தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, April 25, 2009

எழுத்தாளர் சபாநாயகத்தின் இலக்கியப் பணி.



1950 இல் மாணவப் பருவத்திலேயே எழுதத் தொடங்கி இன்றும் ஓர் இளைஞரைப் போல் உற்சாகம் சிறிதும் குறையாமல் இலக்கியப் பணியாற்றி வருபவர் எழுத்தாளர் சபாநாயகம். அன்றாட பணிகளைக் கூட கால அட்டவணைப் படிதான் இன்றும் செய்து வருகிறார். உழைப்பு,காலம் தவறாமை, புதியன கற்பதில் ஆர்வம் எனப் பல பண்புகள் இவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புத்தூர் எனும் சிற்றூரில் 1935 ஆம் ஆண்டு வேலாயும் மதுராம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்த இவர் இதுவரை புதினம், சிறுகதை, குறுநாவல், திறனாய்வு நூல், தொகுப்பு நூல், வாழ்க்கை வரலாறு, சிறுவர்களுக்கான நூல்கள் என முப்பத்து மூன்று நூல்கள் எழுதியுள்ளார். சபா, அவைமுதல்வன் ஆகிய புனைப் பெயர்களில் கவிதைகளும் எழுதியுள்ளார். கணக்கு ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய இவர் மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முது நிலை விரிவுரையாளராகவும் பணியை நிறைவு செய்தவர்.பணியாற்றிய காலத்தில் மாணவர்களைக் கவர்ந்து பணியில் புகழ்பெற்று விளங்கியவர்.எந்த ஊருக்கு பணிமாறுதல் செய்யப்பட்டாலும் அந்த ஊரில் உரிய வசதிகள் இல்லை என்றாலும் அங்கேயே குடும்பத்தோடு சென்று தங்கி பணியாற்றியவர் இந்த கொள்கையிலிருந்து கடைசிவரை மாறவில்லை. இவரது மகனையும் மகளையும் இவர் பணியாற்றிய பள்ளியிலேயே படிக்கவைத்திருக்கிறார்.பள்ளிக்கு செல்லும் போது ஒரு கல்லூரி பேராசிரியரைப் போல் கோட்டு டை அணிந்து மிடுக்காகச் செல்வது இவரது வழக்கம் அந்தப் பழக்கத்தை அவர் பணி நிறைவு பெறும் வரைக் கைவிட்டதில்லை. சிறுவயதிலேயே இவரின் தந்தை நன்னூல், பன்னூல் திரட்டு, தேவாரம், திருவாசககம், பெரியபுராணம் போன்ற இலக்கண இலக்கிய நூல்களிலுள்ள கருத்துகளை இவருக்குக் கூறியது இவரின் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.மேலும் இவர் தந்தை நீதிக்கட்சி ஆதரவாளர் என்பதால் ஜஸ்டீஸ் பத்திரிகை இவர்கள் வீட்டிற்கு வருமாம் அதில் உள்ள குழந்தை பக்கத்தைத் தவறாமல் படிப்பதுண்டு அதனைத்தொடர்ந்து பெண்ணாடத்திலுள்ள இவரது பெரியம்மா வீட்டில் தங்கி படித்தபோது அங்கு ஆனந்தவிகடனோடு வரும் பாலர் மலர் போன்ற இதழ்களைப் படித்தும் அங்குள்ள மெய்கண்டார் நூலகத்தில் இலக்கிய நூல்களைப் படித்தும் தம் இலக்கிய தாகத்தைத் தணித்துக்கொண்டார். கடந்தைத் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர் சிவ.பழமலை என்பவர் அவர்தம் திருமணப் பரிசாகக் கிடைத்த மு.வ. நூல்களை இவருக்குப் படிக்கத் தந்துள்ளார் அது இவரது வாசிப்புத் தளத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. பெண்ணாடம் பள்ளி தமிழாசிரியர் வித்துவான் சாம்பசிவம் மாணவர்களுக்காகக் கலைப்பயிர் என்ற கையெழுத்து இதழைநடத்தினார் அதில் எழுதிய 'எங்கள் வாத்தியார்' என்ற சிறுகதைதான் இவரின் முதல் படைப்பு.விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கிணங்க இவர் எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராக வருவார் என ஆசிரியர் வாழ்த்தி அப்போதே குறிப்பு எழுதியுள்ளார். ஆசிரியரின் அறிவுறுத்தலால் அக்கதையை ஆனந்த போதினி இதழுக்கு அனுப்ப அது அச்சிலும் வெளிவந்தது அக்கதையை விரிவாக்கிப் புதினமாக ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்ற தலைப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதற்கு கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை வழங்கிய சிறந்தத் தமிழ்ப் புதினத்திற்கான பரிசு ரூபாய் பத்தாயிரம் கிடைத்தது. இந்தப் புதினம் தமிழகத் தொடக்கப்பள்ளி வரலாற்றில் இந்த நூற்றாண்டின் முற்பகல் நிகழ்வுகளைப் பற்றிய அரியதொரு பதிவாகும். இந்தப் பணி உருசிய இலக்கிய மேதை டால்ஸ்டாயின் பணிக்கு நிகரானது என கவிஞர் பழமலய் கூறுவது மிகையில்லை. இவரை இவரது ஆசிரியர்கள் ஊக்குவித்தது போல இவரும் இவரது மாணவர்களை ஊக்குவித்து சிறந்த படைப்பாளிகளாக உருவாக்கியிருக்கிறார் அதற்கு சாட்சியாக கவிஞர் பழமலய், கல்பனாதாசன் ஆகியோரைக் குறிப்பிடலாம் ஆம் இருவரும் இவரின் மாணவர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது திராவிடர் கழகத்தலைவர் வீரமணி இவரின் வகுப்புத் தோழர். ஜெயகாந்தன், மறைந்த வல்லிக்கண்ணன், தி.க.சி. போன்ற எழுத்தாளர்களோடு நல்ல தொடர்பு இவருக்கு உண்டு. ஏ.வி.எம்.அறக்கட்டளையின் தங்கப்பதக்கம், தமிழக அரசால் வழங்கப்படும் சிறந்த நூலுக்கான பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது ஆகியவை இவர் பெற்ற பரிசுகளில் குறிப்பிடத் தகுந்தவையாகும். கணையாழி களஞ்சியம், தீபம் இதழ்த் தொகுப்பு, ஞானரதம் இதழ்த் தொகுப்பு ஆகியவை வருங்காலத் தலைமுறைக்கு இவர் அளித்த இலக்கியக் கொடைகளாகும்.பழய, புதிய இலக்கிய இதழ்களனைத்தையும் முறையாகச் சேகரித்துப் பாதுகாத்து வைத்துள்ளார். ஓவியம் வரைவதிலும் ஒளிப்படக்கலையிலும் வல்லவர். அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், தேவநேயப் பாவாணர், ஜெயகாந்தன், கி.வா.ஜகநாதன் ஆகியோர் பேசும் கூட்டங்களுக்குச் சென்று அங்கேயே அவர்களைப் பார்த்து படம் வரைந்து அவர்களிடம் அதில் கையப்பம் பெற்று வைத்துள்ளார்.படச்சுருளைப் பயன்படுத்திப் படமெடுத்த காலத்தில் இவர் வீட்டிலேயே இருட்டரை அமைத்து இவரே படத்தைப் பெரிதாக்குவார். தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்பத் தன்னை அணியமாக்கிக் கொள்வது இவரது சிறப்பு. இன்றும் இலக்கமுறை ஒளிப்படக் கருவியால் படங்கள் எடுத்து வருகிறார். இணையத்திலும் எழுதி வருகிறார். திண்ணை, தமிழ் மணம் ஆகிய வலைப் பக்கங்களில் இவர் படைப்புகளைக் காணலாம் .http://ninaivu.blogspot.com என்பது இவரது வலைப்பூ முகவரி. காணக:தமிழ் ஓசை களஞ்சியம்

Sunday, April 19, 2009

பொற்கோ அவர்களுடன் பேசியது...



சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவில்(16.4.09) சிறப்புரையாற்ற விருத்தாசலம் வந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.பேராசிரியர் முனைவர் சு.அமிர்தலிங்கம் அவர்கள் அறிமுகப் படுத்தினார். நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தோம் அவர் புலமை இதழைத் தொடங்கியது பற்றியும் அதில் எழுதிய ஆய்வாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியது பற்றியும் குறிப்பிட்டார். சிற்றூரிலிருந்து ஓர் இதழ் வரவேண்டும் என்பதற்காகவே மக்கள் நோக்கு இதழைத் தொடங்கினோம் அதில் பல புதுமைகளைச் செய்தோம் எளிய மக்களான ஈயம் பூசுபவர்கள், கூலித்தொழிலாளிகள் போன்றவர்களின் நேர்காணல்கள் அதில் இடம்பெற்றன, வாசகர்களிடம் போதுமான ஒத்துழைப்பு இன்மையால் அது இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஆனாலும் அந்த இதழில் நாங்கள் என்னவெல்லாம் எழுதினோமோ அதெல்லாம் இப்போது நிறைவேறியுள்ளது.அப்போது பள்ளிகளில் விடுதிகள் கிடையாது குறிப்பாகப் பெண்கள் படிப்பைத் தொடர வேண்டுமென்றால் பள்ளிகளில் பெண்கள் விடுதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சின்ன விசயம் என்ற தலைப்பில்தான் இதுபோன்ற செய்திகளைக்குறிப்பிட்டோம், சென்னை அண்ணா சாலையில் கழிவரை அப்போது கிடையாது பெண்களின் நலன் கருதி ஏன் மாநகராட்சி கழிவரைகளைக் கட்டக்கூடாது என்று எழுதினோம் அவையெல்லாம் இன்று நடந்தேறியுள்ளன.அந்தவகையில் மக்கள் நோக்கு இதழ் பணி மகிழ்வளிப்பதாகவே உள்ளது. என்று தம் இதழியல் பட்டறிவைப் பகிர்ந்து கொண்டார் நாங்கள் நடத்திய களம்புதிது இதழ் பற்றியும் அது ஆறு இதழோடு நின்று போனது பற்றியும் குறிப்பிட்டேன். வந்தவரை மகிழ்ச்சியடைவோம் நின்றுபோனது பற்றி கவலைப் பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினார். புலமை இதழ் தமிழியல் ஆராய்ச்சியானது பற்றியும் அதற்கு நண்பர்கள் அளித்த ஒத்துழைப்பு பற்றியும் மறவாமல் குறிப்பிட்டார். நீங்களெல்லாம் இவ்வளவு ஈடுபாட்டோடு செயலாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது. மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற அறிஞர்கள் பலர் உலகம் முழுவதும் சரியான பணிவாய்ப்பு கிடைக்கப் பெறாவிட்டாலும் அதற்காக சோர்ந்து விடாமல் தொடர்ந்து அவர்கள் ஊக்கத்தோடு இயங்கியது பற்றியும் நினைவு கூர்ந்தார். நாட்டுப்புறவியலில் நாம் செய்யவேண்டிய பணிகள் ஏறாளமாக உள்ளன.நம் பகுதி சிற்றூர்களில் முன்பு ஏறாளமான பழக்க வழக்கங்கள் சடங்குகள் வழக்கத்திலிருந்தன. ஆனால் பெரியாரின் பகுத்தறிவுப் பரப்புரைக்குப் பிறகு சடங்குகளை முதலில் கைவிட்டதும் நமது பகுதியில்தான். முக்கியமான மனிதர்கள் மறைந்தால் உறை சொல்லி ஒப்பாரி பாடும் வழக்கமிருந்தது இப்போது அது உண்டா என்று வினவினார் நள்ளிரவில் நடைபெறும் அந்த நிகழ்ச்சி அனைத்து செயல்பாடுகளையும் தானாகவே நிறுத்திவிடும் வல்லமை படைத்தது என்றும் குறிப்பிட்டார். நம்மிடமுள்ள குடும்பப் பெயர்களைத் தொகுத்தாலே நம் பண்பாட்டு ஆவணமாகத் திகழும் இதையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டும், நாட்டுப் புறக் களஞ்சியத்தை மனதில் கொண்டு எழுதி வாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்தால் பின்னால் அது மிகப் பெரிய அளவில் சேர்ந்திருக்கும் இவற்றையெல்லாம் தொடர் பணியாகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இலண்டனில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியது முக்கியமான கால கட்டம் அதுதான் உலக அளவிலான தொடர்பை அவருக்கு ஏற்படுத்தியது என்பதையும் மறவாமல் குறிப்பிட்டார். நான் எழுதிய நூல்களைப்பற்றி பொருட்படுத்தி கேட்டது மகிழ்வளித்தது, கிராமத்து விளையாட்டுகள் நூல் பற்றி கூறியபோது பாவாணர் நூலிலுள்ள கருத்துகள் ஒன்று சேறுமே அதை எப்படி கையாண்டீர்கள் என வினவியதோடு நம் விளையாட்டுகள் ஒவ்வொன்றிலும் ஒரு தத்துவம் உள்ளது என்பதையும் நினைவு கூர்ந்தார் அதைக் கூடுமான வரை நூலில் குறிப்பிட்டுள்ளேன் எனக்கூறியதும் மகிழ்ச்சி தெறிவித்தார். என் உணவு பற்றிய ஆராய்ச்சி நூலைப் பார்த்தும் மகிழ்ந்தார் இதெல்லாம் அவசியம் பதிவுசெய்யப்பட வேண்டியவை சேத்தமாவு பற்றி இதில் குறிப்பிட்டிருக்கிறீர்களா? இல்லை என்றதும் அதைக் கேட்டுப் பாருங்கள் இப்போது வழக்கத்திலிருக்கிறதா என்று தெரியவில்லை நாங்கள் சிறுவர்களாக இருந்த போது சில மாவுகளை ஒனறாகச் சேர்த்து தருவார்கள் அதனால்தான் அப்பெயர் அதற்கு. சில தானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்து மாவாக்கி இனிப்பு கலந்து கொடுப்பார்கள் என்று சேத்த மாவு பற்றி கூறினார். ஒரு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் அவருக்கு இணையான ஒரு அறிஞரிடம் பேசுவது போல நம் பேச்சை அலட்சியப் படுத்தாமல் கவனமாகக் கேட்டு உரிய முறையில் எதிர்வினையாற்றிது மனதுக்கு இதமாகவும் மகிழ்வாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த பேராசிரியர் அமிர்தலிங்கம் நன்றிக்குரியவர்.

விருதுக்கு பெருமை சேர்த்த பொற்கோ



விருதுகள் என்றாலே சர்ச்சைகளுக்குக் குறைவிருக்காது. ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ள அய்யன் திருவள்ளுவர் விருது தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப்பண்பாட்டு மேம்பாட்டிற்கும் தொண்டாற்றிய சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்களுக்கு அறிவித்ததன் மூலம் அவ்விருதிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது. அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி என்னும் சிற்றூரில் 1941 ஆம் ஆண்டு பொன்னுசாமி, பழனியம்மாள் இணையருக்கு மகனாகப்பிறந்த இவர் பள்ளிக்கல்வியை இரும்புலிக்குறிச்சியிலும் கல்லூரிக்கல்வியை திருப்பனந்தாள் தமிழ்க்கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களிலும் பயின்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து 1973-74 இல் யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆய்வுத்தகைஞராக அமெரிக்காவிலுள்ள நியூயார்க் பல்கலைக்கழகம்,வடமேற்குப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் உயராய்வுகளை தணிக்கை செய்தார். 1975 இல் சென்னையிலுள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1977 முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும்,தமிழ்த்துறைத் தலைவராகவும், மொழியியல் செயல்திட்ட இயக்குநராகவும், தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் பள்ளி தலைவராகவும் கீழ்த்திசை ஆய்வு நிறுவன இயக்குநராகவும் திறம்படப் பணியாற்றியவர். மேலும் டோக்கியோவிலுள்ள காக்குயின் பல்கலைக்கழகத்தில் சப்பான் தமிழ் ஒப்பாய்வுத் திட்டத்தில் வருகைதரும் பேராசிரியராக 90,93,96 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்,90களின் இறுதியில் கோலாலம்பூர் மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் படிப்புத்துறையில் புறநிலை ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். இவர் கல்விபயின்ற காலத்திலும் பணியாற்றிய காலத்திலும் அறிவாற்றலால் இவரைக்கவர்ந்த பேராசிரியர்கள் பலர் அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள் தெ.பொ.மீ., அகஸ்தியலிங்கம் ஆவர். ஒப்பீட்டாயவில் மதிப்புமிக்க ஆலோசனைகளைஅயல் நாட்டுப் பேராசிரியர்களிடம் பெற்றதுண்டு.அப்படிப்பட்ட பேராசிரியர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜே.ஆர்.மார், டி.பர்ரோ; அமெரிக்கப்பேராசிரியர் எம.பி.எமினோ, சப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோ ஆவர். தமிழ் இலக்கணத்தில் இவரின் ஆய்வுகள் புதிய வெளிச்சம் பாய்ச்சியவை. தமிழ் இலக்கணக் கோட்பாடுகள்,இலக்கண உலகில் புதிய பார்வை,ஜிலீமீ ஸ்மீக்ஷீதீ வீஸீ னீஷீபீமீக்ஷீஸீ ஜிணீனீவீறீ ஆகிய நுல்கள் குறிப்பிடத்தகுந்தவை மேலும் வினைச்சொற்களை வகைப்படுத்துவதில் கோதண்டராமன் வகைப்பாடு எனற புதிய வகைமாதிரியை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. ஒப்பாய்வுத் துறையில் கால்டுவெல்லுக்குப் பிறகுக் குறிப்பிடத்தகுந்தது இவரது பணி. தமிழ் மொழி உலகமொழிகளோடு கொண்டுள்ள தொடர்புகளைச் சுட்டிக்காட்டி தமிழுக்கும் சப்பான் மொழிக்கும் உள்ள உறவுகளைத் தகுந்த ஆதாரங்களோடு விளக்கும் ஆய்வு நூல் தமிழுக்குக் கிடைத்தக் கொடையாகும். தமிழின் சிறப்புகளை உலகநாடுகளுக்கு உணர்த்திய பெருமையும் இவருக்கு உண்டு.ஜிணீனீவீறீ விஷீக்ஷீஜீலீமீனீவீநீs, விஷீபீமீக்ஷீஸீ stuபீவீமீs வீஸீ ஜிணீனீவீறீ, லிவீஸீரீuவீstவீநீ stuபீவீமீs வீஸீ ஜிணீனீவீறீ, ஜிணீனீவீறீ stuபீவீமீs ஆகிய நூல்களில் இவர் அறிவு நுட்பம் வெளிப்படுகிறது. பிற மொழியாளர்களுக்குத் தமிழ்க் கற்பிக்க புதிய அணுகுமுறையில் பாட நூல் எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு. இலண்டன் பி.பி.சி. தமிழோசையில் மொழியியல் பற்றி இவர் ஆற்றிய உரைத்தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. படைப்பபிலக்கியத்தையும் இவர் விட்டுவைக்கவில்லை பாவேந்தர் பரம்பரைக் கவிஞர்களில் இவரும் ஒருவர்.புலமை ஆராய்ச்சி இதழை 1974 முதல் இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் இப்போது தமிழியல் ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்விதழ் வெளிவருகிறது. பல ஆய்வாளர்களை, பேராசிரியர்களை வளர்த்த பெருமை அவ்விதழுக்கு உண்டு. இன்றுதான் நம் தமிழ்மொழிகுச் செம்மொழித் தகுதியை நடுவணரசு வழங்கியிருக்கிறது, ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் தேவையான மொழிக்கொள்கைகளை வகுத்து வெளியிட்டவர் பொற்கோ. இவற்றுக்கெல்லாம் மணிமகுடம் வைத்தது போன்றது இவர் திருக்குறளுக்கு எழுதிய உரை விளக்கமாகும். இது தமிழில் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சியாகும். உரையாசிரியரின் கருத்தைத் திருவள்ளுவர் மீது திணிக்காமலும், விளங்கிக்கொள்ள இயலாத இடங்களில் இப்போதைக்கு விளங்கவில்லை என்று வெளிப்படையாகக் கூறும் பண்பாடும் இவரது உரையின் தனிச்சிறப்புகள். மேலும் ஒவ்வொரு குறளையும் எப்படி வாசித்து எளிதாகப் பொருள் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார்.எடுத்துக்காட்டாக முதல் குறளை எப்படி வாசிப்பது என்றுபார்ப்போம் "எழுத்தெல்லாம் அகர முதல.உலகு ஆதிபகவன் முதற்றே." இதனை உரைத்தொடர் என்றுகுறிப்பிட்டு இதற்கு அடுத்து உரைத்தொடர் விரி, அதனைத்தொடர்ந்து பொருள்விளக்கமும் குறிப்பும் என்ற வரிசையில் இந்த உரைவிளக்கம் அமைந்திருப்பது கற்போரை மேலும் திருக்குறளைப் படிக்கத் தூண்டுவதாக உள்ளது. இப்பணியை வாழ்நாள் பணியாகச் செய்திருப்பது பொற்கோஅவர்களின் சாதனை என்றுதான் கூறவேண்டும். 1978 இல் தொடங்கி 2003 இல் தான் முடித்துள்ளார். தியானத்தின் அவசியத்தை உணர்த்தும் நல்ல உள்ளம் நல்ல மனம்,இலக்கணம் தொடர்புடைய சொற்களுக்கு விளக்கம் கூறும் இலக்கணக் கலைக் களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும் தமிழ் உணர்ச்சி தமிழ் வளர்ச்சி தமிழ் ஆட்சி ஆகிய நூல்களும் இவரது குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியபோது நீண்டகாலமாக நிரப்பப்படாமலிருந்த பணியிடங்களுக்குத் தகுதியானவர்களைப் பணியமர்த்தி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரிடம் பயின்ற மாணவர்கள் உலக அளவில் உயர் பதவிகளில் உள்ளனர். தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்குநர் முனைவர் ஆறு.இராமநாதன், நெய்வேலி சவகர் கல்லூரி முதல்வர் அரங்கராசன், தமிழக அரசின் பரிசுபெற்ற சங்க இலக்கியக் கலைக் களஞ்சியம் எழுதிய பேராசிரியர் அமிர்தலிங்கம் ஆகியோர் இவரது மாணவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். உலகம் போற்றும் அறிஞராகத் திகழும் பொற்கோ அவர்கள் தமிழ் இனத்திற்குப் பெருமைசேர்த்துக்கொண்டிருக்கிறார் என்பது தமிழர்களுக்குப் பெருமை. அவருக்கு இவ்விருதை வழங்கி பெருமைப்படுத்தியிருக்கும் தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்காக அவரைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

Saturday, April 11, 2009

பேசக்கூடாததா பாலியல்?

உயிர்க் கொல்லி நோய் எனப்படும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வுப் பரப்புரைகள் நம் நாட்டில் மிகுதியாக செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இத்தகைய பரப்புரைகள் எல்லா ஊடகங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். மக்களிடம் எயிட்ஸ் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமையால்தான் இந்நோய் பரவுவதாக அரசு உட்பட அனைத்து அதிகார நிறுவனங்களும் பரப்புரை செய்து வருகின்றன. அடித்தளத்தில் நேர்ந்த குறைபாட்டை மேல் கட்டுமானத்தில் சரி செய்வதைப் போல்தான் இப் பரப்புரை உள்ளது. சாலையோரத்தில் வாழ்வோர், குடிசையில் கூட்டுக்குடும்பமாக வாழ்வோர் ஆகியோருக்குள்ள பாலியல் சிக்கல்கள் பெரிதும் கண்டுகொள்ளப் படுவதில்லை. கூட்டுக்குடும்பம் வசித்து வந்தது/ஒரே அறையில்/அப்பா அம்மா/பெரியவன் அவன் சம்சாரம்/நடாள் அவன் சம்சாரம்/சின்னவன் அவன் சம்சாரம்/மருமக்கள் மூவரும் தாய்மையடைந்தனர்/என்ன நடந்தது/எப்பொ நடந்தது/எப்படி நடந்தது? என்ற மகுடேஸ்வரனின் கவிதை எள்ளல் தொனியில் இருந்தாலும் கவி மாந்தர்களின் பாலியல் சிக்கல் நம் அதிகார நிறுவனங்களை வெட்கித் தலை குனிய வைக்கும் ஆற்றல் படைத்தது. பாலுணர்ச்சி எல்லா உயிர்களுக்குமுள்ள ஓர் இயல்புணர்ச்சி என்றாலும் அது குறித்து வெளிப்படையாக நாம் பேசுவதில்லை. நம் பண்பாடு அதற்குத் தடையாக உள்ளதாகக் கருதுகிறோம். தமிழர்களுக்கு பாலியல் குறித்த மரபு வழி அறிவை நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், விடுகதைகள், சிற்பங்கள் என கலை இலக்கிய வடிவங்கள் அனைத்தும் தொன்று தொட்டு வழங்கி வருகின்றன என்பதுதான் உண்மை. காமத்தைக் கொண்டாடிய மரபு தமிழர் மரபு என்பதைக் காமன் பண்டிகைகள் நமக்கு உணர்த்துகின்றன.ரதி மன்மதன் கதைப்பாடல்களும் அதை உறுதி செய்கின்றன. சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது யோனிப் பொருத்தத்தை முக்கியமானதாகக் கருதுவர். பொருந்தாக் காமம் தீராத் துன்பம் என்கிறது நம் செம்மொழி. அறம் பொருளுக்கு இணையாக நம் நீதி நூல் காமத்தையும் பேசுகிறது. கலை இலக்கியங்கள் காமத்தை உணர்வு பூர்வமாகவும், அழகியல் ரீதியாகவும் வெளிப்படுத்துகின்றன என்றால் காம சூத்திரத்தை அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்துகின்றன மதன நூல்கள். கன்னலன்றி வேம்பு நுகர் காமத்துரோகிகள் போற் பிள்ளையரு தெய்வத்தை பேசாமலே எந்நாளும் சாற்றுவதுங் காமாலை சாதிப்பதுங் கரணம் போற்றுவது காமனடி போதுஎன்று கடவுள் வாழ்த்தோடு தொடங்கி புணர்ச்சி விதிகளை விலாவாரியாக விளக்குகிறது கொக்கோக நுட்பம். பிறப்புறுப்பு, பாலியல் நுட்பம், கருத்தரித்தல், மித மிஞ்சிய பாலுறவால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியன பற்றியெல்லாம் நவீன அறிவியலை விஞ்சும்படியான கருத்துகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இறுதியில் மானிடர் ஒழுக்கம் பற்றியும் கூறத் தயங்கவில்லை. வாய் மொழி இலக்கியம், நாட்டுப்புற இசை, கூத்து, வானியல், கட்டடக்கலை, ஓவியக்கலை, மருத்துவம், வேளாண்மை, வாணிகம், நெசவு என சகலத் துறைகளிலும் தமிழர்களுக்கென்று தனித்த மரபு உண்டு என்பதைக் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள் எனப் பலரும் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழர்கள் பாலியல் குறித்தும் தெளிந்த அறிவுடையவர்களே என்பது கல்விப் புலங்களால் கண்டு கொள்ளப்படாத ஒன்று. இது குறித்த ஆய்வுகள் பெரிதும் நடைபெற வேண்டும். பாலியல் குறித்த தயக்கங்கள் தகர்த்தெரியப் பட்டால் எதிர்காலத்தின் மனித வளம் காப்பாற்றப்படும். காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்