தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, December 30, 2009

அஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை





விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் பதிவாகியுள்ளது. அவரைப்பற்றி ஆய்வு செய்துள்ள கடலூர் ஆசிரியை விஜயலட்சுமி இக்குறிப்புகளை சட்டமன்ற அலுவலகத்தில் பெற்றுள்ளார். அவர் அக்குறிப்புகளை அஞ்சலையம்மாளின் மகன் திரு ஜெயவீரன் அவர்களிடம் கொடுத்திருந்தார் நான் திரு. ஜெயவீரன் அவர்களிடமிருந்து பெற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்பதால் இங்கே பட வடிவில் வெளியிடுகிறேன். இதற்கு உதவியவர் அஞ்சலையம்மாளின் மகன் வழிப் பெயரன் திரு. அருணகிரி இவர்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றிகூற கடமைப் பட்டுள்ளேன்.

Saturday, December 26, 2009

பூங்காக்களில் புத்தகம்


பூங்காக்களில் புத்தகம் என்ற திட்டத்தை நூலகத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி விருத்தாசலம் பெரியார் நகர் பூங்காவில் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் விருத்தாசலம் கிளை நூலகரோடு ஊழியர்களும் பங்கேற்ற நிகழ்ச்சி 26-12-2009 இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் சபாநாயகம், பதிப்பாளர் மருதம் ராஜேந்திரன், கவிஞர் பட்டி செங்குட்டுவன், நானும் சில பள்ளி மாணவர்களோடு பொதுமக்களும் கலந்து கொணடனர். அ.க.பெருமாள் எழுதி மருதம் பதிப்பகம் வெளியிட்டுள்ள படிக்கக்கேட்ட கதைகள் நூலை எழுத்தாளர் சபாநாயகம் வழங்க நூலகர் பெற்றுக்கொண்டார்.எனது நூல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன நிகழ்ச்சி சரியாக ஏற்பாடு செய்யப்படாமையால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் வெறும் சடங்காக மட்டுமே நிகழ்ந்தது.
நிகழ்வு

Tuesday, December 22, 2009

புதுவையில் ஒளி ஓவியப் பயிலரங்கு






புதுவை ஒளிப்படக்கலைஞர்கள் இணைந்து இளம்
ஒளி ஓவியர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு
ஒன்றினை எக்சிகியூடிவ் இன் விடுதியில் ஏற்பாடு
செய்திருந்தனர். ஒளிப்படக் கலைஞர்கள்
முருகன், சரவணன், ராஜேஷ், சுரேஷ் ஆகியோர் மிகச்சிறப்பாக
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். புகழ் பெற்ற ஒளிப்படக்கலைஞர்
நெய்வேலி ஜான்பாஸ்கோ டிஜிடல் கேமிராவில் தெரிந்துகொள்ள வேண்டிய
அடிப்படை நுணுக்கங்களைப் பயிற்றுவித்தார்
ஒளி ஓவியர் மோகன் படத்தை ஒளியால் மெருகூட்டுவதற்கான
நுட்பங்களைப் பயிற்றுவித்தார். ஒளிப்படக்கலையில் 40 ஆண்டு
அனுபவமுடைய மூத்த கலைஞர் ஆசிரியர் விவேகானந்தன்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து ஒளிப்படக் கலைஞர்கள்
25 பேர் கலந்துகொண்டனர். நானும் பார்வையாளனாகக் கலந்துகொண்டு
படம் பிடிப்பதற்கான சில நுட்பங்களைக் கற்று வந்தேன்.
ஈடுபாட்டு உணர்வோடு அனவரும் பங்கேற்று பயிலரங்கை வெற்றியடையச்
செய்தனர். புதுச்சேரி ஒளி ஓவிர்கள் மன்றம் என்ற பெயரில் தொடர்ந்து இயங்குவது
என முடிவெடுக்கப் பட்டது. ஒளிப்படப்போட்டிகள் நடத்துவது என்றும் முடிவுசெய்துள்ளனர்.
அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம்.

Saturday, December 19, 2009

புதிய வலைப்பதிவு

என் புதிய வலைப்பதிவைக்காண இங்கே சொடுக்குக

Monday, December 14, 2009

பன்னாட்டு நாட்டுப்புறவியல் கருத்தரங்கம் ஒத்திவைப்பு

திசம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகமும் திராவிட பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தவிருந்த பன்னாட்டு நாட்டுப்புறவியல் கருத்தரங்கு சனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை தொடர்பாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் காரணமாக இக்கருத்தரங்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இத் தகவலைக் கருத்தரங்க அமைப்புச்செயலர் முனைவர் கிருட்டிணாரெட்டி அவர்களிடம் அலைபேசியில் தொடர்புவொண்டு இன்று காலை உறுதி செய்தேன்.

Sunday, December 13, 2009

அவர்களும் இவர்களும் படத்தொடக்கவிழா








அவர்களும் இவர்களும் படத்தொடக்கவிழா விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் இன்று காலை நடைபெற்றது.தயாரிப்பு: கேப்டன் சி.காமராஜ், புத்தூர் க.திருமாறன்.இயக்கம்: வீரபாண்டியன்.ஒளிப்பதிவு: செங்குட்டுவன்நாயகர்கள் : விமல் நடராஜன், சதீஷ்.நாயகி : ஐஸ்வர்யாவிழாவில் இயக்குநர்கள் சுந்தரன், ஸெல்வன், விருத்தாசலம் நகர்மன்றத்தலைவர் வ.க.முருகன், கவிஞர் ஆறு. இளங்கோவன், ஆதித்யாசெல்வம், தங்க வெங்கடேசன், உத்த.இராமச்சந்திரன் ஆகியோரோடு நானும் கலந்துகொண்டேன்.நேற்றே நண்பர் திருமாறன் அழைத்திருந்தார்.படம் வெற்றிபெற வாழ்த்துவோம்.

Sunday, December 6, 2009

ஊற்றுக்கண்கள்

சுட்டெரிக்கும் கோடையிலும்கூட
திருமுட்டம் செல்லும்போதெல்லாம்
வெள்ளாற்றின் தென்கரையில் பார்த்திருக்கிறோம்
ஓடி வரும் ஊற்று நீரை

கால்நடைகளின் உறும நேர உயிர்த்தண்ணீர் அது!
பீக் கருவை அடம்பினுள்ளிருக்கும்
அதன் ஆதி தேடி தாகம் தணிப்பர் ஆடு மேய்க்கும் சிறுவர்
அதைச் சேகரித்தே கல்லறுத்து
காளவாய் அமைத்தாராம் கள்ளிப்பாடியில் ஒருவர்

ஆற்றுக்குள்ளிறங்கும் எவரும்
அதில் கால் நனைத்தே கடந்து போக வேண்டும்

கோட்டூர் ஆலைக்கு
குறுக்கு வழியில்
கரும்பேற்றிச்செல்வதற்கு அமைத்த
சாலைச் செம்மண் குருடாக்கித் தொலைத்தது
ஆற்றோர ஊற்றுக் கண்களை.

Tuesday, December 1, 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம்

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம் 2010, மேத் திங்கள் 15,16(காரி,ஞாயிறு)கிழமைகளில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.பேராசிரியர் சபாபதி மோகன் அவர்கள்(துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) புரவலராக இருந்து இந்தக் கருத்தரங்கை நடத்த உள்ளார்.
பல்கலைக்கழகம்,கல்லூரிகள்,நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மட்டும் பேராளர்களாகக் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்கலாம்.
பதிவுக்கட்டணம்
பேராளர் பதிவுக்கட்டணம் உருவா 500-00
உடன் வரும் விருந்தினர் கட்டணம் உருவா 150-00
கட்டணங்களை
ALL INDIA UNIVERSITY TAMIL TEACHERS ASSOCIATION,MADURAI-625 020என்னும் முகவரியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக அனுப்ப வேண்டும்.
கட்டுரை 5 பக்க அளவில் இருத்தல் வேண்டும்.
இலக்கியவியல்,இலக்கணவியல்,சமயவியல்,பண்பாட்டியல்/வரலாற்றியல் இக்கால இலக்கியம்,பல்துறை இயல் என்ற பிரிவுகளில் அமைத்தல் நலம்.
கட்டுரை,கட்டணம் இரண்டையும் சேர்த்து விடுத்து வைக்க நிறைவுநாள் 31.12.2009
பேராளர்களுள் நூலாசிரியர்கள் இருப்பின் அவர்கள் 2009 சனவரி-திசம்பர் காலத்தில் நூல் எழுதியிருப்பின் நூலாசிரியர் வாழ்க்கைக்குறிப்பு,
நூற்படி 2,பதிவுக்கட்டணம் 25 ஆகியவற்றைச் செயலர் முகவரிக்கு 31.01.2010 நாளுக்குள் அனுப்பவேண்டும்.நூலாசிரியர்கள் விழா அரங்கில் சிறப்புச் செய்யப்பெறுவர்.
தொடர்பு முகவரி:முனைவர் மு.மணிவேல்செயலர்,
.ப.த.மன்றம்,
தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை-625 0௨0
நன்றி: http://muelangovan.blogspot.com/