தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, May 16, 2009

ஆசிரியரைப் பேணிக்காக்கும் மாணவர்கள்ஆவணப்படமான உண்மை நிகழ்வு


ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கின்ற மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில்தான் அதனை நன்றியோடு நினத்துப் போற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். நம் நாட்டின் எதிர்காலத்தை உறுவாக்குகின்ற வகுப்பரையில் சின்னஞ்சிறு சுட்டிகளாய்ப் பயின்ற அந்த பட்டாம்பூச்சி நாட்கள் ஒவ்வொரு மனித மனத்திலும் என்றும் நீங்காத நினைவுகளாய் பதிந்திருக்கும். மலறும் நினைவுகளாய் நாம் அவ்வப்போது நம்மோடு பயின்ற தோழர்களையும் நமக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களையும் நினைத்துப் பார்த்துக்கொள்வதுண்டு. வயது ஆக ஆக நம் பள்ளிப் பருவத்திற்கு நாம் திரும்பிவிட மாட்டோமா என்கிற ஏக்கம் அதிகரிப்பது தவிர்க்க இயலாதது. நம்மோடு படித்த நம் தோழர்களை மீண்டும் அதே பள்ளியில் சந்தித்தால் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கும். பள்ளிக்கூடம் படம் வெளிவந்த பிறகு இத்தகைய சந்திப்புகள் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. அப்படிச் சந்திப்பவர்கள் அந்த பள்ளிக்கோ பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கோ அங்கு பணியாற்றிய ஆசிரியர்களுக்கோ ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்று சேர்ந்து தங்களால் இயன்ற நற்பணியைச் செய்வதுண்டு. நெய்வேலி குளூனி பள்ளியில் பயின்ற இரண்டாவது அணி மாணவர்கள் குளூனி சங்கமம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஒன்று சேர்ந்தனர். எழுபதுகளில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் இப்போது மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் எல்லோரும் குடும்பத்தோடு அந்த விழாவில் பங்கேற்க உற்சாகம் கரை புரண்டு ஓடியது என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாட்டும் இசையும் கற்றுத்தந்த ஸ்டெல்லா மிஸ் விழாவுக்கு வராதது ஒரு குறையாக இருந்தது. பள்ளியில் விசாரித்தபோது அவர்கள் பெங்களூரிலிருப்பது தெரிய வந்தது. பெங்களூரிலிந்து விழாவுக்கு வந்திருந்த ஆனந்திடம் ஸ்டெல்லா மிஸ் முகவரியைக் கொடுத்து அவர்களை எப்படியாவது தேடிக் கண்டு பிடிக்கச் சொன்னார்கள். அவர் அங்கு சென்ற போது அந்த ஆசிரியை எழுபது வயதைக் கடந்து கவனித்துக்கொள்ள யாருமற்று ஒரு சின்னஞ்சிறு அறையில் தானே சமைத்துக்கொண்டு பேச்சுத்துணைக்குக் கூட மனிதர்களில்லாமல் இரண்டு கிளிகளோடு பேசிக்கொண்டு இன்னலுறுவதைக் காண நேர்ந்தது. உடனே ஸ்டெல்லா மிஸ்ஸின் நிலையை நண்பர்களுக்குக் கூறி நெய்வேலியில் அவருக்கு ஒரு வீடு பார்த்து அங்கு தங்கவைத்து நெய்வேலி நண்பர்கள் அவரை கவனித்துக்கொள்வது என்று ஏற்பாடு செய்து இன்று ஸ்டெல்லா மிஸ்க்கு உதவியாக ஒரு மாணவப் பட்டாளமே அணிதிரண்டு உதவி வருகின்றனர்.




இயக்குநர் செல்வன்

ஆசிரியை ஸ்டெல்லா

இந்த உணர்ச்சி பூர்வமான உண்மைச்சம்பவத்தை மிக அழகான ஆவணப் படமாக்கியிருக்கிறார் நெய்வேலி செல்வன். தங்கள் ஆசிரியரின் பண்பு நலன்களை மாணவர்கள் கூறும் போது நமக்கு மெய்சிலிர்க்கிறது. இப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் மனதுக்குள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தம்மிடம் பயின்ற மாணவர்களின் நிழற்படத்தைப் பார்த்து அவர்களின் பெயர்களை மிகச்சரியாக தலைப்பெழுத்தோடு கிடு கிடுவென ஸ்டெல்லா மிஸ் கூறுவதைக் கேட்கும்போது அந்த மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த அனபையும் ஈடுபாட்டையும் அறிந்துகொள்ள முடிகிறது. தன்னிடம் படித்த மாணவர் மருத்துவராகி தனக்கே மருத்துவம் செய்கின்ற வாய்ப்பு எத்தனை ஆசிரியர்களுக்குக் கிட்டும், அப்படிக் கிட்டினால் அது அந்த ஆசிரியருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். அந்த மகிழ்ச்சியைத் தன்னுடைய மாணவர் மருத்துவர் செந்திலின் வாயிலாக ஸ்டெல்லா மிஸ் பெறுவதை நாம் படத்தில் காணலாம். இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கதை கூறுவது போல சலிப்பை ஏற்படுத்தா வண்ணம் தன் இனிமையான குரலால் விளக்குகிறார் கமலா சுதன். செந்தில், அமலா,சத்தியதேவன், அனிதாதேவராசன், பாரதி, பாபு, செல்வன் ஆகிய மாணவர்கள் இன்று நெய்வேலியில் அந்த ஆசிரியையை கவனித்துக்கொள்கின்றனர். ஏறத்தாழ ஓராண்டுகாலம் இப்பணியோடு படத்திற்கான ஒளிப்பதிவுப் பணியையும் செய்துள்ளனர் செல்வன்,பிரசன்னா, அரவிந்த், பாரதிக்குமார் ஆகியோர். படம் முடியும்போது ஒலிக்கும் பாரதிக்குமாரின் கவிதை காட்சிகளுக்கேற்ப அமைந்து அழகூட்டுகிறது. தங்களுக்குக் கற்பித்த ஆசிரியைக்கு காலத்தால் அழியாத ஒரு கலைப்படைப்பை உருவாக்கி பெருமைப்படுத்திய இந்த மாணவர்கள் அவரை வாழ்வின் கடைசி காலத்தில் பேணிக்காப்பாற்றி வருவதன்மூலம் இப்படைப்பை மேலும் அழகுபடுத்துகிறார்கள். ஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக எண்ணி எள்ளி நகையாடும் இன்றைய மாணவ சமுதாயத்தினருக்கு இந்தப் படத்தை அவசியம் திரையிட்டுக் காண்பிக்க வேண்டும். என்ன உங்களுக்கும் ஸ்டெல்லா மிஸ்ஸைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதா? இயக்குநர் செல்வனை 9442470721 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்.

Saturday, May 9, 2009

நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?

உலகின் மிகப் பெரிய மக்கள் நாயக நாடு இந்தியா என்பதில் நாட்டு மக்களுக்கு என்ன பெருமைகிடைத்திருக்கிறது? இந்த நாடு நமக்கு என்ன செய்திருக்கிறது? இவையெல்லாம் பாமர மக்கள் மனதில் எழக்கூடிய வினாக்கள். நாடு நமக்கென்ன செய்தது என்று கேட்காதே நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று சிந்தித்துப் பார் என்று அவர்களிடம் எதிர்வினா எழுப்பி இனி தப்பிக்க முடியாது. நாடு விடுதலை பெற்று அரை நூற்றாண்டுகாலத்திற்கு மேலாகியும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நம் ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியவில்லை. அனைவருக்கும் கல்வி என்பது கூட கனவுத் திட்டமாகவே இருந்து வருகிறது.உண்மையிலேயே அனைவருக்கும் கல்வியளிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அரசியல்வாதிகளுக்கு உள்ளதா என்பது சந்தேகம்தான், எல்லோரும் கல்வியறிவு பெற்று விழிப்படைந்து விட்டால் அவர்களை இப்படியெல்லாம் ஏமாற்ற முடியாதல்லவா?
ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளின் மூலம் மக்களிடம் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டனவா என்பதை மக்கள் எப்போதாவது ஆராய்ந்து பார்த்திருக்கிறார்களா? நான்காவது தூண்களான பத்திரிகைகளாவது இந்தப் பணிகளைச் செய்திருக்கின்றனவா? இப்படிப்பட்ட சூழலில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? இத்தனை முறை வாக்களித்து என்ன பலனைக் கண்டோம்? என்ற எண்ணங்கள் நம் மனதில் எழுவது இயல்புதான். அதனால் நாம் வாக்களிக்காமல் இருந்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? நாம் விரும்புகிற மாற்றம் தானாகக் கிடைத்து விடுமா? மாற்றத்தை விரும்பகிறவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் அதற்கான வாய்ப்பாக நாம் ஏன் இந்தத் தேர்தலையே பயன்படுத்தக் கூடாது?
குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிப்பதற்கு அக்கட்சியின் தொண்டனுக்கு பல காரணங்கள் இருக்கலாம். எந்த கட்சியையும் சாராத பொது மக்கள் கட்சி அடிப்படையிலல்லாமல் பொது நல நோக்கோடு சிந்தித்து போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்காக பாடுபடக் கூடியவரை அடையாளம் கண்டு அவருக்கு வாக்களிக்கலாம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வென்றவர்களில் நூற்று இருபது உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்தாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இத்தகைய உறுப்பினர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. இவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள் குற்றவாளிகள் என்றால் இவர்களுக்கு எதிராகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமலே இருந்து விட்ட படித்த/ மேல்தட்டு மக்களும் குற்றவாளிகளே. ஏனென்றால் இத்தகைய மக்கள்தான் வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் ஒருவருக்கும் வாக்களிக்க உங்களுக்கு விருப்பமில்லையென்றால் அதையாவது வாக்கச்சாவடிக்குச் சென்று பதிவு செய்யுங்கள். பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வேண்டுகோள்களுக்கிணங்க இந்தத் தேர்தலில் முதன் முறையாக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனப் பதிவு செய்கதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.இப்படி குறிப்பிட்ட அளவு வாக்காளர்கள் பதிவு செய்தால் அரசியில் கட்சிகள் வேட்பாளரைத் தேர்வு செய்யும்போது கொஞ்சமாவது யோசிப்பார்கள். வாக்களிப்பதற்கு முன்பு நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள் நீங்கள் ஒரு முறை அளிக்கும் வாக்கு ஐந்து ஆண்டுகளுக்கு நம் நாட்டின் தலையெழுத்தைத் தீர்மனிங்கும் ஆற்றல்வாய்ந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். வழக்கமான தேர்தல்களிலிருந்து ஒரு மாறுபட்ட சூழல் இத்தேர்தலில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெற்று முழக்கங்களாகி வருகின்றன. இனம், சாதி, கட்சி, வட்டார நலன் போன்ற கூறுகள் தேர்தல் பிரச்சனைகளாவது தவிர்க்க இயலாதனவாகி வருகின்றன. அவற்றையும் மீறி நாம் நாம் வாக்களிப்பது சாத்தியமில்லை என்றாலும் சிறந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் விரலிலுள்ள 'மை'க்கு ஒரு மறியாதையை ஏற்படுத்த முடியும். மாறாக தவறான ஒரு நபருக்கு வாக்களித்து கரும்புள்ளியைக் குத்திக்கொள்ளாதீர்கள். கொளுத்தும் வெயிலில் வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் நின்று வாக்களிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும் என்றெண்ணி வீட்டுக்குள் இருந்து விடாதீர்கள்.காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்றுவிடுவது புத்திசாலித்தனமானது என்று நினைத்துக்கொண்டு சென்றால் நம்மைவிட புத்திசாலிகள் அங்கு நமக்கு முன்பு காத்திருப்பார்கள். ஆனாலும் வெயிலுக்கு முன்பு வரிசையில் நின்றுவிட்டால் உச்சி வெயிலிலிருந்து தப்பிக்கலாம். காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்.

Friday, May 8, 2009

பழய வாய்ப்பாடு

தஞ்சாவூர் நில அளவை
நிறுத்தல் அளவை


வாய்ப்பாடு முதல் பக்கம்





எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எண் சுவடி என்ற பழய வாய்ப்பாடு ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் தமிழர்களின் எண் முறைகள் பற்றியும், எண்ணியல் சார்ந்த பல்வேறு தகவல்களும் இடம்பெற்றிருந்தன. இன்றய இளைஞர்களுக்கு அறிமுகமில்லாத தொன்மையான நிறுத்தலளவைகள், தஞ்சாவூர் நில அளவை போன்றவை அதில் இடம்பெற்றுள்ளன. பழய அளவை முறைகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும் என்பதால் அந்த வாய்ப்பாட்டின் ஒருசில பக்கங்கள் உஙள் பார்வைக்கு.








இந்த வாய்ப்பாட்டை இது வரைப் பாதுகாத்து வைத்திருந்த சபாநாயகம் அய்யா அவர்களுக்கு நன்றி கூறுவோம்.

Saturday, May 2, 2009

ஒரு சிறுமியின் முதுகில் ஏழு செங்கற்கள்


அன்புயிர் சன்னோ,
அன்பும் இனிமையும் நிறைந்த சுட்டிப்பெண்ணே
இன்று காலை செய்தித்தாளில் உனது மரணம் பற்றி படிதேன்.மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாய், இது போல் இன்னும் பலருக்கு நிகழலாம் உன்னால் என்ன செய்ய முடியும் இது வாடிக்கையாகிவிட்டது.
நீ இறப்பதற்கு முன் அந்த கடைசி விநாடிகளில் தேவதைக் கதைகளில் வருகின்ற குழந்தைகளை நேசிக்கும் அந்த தேவதையை நீ சந்தித்திருப்பாய் என்று எண்ணுகிறேன். நீ மிக பணிவாக மண்டியிட்டு கிடந்தபோது உன் முகத்தில் அரும்பிய வியர்வையையும் கண்ணீரையும் துடைத்தவள், தாங்கிக்கொள்ளும் வலிமையை கொடுத்தவள், வலியை நிறுத்தும் அந்த இரண்டு சொட்டு மந்திர நீரைக்கொடுத்தவள் அந்தக்காவல் தேவதையே. அந்த தேவதை வந்தாளா? நீ மருத்துவ மனையில் இருந்தபோது இரவு முழுவதும் உன்னுடன் தங்கினாள் இல்லையா?
இன்று காலை உன்னைப் பற்றி படித்ததிலிருந்து எங்கு நோக்கினும் உன் கண்களைக் காண்கிறேன் என் இரண்டு மகன்களைப் பார்க்கும்போது கூட. ஒரு வேளை நான் உன் கண்களில் அச்சத்தை மட்டும் காண்கிறேனோ எனத் தோன்றுகிறது. ஆனால் சுட்டெரிக்கும் வெய்யிலில் இரண்டு மணி நேரம் நீ முட்டி போட்டு குனிந்திருந்த போது உன் முதுகின் மீது சுமத்தப்பட்ட அந்த ஏழு செஙற்களை நான் அறிவேன்.
ஒவ்வொரு நாளும் , மக்களோடு பேசும்போதும் செய்தித்தாள்களைப் படிக்கும் போதும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் அவற்றை நான் காண்கிறேன். தங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்வதை விட கட்டுப்பாடாக இருக்கக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிற பெற்றோர்கள்தான் அந்த முதல் செங்கல்.
அநீதியை எதிர்த்துப் போராடத் தெரியாமல் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உன் வகுப்புத் தோழர்கள்தான் அந்த இரண்டாவது செங்கல்.
குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பதை விட அதிகமாக அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்பதை உணராத உன் ஆசிரியர்கள்தான் மூன்றாவது செங்கல்.
நெடுங்கணக்கை மனப்பாடம் செய்ய இயலவில்லை என்பதற்காக தலை நகரப் பள்ளி ஒன்றில் ஒரு சிறு குழந்தை சித்திர வதைக்கு ஆளாகி இறந்து போனதைக் கண்டுகொள்ளாத ஆனால் கட்சியின் நலனுக்காக அற்ப விசையங்களுக்கெல்லாம் வேலை நிருத்தம் செய்கிற அரசியல்வாதிகள்தான் அந்த நான்காவது செங்கல்.
ஒரு ஆசிரியர் கொடுக்கின்ற உடல் ரீதியான தண்டனையைக் குற்றமாகக் கருதாத - ஏனென்றால் அவர்களே வன் முறையில் நம்பிக்கை உடயவர்கள்- காவலர்களே ஐந்தாவது செங்கல்.
இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து ஏழைகளை நாட்டின் முக்கிய பிரச்சனையாகப் பார்க்கும் (ஏழைக் குழந்தைகளின் பள்ளியை அல்ல) மேட்டுக் குடியினரே ஆறாவது செங்கல்.
அந்த கடைசி செங்கல் எதுவென்று உன்னிடம் சொல்வதற்கு எனக்கு வெறுப்பாக இருக்கிறது சன்னோ. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுத்து, அதிலிருந்து வெளி நடப்பு செய்யும் துணிவைத் தராத உன் காவல் தேவதைதான் அந்த ஏழாவது செங்கல்.
இப்படி ஒரு கேடு உனக்கு நேரும் என நீ அஞ்சியிருக்க வேண்டும். உன் பணிவே உன் உயிருக்கு உலை வைக்கும் என்று கற்பனை கூட செய்திருக்க மாட்டாய். என்னருமை சன்னோ உன் இறப்பால் நான் வருந்துகிறேன். பெரியவர்களின் முட்டாள் தனத்தால் நீ சாக நேர்ந்ததை எண்ணி துக்கப்படுகிறேன்.
உன் மரணத்தை ஒன்றுமில்லை என்று ஆகிவிடாது. நம் இந்தியக் கல்வி முறையில் ஏதோ ஓர் அடிப்படைத் தவறு இருக்கிறது. அது உறுவாவதற்குத் துணை புரிந்த அந்த ஏழு செங்கற்களில் ஏதோ அடிப்படையில் ஒரு கேடு இருக்கிறது என்பதை உன் மரணம் எஙளுக்கு உணர்த்தும். ஒரு வேளை உன் நினைவாக மக்கள் அவ்வேழு செங்கற்களைத் தூள் தூளாக நொறுக்கத் தொடங்கலாம். ஏனெனில் அந்த ஏழு கற்கள் சென்ற வெள்ளிக்கிழமை உன் முதுகில் இரூந்தது மட்டுமல்ல கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் கொண்ட, அழுவதற்கு அச்சப்படும் உன்னைப் போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகளின் முதுகின் மீது அதே கற்கள் மீண்டும் மீண்டும் ஏறுகின்றன. ஒரு வேளை நீ பட்ட துன்பத்தின் காரணமாக ஏதாவது புதிதாக உருவாகலாம்.அக்கரையுள்ள பெற்றோர்கள், அக்கரையுள்ள ஆசிரியர்கள், அகரையுள்ள அரசியல்வாதிகள், அக்கரையுள்ள காவலர்கள், ஏழைகளுக்காக கரிசனம் கொள்ளும் செல்வந்தர்கள் ஆகியோர்களால் ஒரு புதிய பள்ளி முறை உருவாகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகள் தங்களால் சமாளிக்க முடியவில்லை என்பதற்காகத் தங்களையே குறைபட்டுக்கொள்ள மாட்டார்கள். மாறாகத் தஙளால் என்ன செய்ய முடிகிறதோ அதிலே பெருமை காண்பார்கள். தங்களுக்காக தங்களின் வகுப்புத் தோழர்களுக்காக அன்புடன் தங்கள் கைகளை உயரே தூக்கிப் பிடிப்பார்கள். என் அன்பு சன்னோ உனை நான் தவறவிட்டுவிட்டேன்.
(கட்டுரையாளர் செபஸ்டியன் டேராடூனில் உள்ள லத்திகா ராய் நிறுவனத்தின் குழந்தை மருத்துவர்)
நன்றி: இந்து நளிதழ் (26.04.09),மொழி பெயர்ப்பில் உதவிய அ.முதுகுன்றன், எழுதத்தூண்டிய அ.மங்கை.
கற்றல் அது குழந்தைகளுக்கு இன்னும் தாங்கொணாத சுமையாகவே உள்ளது என்பதையே சன்னோ என்னும் சிருமியின் மரணம் நமக்கு உணர்த்துகிறது. மாற்று கல்வி குறித்து சிந்திப்போம்.