தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, November 29, 2009

மாணவர்களின் வரைபடத் திறனை மதிப்பிடுதல்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறை செயல்பாடுகளை சுய மதிப்பீடு செய்துகொள்வதற்கு ஏற்ப செயல் ஆராய்ச்சி என்றொரு திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அதன் கீழ் இவ்வாண்டு நான் மேற்கொண்ட செயல் ஆய்வினை இங்கு வெளியிடுகிறேன்.தலைப்பு...

மாணவர்களின் வரைபடத் திறனை மதிப்பிடுதல்





முன்னுரை
தேர்வுகள் என்பவை மாணவர்களை மட்டும் மதிப்பிடுபவை அல்ல. அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களின் திறனையும் சேர்த்து தான் மதிப்பிடுகின்றன. ஓர் ஆசிரியர் எத்தகைய திறமை வாய்ந்தவராக இருப்பினும் அவரால் உருவாக்கப்படும் மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சியடைகின்றனர் என்பதைப் பொறுத்துதான் அவரது கற்பித்தல் பணி மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ஒரு கல்வியாண்டில் நடைபெறும் அனைத்துத் தேர்வு முடிவுகளும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏதேனும் ஒரு பாடத்தைக் கற்பிப்பதாகவே அமைந்து விடுகின்றன.
(2009 -10) நடப்புக் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு பாடத்திற்கான விடைத்தாளில் எளிதாகப் பெற வேண்டிய மதிப்பெண்ணைக் கூட மாணவர்கள் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து, அவற்றை நடைமுறைப் படுத்தி, முடிவுகளை எடுத்துக் கூறுவதாக இச்செயலாய்வு அமைந்திருக்கிறது.
ஆய்வுக்களம்
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு `அ’ பிரிவு மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் போது சமூகவியல் பாடத்தில் வரைபடத்திற்கு உரிய பத்து மதிப்பெண்களை முழுமையாக ஒருவர் கூட பெறவில்லை. அதற்கான காரணங்களைக் கண்டறிவதற்காக மாணவர்களிடம் உரையாடிய போது அவர்கள் பலவாறு தெரிவித்தனர். அவை தொகுக்கப்பட்டதோடு, அவர்கள் வரைபட வினாக்களில் செய்த தவறுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக வினாத்தாளில் வரைபடம் சார்ந்து கேட்கப்பட்ட வினாக்களைக் காண்போம்.
வினாத்தாளில் இடம் பெற்ற வரைபட வினாக்கள்
விருத்தாசலம் கல்விமாவட்ட அளவில் தயாரிக்கப்பட்டுள்ள (2009-10ஆம் கல்வியாண்டு) காலாண்டுத் தேர்வுக்கான ஆறாம் வகுப்பு சமூகவியல் வினாத்தாளில் 54ஆவது வினாவில் உலகப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. அவையாவன: பசுபிக் பெருங்கடல். ஆசியா, ஆப்ரிக்கா, வடஅமெரிக்கா, இந்தியா இவ்விடங்களைச் சரியாகக் குறித்தால் ஐந்து மதிப்பெண்கள்.
55ஆவது வினாவில் இந்தியப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.அவையாவன: வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப்பெருங்கடல், கொற்கை, வஞ்சி, இவ்விடங்களைச் சரியாகக் குறித்தால் ஐந்து மதிப்பெண்கள் ஆக மொத்தம் மாணவர்களின் வரைபடத்திறனுக்கு 10 மதிப்பெண்கள். ஆனால் யாரும் 10க்கு 10 மதிப்பெண் பெறவில்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் சில தவறுகளைச் செய்திருந்தனர்.
வரைபட வினாக்களில் மாணவர்கள் செய்த தவறுகள்
உலகப்படத்தில் ஒரு சில மாணவர்கள் கண்டங்களின் பெயர்களைக் கடல் பகுதியிலும், கடல்களின் பெயர்களைக் கண்டப்பகுதியிலும் குறிப்பிட்டிருந்தனர். ஒரு மாணவர் இந்தியப் படத்தில் குறிக்க வேண்டிய இடங்களை உலகப்படத்திலும், உலகப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்களை இந்தியப் படத்திலும் குறித்திருந்தார்.
பெரும்பாலான மாணவர்கள் கண்டங்களின் பெயர்களை மாற்றி மாற்றி குறித்திருந்தனர்.
மாணவர்களின் தவறுகளுக்கான காரணங்கள்
வரைபடத்தில் போதிய பயிற்சியளிக்கப்பட்டிருந்தும் மாணவர்கள் ஏன் இத்தகைய தவறுகளைச் செய்தனர் என்பது ஆராயப்பட்டது. தொடர் பயிற்சியும், வலுவூட்டலும் இன்மையால் இத்தகைய தவறுகளை மாணவர்கள் செய்திருக்கலாம் எனக் கருதியதோடு மாணவர்களிடம் கலந்துரையாடி தவறுகளுக்கான காரணங்கள் தொகுக்கப்பட்டன.
சமூக அறிவியல் வகுப்பின் போது மட்டுமே வரைபடத்தைப் பார்க்கும்வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது என்பது கண்டறியப்பட்டது.
கண்டங்களின் பெயர்கள் மட்டுமே நினைவில் உள்ளது. படத்தைப் பார்க்கும் போது கண்டங்களின் அமைவிடம் குழப்பம் விளைவிப்பதாக நான்கு மாணவர்கள் குறிப்பிட்டனர்.
கண்டங்கள் எவை? கடல்கள் எவை? என்பதில் குழப்பம் ஏற்படுவதாக இரண்டு மாணவர்கள் கூறினர்.
இந்திய வரைபடத்தில் அரபிக்கடல் எது, வங்காள விரிகுடா எது என்பதில் அடிக்கடி குழப்பம் ஏற்படுவதாக மூன்று மாணவர்கள் குறிப்பிட்டனர்.
மாணவர்கள் விடைகளுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை வரைபடங்களுக்குக் கொடுப்பதில்லை என்பது அவர்களின் கூற்றிலிருந்து உணர முடிந்தது.
வரைபடத்தின் அவசியத்தை மாணவர்கள் உணரவில்லை என்பதும் தெரியவில்லை.
வரைபட வினாக்களில் மாணவர்கள் செய்யும் தவறுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகள்
மேற்கண்ட தவறுகளைக் குறைப்பதற்கு முன்பு மாணவர்களிடம் வரைபடம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, வரைபடங்களின் அவசியம் குறித்து எடுத்துக் கூறலாம். நம் அன்றாட வாழ்வில் வரைபடங்கள் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பதை எடுத்துக் கூறலாம்.
உலக உருண்டை, வரைப்படங்கள், நிலப்படங்கள் ஆகியவற்றின் உதவியோடு முக்கிய நாடுகள், கண்டங்கள், கடல்கள், முக்கிய நகரங்கள் ஆகியவற்றின் அமைவிடங்களைக் காண்பித்து மாணவர்களை ஒவ்வொருவராகத் தனித்தனியே அழைத்து குறிப்பிட்ட பகுதியைக்காண்பிக்கும் படி கேட்கலாம். படிப்படியாக இது போன்ற பயிற்சிகளைசகமாணவர்களின் உதவியோடு குழுவாக மேற்கொள்ளச்செய்யலாம்.
வகுப்பறைச் சுவரில் வரைபடங்களை மாட்டி வைத்து மாணவர்களின்பார்வையில் படும்படிச் செய்வதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும்மறதியைத் தவிர்க்கலாம். வரைபடத்திற்கென தனிப் பயிற்சி ஏடுகளை மாணவர்களுக்கு வழங்கி செயல் முறைப் பயிற்சியளிக்கலாம்.வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்
முதலில் மாணவர்களுக்கு வரைபடத்தின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரைபடங்கள் நமக்கு எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பன பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது.
வரைபடத்தின் அவசியம்
வரைபடத் திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதன் மூலம் பாடக் கருத்துகளைக் கண்முன் காட்சிப் படுத்தி நினைவில் வைத்துக் கொள்ளலாம். ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் பற்றியும், நாட்டின், மாநிலத்தின் எல்லைகள், தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், முக்கிய சாலைகள் ஆகியவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு வரைபடங்கள் அவசியம் என்பது மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
வரைபடத்தின் பயன்கள்
இன்று வரைபடம் பல துறைகளிலும் பயன்படுகிறது. குறிப்பாக இராணுவத்துறையில் வரைபடத்தின் உதவியோடு தான் இடங்களை அடையாளம் காண்கின்றனர். சுற்றுலா செல்பவர்கள் புதிய இடங்களை வரைபடத்தின் உதவியோடு தெரிந்து கொள்கின்றனர். நேரில் செல்லாத பல உலக நாடுகளைப் பற்றியும் அந்நாட்டு இயற்கை அமைப்புகள் பற்றியும் வரைபடத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். என்பன போன்ற வரைபடத்தின் பயன்களை வலியுறுத்தும் கருத்துகள் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.வழங்கப்பட்ட பயிற்சிகள் மாணவர்களின் வரைபடத்திறனை மேம்படுத்தும் பொருட்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள கட்டகத்திலுள்ள (வரைபடத்திறன் தெரிந்து கொள்வோமா?) அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
* கண்டங்கள், நாடுகள், மாநிலங்கள் ஆகியவற்றின் வடிவங்களை உற்று நோக்கி எவை ஒத்தவை என்று கண்டறிந்து பெயர்களை எழுதுதல்.
* திசைகளறியும் பயிற்சியாக பல்வேறு திசைகளை நோக்கி அம்புக்குறிகள் வரைந்து, அம்புக் குறிகள் காட்டும் திசையைக் கூறச்செய்தல்.
* அட்சக்கோடுகள், தீர்க்கக் கோடுகளைக் கொண்டு நாடுகளின் அமைவிடங்களைக் கூறும் முறையைக் கற்பித்தல்மேற்கண்ட பயிற்சிகள் மூலம் மாணவர்கள் வரைபடங்களில் திசைகள், அளவுகள், நாடுகளின் அமைவிடங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டனர்.
மேலும் வரைபடங்கள், நிலப்படங்கள், உலக உருண்டை ஆகியவற்றைக் கொண்டு தொடர் பயிற்சியளிக்கப்பட்டது. ஒரு வாரகாலப் பயிற்சிக்குப் பிறகு மாணவர்களின் வரைபடத்திறன் சோதிக்கப்பட்டது.
அத்தேர்வில் போதிய முன்னேற்றம் காணப்பட்டது. காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் வரைபட வினாக்களில் பெற்ற மதிப்பெண்களைத் தொடர் வலுவூட்டல் பயிற்சிக்குப்பிறகு பெற்ற மதிப்பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இது உணரப்பட்டது.தொடர் நடவடிக்கை
மாணவர்களுக்கு அவர்களின் குழுத் தலைவர்கள் மூலம் தொடர் பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது. இதுபோல் பிற வகுப்புகளிலும் வரைபடத் திறன் குறைந்த மாணவர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி வழங்குமாறு தொடர்புடைய ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பிற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவைப்படுகிறபோது வரைபடங்களைப் பயன்படுத்திட வேண்டுமாய் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்தந்த வகுப்பறையில் உலக, இந்திய வரைபடங்களை மாணவர்களின் பார்வையில் படுமாறு மாட்டி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முடிவுரை
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பொன் மொழிக்கு எடுத்துக்காட்டாக இச்செயலாய்வு முடிவு அமைந்துள்ளது. மாணவப் பருவம் விளையாட்டுப் பருவம் எதையும் உடனுக்குடன் மறந்து விடுவது அவர்களின் இயல்பு எனவே தொடர்பயிற்சியின் மூலம் வலுவூட்டி அவர்களின் மனத்திலிறுத்தினால் கற்றல் செயல்பாடு வெற்றி அடையும் என்பதை இச்செயலாய்வு முடிவு எடுத்துக்காட்டுகிறது.
போதிய வலுவூட்டலின்மையால் தேர்வில் எளிதாகப் பெறவேண்டிய பத்து மதிப்பெண்களை மாணவர்கள் இழக்க நேரிடுகிறது என்பதால் இச்செயலாய்வு முடிவு (உயர்தொடக்க வகுப்புகளுக்குக் கற்பிக்கும்) அனைத்து ஆசிரியர்களுக்கும் எடுத்துக் கூறப்பட்டு அதன் விளைவாக அவர்களும் மாணவர்களுக்கு வரைபடத் திறனை வலுவூட்டிவருகின்றனர்.

Saturday, November 28, 2009

நிகழ்வுகள்

நான் கடந்த சில ஆண்டுகளில் பங்கேற்ற நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே பதிவுசெய்கிறேன்.





09-11-2009 அன்று விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழாவில்.
01-08-2008 அன்று பட்டிமன்ற நடுவர் நவஜோதி அவர்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் பங்கேற்றபோது எடுத்த படம்.


01-04-2009 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற விழாவில் கவிஞர் லலித்குமாருக்கு இனம் காத்த இளம் தமிழர் விருது வழங்கியபோது.


2004 சனவரி 02-07 வரை புதுடெல்லியில் நடைபெற்ற உலகக் கதைத் திருவிழாவில் பங்கேற்றபோது



26-02-2009 அன்று கவிஞர் அறிவுமதி அவர்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் பங்கேற்றபோது எடுத்த படம்.




15-01-2009 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில்





14-01-2009 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு எழுச்சி விழாவில் ஆழி இலக்கிய இதழை வெளியிட்டபோது.






14-12-2008 இல் சென்னையில் லீ ராயல் மெரிடியன் விடுதியில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் ஆசிரியர் மாநாட்டில் பங்கேற்றபோது எடுத்த படம்.






நிகழ்வுகள்


16-10-2008 அன்று முனைவர் நன்னன் அவர்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் பங்கேற்றபோது எடுத்த படம்

Friday, November 27, 2009

இலக்கிய மன்றத் தொடக்க விழா











விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கியமன்றத் தொடக்க விழா 27-11-2009 அன்று மாலை நடைபெற்றது. கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி இலக்கிய மன்னத்தைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார். பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டுவதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உருவா 10 இலட்சம் வழங்குவதாக அறிவித்தார்.




மாணவர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியை தமிழாசிரியர் கலையரசி ஒருங்கிணைத்து சிறப்பாக நிகழ்த்தினார் தேசியமாணவர்படை,நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் பாதுகாப்பு வரவேற்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர். கல்விக்குழு தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் பிரகாசம் வரவேற்க உதவி தலைமை ஆசிரியர்கள் குமுதம், வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கென்னடி,மாப்பிள்ளை மொய்தீன், நீதிராஜன்,கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இலக்கியமன்ற செயலராகிய நான் நன்றி கூற விழா நிறைவுற்றது.

Saturday, November 7, 2009

பன்னாட்டு நாட்டுப்புறவியல் கருத்தரங்கம்




திசம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகமும் திராவிட பல்கலைக்கழகமும் இணைந்து பன்னாட்டு நாட்டுப்புறவியல் கருத்தரங்கினை நடத்த உள்ளன. ஆந்திர மாநிலம் குப்பம் திராவிட பல்கலைக்கழகத்தில் நடைபெறும்
இக்கருத்தரங்கின் மையப் பொருள்கள்:
1.மரபுவழி அறிவு முறை
2.சடங்கு நிகழ்த்து மரபுகள்
3.நாட்டுப்புறவியல் பயன்பாடு
நாட்டுப்புறவியல் சார்ந்த பிற தலைப்புகளிலும் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கலாம்.கட்டுரை அனுப்பக் கடைசிநாள்:10-12-2009பதிவு செய்திடக் கடைசி நாள் :30-11-2009பதிவுக்கட்டணம் : ரூ.500.(வாழ்நாள் உறுப்பினர்களுக்கு ரூ.300.மாணவப் பேராளர்களுக்கு ரூ.400.)
பதிவுக்கட்டணம் அனுப்ப வேண்டிய முகவரி:Dr.P.Doctor Nazeemdeen,Treasurer,FOSSILS,Senior Fellow,Beschie Chair for Tamil studies,Sri Krishnadevaraya Silpavani, Dravidan University,Kuppam-517 425.(DD drawn on any Nationalised Bank payable at Kuppam in favour of Treasurer,FOSSILS.)
கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி:Dr.B.Krishna Reddy,Organising seceretary of InterNational Folklore conference, Department of Folklore and Traibal Studies, Dravidan University, Srinivasavanam,Kuppam-517 425,e.mail: battenakr56@yahoo.co.in
Cell: 91 9441080736.
கருத்தரங்கில் ஒளிப்பட,காணொளி கண்காட்சிகளும் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்புபவர்கள் முன்னரே தகவல் தருதல் நல்லது.இணையத்தில் பதிவு செய்ய: fossils09@gmail.com

Thursday, November 5, 2009

உலகம் சுற்றும் தமிழ்

அயலகத்தமிழறிஞர்கள்
மு.இளங்கோவன்
வயல்வெளிப் பதிப்பகம்இடைக்கட்டுஉள்கோட்டைகங்கைகொண்டசோழபுரம்- 612 901.பக்கம்:200விலை: ரூ.200


அறிவியல் துறை அறிஞர்களின் பணி வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அளவுக்கு மொழியறிஞர்களின் பணி அறிமுகப்படுத்தப்படவில்லை. அதிலும் குறிப்பாகத் தமிழ் அறிஞர்கள் அம் மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய ஆக்கப்பூர்வமான பணிகள் பொது வாசகர்களுக்கும் மாணவர் உலகுக்கும் முறையாக அறிமுகப்படுத்தப்படவில்லை.இக்குறையைப் போக்கியிருக்கிறார் புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் 'அயலகத்தமிழறிஞர்கள்' என்னும் நூலின் வாயிலாக. உலகத்தமிழறிஞர்களை உலகத்தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறது இந்நூல். தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான களஞ்சியம் இதழில் இருபத்தைந்து வாரங்கள் தொடராக வெளி வந்து வாசகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளோடு மேலும் ஐந்து கட்டுரைகள் சேர்க்கப்பட்டு முப்பது தமிழறிஞர்கள், அவர்தம் பணிகள் பற்றிய அரிய செய்திகளை தமக்குள்ள உலாகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி சேகரித்து நூலாக்கியுள்ள இளங்கோவனின் முயற்சி பாராட்டப்படவேண்டியது. இத்தொடரை வெளியிடுவதற்குப் பெரிதும் துணைநின்ற களஞ்சியம் பொறுப்பாசிரியர் யாணனின் பங்கு வெளியுலகம் அறியாதது. நம் தமிழ்மொழி உலகெங்கும் பரவுவதற்கு பல்வேறு நாடுகளிலுள்ள அயல் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் எவ்வாறெல்லாம் பங்களித்திருக்கின்றனர் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்கூறுவதாக அமைந்திருப்பது இந்நூலின் கூடுதல் சிறப்பு. வெறும் தகவல்களாகமட்டும் வரண்டுவிடாமல் படிப்போர் மனத்தில் தமிழுணர்வு ஏற்படும்படி சுவையான பல கூடுதல் தகவல்களையும் அளித்து வாசிப்புத் தன்மையுள்ள நூலாக்கியிருப்பது நூலாசிரியரின் தனித்திறன். உலகக் கல்விப் புலங்களோடு ஒப்பிடுகையில் துறை சார்ந்த செய்திகளை ஆவணப்படுத்துகின்ற வழக்கம் தமிழ்நாட்டுக் கல்விப்புலங்களில் குறைவாகவே உள்ளது.நம் கல்வி நிறுவனங்கள் குறிப்பாகப் பல்கலைக் கழகங்கள் ஆற்ற வேண்டிய பல பணிகளை தனிநபர்கள் பலர் வெற்றிகரமாக நிகழ்த்தி வருகின்றனர்.அந்த வரிசையில் நண்பர் இளங்கோவனின் இப்பணியும் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று. தன்னால் இயன்ற வரை தகவல்களைப் பல்வேறு சிரமங்களுக்கிடையிலே தொகுத்தளித்ததோடு நடுநிலையாகவும் செய்திகளை அளித்திருப்பதாக்கூறுகிறார்.நூலாசிரியரின் விமர்சனப்பார்வையைத் தவிர்த்திருக்கிறார். இது இன்றுள்ள இலக்கிய அரசியலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்கிற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருக்கலாம். எப்படியிருப்பினும் இளங்கோவனின் இம்முயற்சித் தமிழ் உலகம் போற்றி வரவேற்கத்தகுந்தது. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற விருக்கின்ற இன்றைய சூழலில் இந்த நூல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.இளங்கோவனின் முயற்சி ஒரு தொடக்கம்தான் இதனைத் தொடர்ந்து இந்தூலில் விடுபட்டுள்ள அறிஞர்களை, அவர்தம் பணிகளை நூலாக்க முயற்சி மேற்கொள்ளலாம். தமிழ் மொழி , தமிழறிஞர்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்குக் கையேடாக இந்நூல் திகழும். ஆய்வு மாணவர்களுக்கும் பயன்தரத் தக்க நூலாக இது அமையும்.வடிவமைப்பும் அச்சமைப்பும் நேர்த்தியாக அமைந்துள்ளன.பள்ளி,கல்லூரி,பல்கலைக்கழக நூலகங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டிய நூலிது. நன்றி: அம்ருதா நவம்பர்-2009
http://mankavuchi.blogspot.com/