தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, October 31, 2009

கவிஞர் கீதாஞ்சலியின் படைப்புலகம்


'எச்சரிக்கைகள் ஏமாறும்'-கதை மூலம் 90 களில் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர் கீதாஞ்சலி பிரியதர்சினி. அதனைத்தொடர்ந்து அவர் எழுதிய கதைகள் மறந்து போன குரல்கள் என்னும் தொகுப்பாக 2000 இல் வெளியானது.இந்நூலுக்கு சேலம் நாகப்பன் ராசம்மாள் இலக்கிய விருது வழங்கப்பட்டது. தொகுப்புக்கு வந்த விமர்சனங்கள் இவரது எழுத்தை செழுமையாக்க உதவின. கவிதைகளின் மீது தன் கவனத்தைத் திருப்பிய கீதாஞ்சலி மாற்று, உயிரெழுத்து, புதிய பார்வை போன்ற இதழ்களில் கவிதை எழுதி தன் படைப்புகளை மேலும் செம்மைப்படுத்திக் கொண்டார். 2008 இல் 'அவனைப்போல் கவிதை ' நூல் வெளியானது. அந்நூலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருது கிடைத்தது. இவரது இலக்கியப் பயணத்தில் நல்லதொரு திருப்பு முனையை ஏற்படுத்தியவர் கவிஞர் பிரம்மராஜன். அவர் நிகழ்த்திய 'பெண் எழுத்தாளர் இலக்கிய சந்திப்பு 2000'- கருத்தரங்கு பல புதிய படைப்பாளிகளை அறிமுப்படுத்தியது. கீதாஞ்சலியின் கவிதைகள் அவர் சூழலில் வாழும் அசலான மனிதர்களை அவர்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டவை. "நான் அறிந்த சமூகத்தில் நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையில் கண நேரம் வந்து போன நிகழ்வுகளின் பாதிப்பால்தான் இத்தகைய கதைகளை எழுதினேன்" என்று கூறும் கீதாஞ்சலியின் படைப்புகளில் நுட்பமான அழகியல் இழையோடுவதை நாம் உணரலாம். கீதாஞ்சலியின் கவிதைகளில் குறிப்பிடத்தக்க அம்சமாக வார்த்தைச் சிக்கனம் காரணமாய் விளையும் இறுக்கத்தைச் சொல்லலாம் என்கிறார் பிரம்மராஜன். விழி பா.இதயவேந்தனும் அன்பாதவனும் தொகுத்துள்ள பெண் படைப்புலகம் இன்று என்றநுலில் கீதாஞ்சலி எழுதியுள்ள கட்டுரை சிறந்த திறனாய்வு நோக்குடன் பெண் படைப்புகளை மதிப்பீடு செய்வதாக அமைந்துள்ளது. இவரிடமிருந்து பல புதிய படைப்புகள் தமிழ் இலக்கிய உலகுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இவரது எழுத்துகள் ஏற்படுத்துகின்றன.
கீதாஞ்சலியின் கவிதையில் ஒரு பகுதி
"ஒரு குவளை நிரம்பும்குளிர்ந்த தண்ணீருக்கெனமீன்களுடன் நிறைந்திருக்கும்இந்த ஆற்றைத் தரமுடியுமாவிறகுக்கெனஇருள் கவியும் வனங்களை."
அச்சமில்லை இதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம். http://tamilmanam.net

Wednesday, October 28, 2009

சுயசிந்தனையை வளர்க்கும் படைப்பாற்றல் கல்வி





தமிழக அரசு கல்வித்துறை கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறைகளில் புதிய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது.விஜயகுமார் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது ஆந்திர மாநிலத்தில் ரிசிவேலி பகுதியில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய பள்ளியில் ஏ.பி.எல். எனப்படும் செயல் வழிக் கற்றல் என்ற இக்கற்பித்தல் முறை பின்பற்றப் படுவதையறிந்து சென்னை மாநகராட்சியில் பரிசோதனை அடிப்படையில் சில பள்ளிகளில் நடைமுறைப் படுத்திப்பார்த்து எல்லா பள்ளிகளுக்கும் இக் கற்பித்தல் முறை பரவலாக்கப்பட்டது.ஒன்று முதல் நான்கு வகுப்புகள் வரை மட்டுமே இம்முறையில் கற்பிக்கப்படும். அதன் பிறகு தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் படிப் படியாக இம் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது.ஏ.பி.எல். வகுப்பில் ஆசிரியர் மாணவர்களுக்கு போதிக்க மாட்டார் மாறாக மாணவர்கள் கற்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பார்.பாடங்கள் புத்தக வடிவில் இருக்காது குழந்தைகள் கையாள்வதற்கு வசதியாகத் தனித் தனி அட்டைகளில் அமைந்திருக்கும். அவரவர் திறமைக்கேற்ப படிப்படியாகக் கற்றுக் கொள்வார்கள். இந்த முறையில் நான்கு வகுப்புகள் வரை பயிலும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரும்போது மீண்டும் பழைய முறையில் கற்கவேண்டியுள்ளதே என யோசித்த அரசு மேல் வகுப்புகளிலும் புதிய முறையைப் புகுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அதன் விளைவாகத்தான் ஏ.எல்.எம். எனப்படும் படைப்பாற்றல் கல்வி முறையை ஆறு முதல் எட்டு வகுப்பு வரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப் படுத்தியது. இந்த முறையிலும் மாணவர்கள் குழுவாகப் பிரிந்து பாடத்தைத் தாங்களே கற்க வேண்டும். கடினமான சொற்களை பென்சிலால் அடிக்கோடிட்டு அச்சொற்களுக்கான அர்த்தத்தைத் தங்கள் குழுவிலோ பிற குழுக்களிடமோ ஆசிரியரிடமோ தெரிந்து கொள்வார்கள்.அதன் பிறகு பாடக் கருத்துகளைச் சுருக்கி மன வரைபடமாகத் தங்களுக்கு புரியும்படி வரைந்துகொண்டு முக்கிய கருத்துகளைத் தொகுத்து வகுப்பில் வழங்குவார்கள். தொகுத்தலில் விடுபட்ட கருத்துகளைப் பிற குழுவினர் சுட்டிக் காட்ட வேண்டும். இப்படி பாடக்கருத்துகளை மாணவர்கள் தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொள்வதற்கு இம்முறை நிச்சயம் துணை செய்கிறது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. இக்கற்பித்தல் முறையை ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்த மாணவர்களுக்கு சுய கற்றல் முறை ஏற்றதுதான். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விநிலை அதற்கு உகந்ததாக இல்லை என்பது அவர்கள் வாதம் அதில் ஓரளவு நியாயம் இருந்தாலும் அவற்றையும் மீறி ஒரு சில ஆசிரியர்கள் இம்முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள எருமனூர் நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியை கலைச்செல்வி. எப்படி இவருக்கு இது சாத்தியமானது என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொள்வதற்காக அப்பள்ளிக்குச் சென்றோம் இவரது வகுப்பறை மட்டுமல்ல அப்பள்ளியின் அனைத்து வகுப்புகளுமே முன்மாதிரியாக உள்ளன.மாணவர்கள் குழுவாக வட்ட வடிவில் அமர்ந்து படிக்க வேண்டும் என்பதால் வகுப்பறைக்குள் ஐந்து வட்டங்கள் வரையப்பட்டுள்ளன அது குறித்து கலைச்செல்வி கூறும்போது," அந்த வட்டத்தில் மாணவர்கள் அமர்ந்துவிடுகின்றனர் இதனால் அவர்களை வட்டவடிவில் அமரச்செய்யும் நேரத்தை மிச்சப் படுத்தமுடிகிறது.ஆரம்பத்துல ரொம்ப கஸ்டமாத்தான் இருந்துது. இதுக்காக நம்மள தயார் படுத்தி இந்தமுறை எப்படித்தான் இருக்குண்ணு சோதிச்சுப் பாத்துடனும்குற உத்வேகத்துல இந்தமுறையில கற்பிக்கறதுல என்னென்ன இடர்பாடுகள் இருக்குன்னு கண்டுபிடுச்சு ஒவ்வொண்ணா களைய ஆரம்பிச்சு இன்னைக்கு எனக்கு ரொம்ப ஈசியா ஆயிட்டுது. இன்னைக்கு எங்கிட்ட எட்டாம் வகுப்பு படிக்கிற பசங்க ஆறாவதுல கடினச் சொற்களை அடிக்கோடிடச் சொன்னா ஒரு சொல் விடாமாட்டாங்க. இன்னைக்கு சொற்களோட எண்ணிக்கை கொறஞ்சிருக்கு அவங்க படிக் ஆரமிச்சிட்டாங்க அவங்க எப்படி படிச்சு புரிஞ்சுக்கிறதுன்னு தெளிவாயிட்டாங்க. அவங்களுக்குள்ள விவாதம் பண்ணிக்கிறாங்க புதுப் புது சிந்தனைகளுக்கு வழி வகுக்கறதா இருக்கு அவங்க விவாதம். நமக்கே ஆச்சரியமா இருக்கு" என்று கூறும்போது அவர் முகத்தில் பரவசத்தைக்காண முடிந்தது. நாம் வகுப்புக்குள் சென்றபோது உயிரியல் பாடம் நடந்துகொண்டிருந்து. மாணவர்கள் பாடக்கருத்துகளைத் தொகுத்து வழங்கியதைக் காண நேர்ந்தது. செல் ஸ்லைடுகளை மைக்ராஸ் கோப்பில் வைத்து ஆசிரியர் விளக்க மாணவர்கள் எதிர்பாராத கோணங்களில் கேள்விக் கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தனர் ஆசிரியையும் சலிக்காமல் விடையளித்துக்கொண்டிருந்தார்.வகுப்பு உயிரோட்டமாக இருந்தது." இதுதான் சார் பழைய மெத்தேடுக்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம். பழய மெத்தேடுல சில பகுதிகள நாம விட்டுட்டு கூட நடத்தலாம். இதுல அது மாதிரி செய்ய முடியாது. ஒவ்வொரு வார்த்தையையும் பசங்க படிக்கிறதுனால பாடத்துல இருக்குற ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம அர்த்தம் தெரிஞ்சு வச்சிருக்கணும். இல்லண்ணா இவங்கள சமாளிக்க முடியாது". என்று கூறியபடி பாடக் கருத்துகளைத் தொகுத்தளிக்க மாணவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒவ்வொரு குழுவினரும் தங்களால் தொகுக்கப் பட்ட கருத்துகளை அக்குழுவின் தலைவர் வழியாக வழங்கினர். அப்போது அவர்கள் விட்ட கருத்துகளை பிற குழுவினர் எடுத்துரைக்க சூடு பிடிக்கத் தொடங்கியது வகுப்பறை முதல் குழுவின் தலைவி அனுசுயா தாவர செல்களிலுள்ள பாகங்களைப்பற்றிக் கூற இன்னொரு குழுவின் தலைவி காயத்ரி எதிர் வினா எழுப்ப ஆசிரியர் உதவிக்கு வர ஒரு ஜனநாயகமான வகுப்பறைச்சூழல் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. கல்வியாளர்கள் விரும்பிய மாணவர் சுதந்திரத்தை ஏ.எல்.எம். வகுப்பறையில் கண்கூடாகக் காண நேர்ந்தது. மாணவி அனுசுயாவிடம் பேசிய போது," இந்த முறையில நாங்களே படிக்கிறதனால வரி வரியா படிச்சி பாடத்தப் புரிஞ்சிக்கிறோம். தெரியாத வார்த்தைக்கு எங்க டீச்சர் அர்த்தம் சொல்லுவாங்க. நாங்க குழுவுல கலந்து பேசும்போது ஒருத்தருக்கு தெரியாத கருத்த இன்னொருத்தர்கிட்டயிருந்து தெரிஞ்சிக்குவோம். நாங்க ஏ.எல்.எம். முறையில பாடம் படிக்கிறதுனால கேள்வி - பதில் படிக்கணுங்கிற அவசியம் இல்ல. தொகுத்து எழுதும்போது நாங்களே கேள்விய தயாரிக்கிறோம். அதுக்கான பதில் நாங்க தொகுத்ததுலயே இருக்கறதனால இன்னொரு வாட்டி படிக்கணுங்கிற அவசியமில்ல" என்றாள் அழகாக. எங்க வகுப்புல பொம்பள புள்ளைங்கதான் அதிகம். அவங்க கூட பேச கூச்சமா இருக்கும். இப்ப ஒரே குழுவுல இருக்குறதனால கூச்சமில்லாம பேசுறோம். யாரு அதிக மார்க் வாங்குறதுன்னு போட்டி போட்டு படிக்கிறோம்." என்று இந்தக் கல்வி முறையின் இன்னொரு அத்தியாயத்தை எடுத்து வைத்தான் மாணவன் பன்னீர்செல்வம். அனைவருக்கும் கல்வி இயக்க விருத்தாசலம் ஒன்றிய மேற்பார்வையாளர் அந்தோணிசாமி எருமனூர் பள்ளி பற்றி கூறும்போது, "நான் ஒவ்வொரு முறை விசிட் போகும்போதும் இந்த பள்ளியில நிறைய ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நடந்திருக்கும் .தலைமையாசிரியர் ஆசிரியர்களுக்கிடையில ஒற்றுமையான செயல்பாடுகள் இருக்கும். குறிப்பா கலைச்செல்வியோட வகுப்பு திருப்திகரமா இருக்கும். எருமனூர் பள்ளிய மாதிரி பள்ளியா தேர்ந்தெடுத்துருக்கோம்னா அது ஆசிரியர்களின் கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றி." என்று மனப்பூர்வமாகப் பாராட்டினார். நன்றி: அவள்விகடன்