைவிடச்சிறப்பு...

    தமிழ் இயலன்

    ReplyDelete