தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, January 25, 2010

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்




கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற உள்ளது.
தொடக்கவிழாவில் வரவேற்புரை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் காந்திமதி.
அறுமுக உரை முனைவர் பரிமளம், தலைமை முனைவர் கே.எம்.சின்னதுரை, சிறப்புரை முனைவர் சி.மா.இரவிச்சந்திரன், நன்றியுரை பேராசிரியர் கமலா.
வல்லாளர் அமர்வில் முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் இரத்தின.புகழேந்தி, முனைவர் மா.கிருபாகரன் ஆகியோர் கட்டுடரை அளிக்கின்றனர். இணை அமர்வுகள் முனைவர் செல்வி, முனைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெறுகின்றன.
மாலையில் முனைவர் எழிலவன், முனைவர் பத்மாவதி, முனைவர் பிரான்சிஸ் சேவியர், முனைவர் இரவி, முனைவர் லட்சுமி, முனைவர் டாக்டர் நசீம்தீன் ஆகியோர் வல்லாளர் அமர்வில் கட்டுரை அளிக்கின்றனர். பேராசிரியர்கள் கமலா, கந்தசுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் கட்டுரை அமர்வுகள் நடைபெறுகின்றன.
நிறைவு விழாவில் பேராசிரியர் ஜோதிலதா வரவேற்க முனைவர் சீலா ராமச்சந்திரன் தலைமையில் முனைவர் ஆறு.இராமநாதன் சிறப்புரையாற்ற கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. பரிமளம் நன்றி கூறுகிறார்.

Saturday, January 16, 2010

பிச்சாவரத்தில் ஓர் ஓவியக் கண்காட்சி






ஓவியர் தமிழரசன் ஈரநிலம் அறக்கட்டளையின் மூலம் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டி தமிழக அளவில் ஓவியக்கண்காட்சி நடத்தி வருகிறார். 2010 சனவரி 1 ஆம் நாள் கன்னியாகுமரியில் தொடங்கி 16 ஆம் தேதியான இன்று கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் இக் கண்காட்சி நடைபெற்றது.இது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இன்று கண்காட்சியை கவிஞர் அறிவுமதி தொடக்கி வைத்தார். கிள்ளை ஊராட்சித் தலைவர் இரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், ஆறு.இளங்கோவன், ரெங்கப்பிள்ளை, பிரதீப் ஆகியோர் சென்றிருந்தோம். காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியங்கள் பல காண்போரின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருந்தன. தாயின் வயிற்றில் கருவைக் காப்பது போல் நாம் இந்த உலகைக் காக்கவேண்டும் என்னும் சிந்தனையை ஒரு படமும் பசுங்காடுகள்தான் இவ்வுலகைக் காக்கும் பாதுகாப்பு அரண்கள் எனபதை ஒரு படமும் நமக்கு உணர்த்தின.

சுற்றுலாத் துறையினர் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். சிதம்பரம் மாலைக் கட்டித்தெரு பள்ளி மாணவர்களும் பிரம்பகுமாரிகள் இயக்கமும் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்தினர்.சூழல் சுற்றுலா மையமாக பிச்சாவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அத்துறை செயலர் இறையன்பு அவர்களின் முயற்சி. இதனை விழாவில் பேசியபோது அண்ணன் அறிவுமதி பாராட்டினார்.

படகில் சுரபுன்னைக் காடுகளின் ஊடாக பயணித்து பறவைகளைக்கண்டு மகிழ்ந்து ரசித்தபடி திரும்பினோம்.

Friday, January 15, 2010

திருவள்ளுவர் நாள் விழா



அரசு பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரி விடுதி வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஆண்டுதோறும் இதே நாளில் ஆர்வலர்களைத் திரட்டி மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார் பாவேந்தர்பேரவை இலக்கிய அமைப்பின் நிறுவனர் ஓவியர் மோகன். இரண்டு நாட்களுக்கு முன்பே பள்ளிக்கு வந்து தகவலைக்கூறி அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அழைத்தார். இன்று காலையும் தொலைபேசில் நினைவூட்டினார். நானும் நண்பர் ரமேசுபாபுவும் சென்றோம். எதிர்பாராத விதமாக நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க என்னை அழைத்தார். வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பூமாலை குமாரசாமி, அரசியல் கட்சி பிரமுகர்கள், அமிர்தராசு, சிவா, ஆனந்தபாரதி, ஓவிர்கள் ரகு, ராசேந்திரன், வேலு, மணிகண்டன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நகரிலிருந்து தொலைவில் சிலை அமைந்திருப்பதால் பலரால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை, எனவே நாம் ஒன்றிணைந்து நகரின் மையத்தில் ஒரு சிலை அமைக்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் கலந்துகொள்பவர்கள் பேசுவதுண்டு. ஆனால் அதோடு மறந்து விடுவோம். இந்தமுறை சிலை அமைக்கும் செலவுக்காக 1001 உருவாயைத் தருவதாக வழக்கறிஞர் சந்திரசேகரன் கூற பூமாலை சண்முகம் 5000 ரூ தருவதாக் கூற கூட்டத்திற்கு வந்திருந்த ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு தொகையை அறிவிக்க 15000 ரூ சேர்ந்தது. இதை வசூலித்து சிலை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

Thursday, January 14, 2010

தை அய்ந்தாவது இதழ்




தை அய்ந்தாவது இதழ் வெளியாகியுள்ளது. ஆசிரியர்: கவிஞர் அறிவுமதி, நூலாக்கம் : கவிஞர் பழநிபாரதி, நூலழகு : ஆர்.சி.மதிராஜ், வெளியீடு : சாரல், 189, அபிபுல்லா சாலை, தியாகராயநகர், சென்னை- 600 017. arivumathi@hotmail.com பேச: 9940221800.

விற்பனை உரிமை : தமிழ் அலை, 1- காவலர் குறுந்தெரு, சைதாப்பேட்டை, சென்னை-600 015. tamilalai@gmail.com , பேச: 9786218777.

நூல் கிடைக்குமிடம் : தணல் பதிப்பகம், சென்னை- 14. பேச: 9445428375.

கவிதைகளோடு கவிஞர்களையும் அழகு செய்வதாக 160 பக்கங்களில் மிகச் சிறப்பாக இதழ் வந்துள்ளது. அண்ணன் அறிவுமதி அவர்களின் அழகுணர்வு இதழின் ஒவ்வொரு பக்கங்களிலும் மின்னுகிறது.

புதைந்த
உதிரக்கொடிகளின் மீது
பொழிந்த மழையில்
புத்துயிர்ப்பின் முதல் அடையாளமாய்
முளைத்துக்கொண்டிருக்கின்றன
பசும் புல்லும்
எம் சொல்லும்.

என்னும் இன்குலாப்பின் கவிதை அட்டையை அழகு செய்ய மலர்கிறது கவிதைத் தை

தையில் வந்த என் கவிதை இதோ.

ஆதி வாழ்க்கை

நுழைந்ததும்
குரைத்து வரவேற்கும்
நாய்
முற்றத்தில்

வரவேற்பறையில்
எலியின் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
பூனை

கூடு பின்னிக்கொண்டிருக்கும்
சிலந்திகளைத் துரத்தி
வேட்டையாடும்
பல்லிகள் நிறைந்த
கூடம்

கழிவு நீர்க் குழாய்
வழியாக உள்ளே வந்து
தானியங்களைத் தேடி
சமையலறையில் அலையும்
எலிகள்

அழுக்குத்துணிகளிடம்
அடைக்கலம் தேடி
படுக்கையறைக்கு வந்துவிடுகின்றன
கரப்பான் பூச்சிகள்

கழிவறை ஈரத்தில்
அடைந்து கிடக்கும்
தவளைகள் எழுப்பும்
ஒலி கேட்டு
அவ்வப்போது
வந்து போகின்றன
பாம்புகளும்

தோட்டத்து முக்கனிகளைப்
பதம் பார்க்கும்
குரங்குகள்

நகரத்தில்
அமைந்திருந்தாலும்
இயற்கையோடு இயைந்ததுதான்
எங்கள் வாழ்வும்.

Wednesday, January 13, 2010

இளவேனேல் பிறந்தநாள் விழா




என் மகன் இளவேனிலுக்கு இது 10 ஆவது பிறந்த நாள் விழா. பத்து வயது முடிந்து 11 வயது தொடங்குகிறது. என் அண்ணன் மகன் கார்க்கியும் அவன் நண்பன் ரெங்கனாதனும் பரிசுகளோடு வந்து பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். இளவேனில் என்ன சட்டை வேண்டும், என்ன இனிப்பு வேண்டும், கேக் எப்படி அமைய வேண்டும் என்பதையெல்லாம் முன்பே முடிவு செய்துவிட்டான்.அதன்படிதான் எல்லாம் நடந்தேறியது. குழந்தைகள் என்ன நினைக்கிறார்களோ அதை நிறைவேற்றுவதுதானே பெற்றோரின் வேலை. அந்த வகையில் இளவேனிலுக்கு இது மகிழ்ச்சியான பிறந்த நாளாகக் கழிந்தது. இன்று அவன் எதிர்பார்த்தபடி யாரும் அவனைத் திட்டவில்லை. ஒரு நாளாவது அவனுக்கு படிப்பைப் பற்றி நினைக்காமல் இருப்பதற்கு இந்த பிறந்தநாள் உதவியது. தினமும் பிறந்த நாளாக இருக்கக் கூடாதா?...
என்ற ஏக்கத்தோடு தூங்கிப் போனான்.

Monday, January 4, 2010

திரு.வி.க. விருது பெற்ற எழுத்தாளர் இமையம்



எழுத்தாளர் இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு திரு.வி.க. விருது கொடுத்து மரியாதை செய்துள்ளது. வயதான காலத்தில் விருது கொடுப்பதைவிட இது போல் இளம் வயது எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள் பயன் தரும்.

கடலூர் மாவட்டம் கழுதூரில் பிறந்த இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. பெற்றோர் வெங்கட்டன், சின்னம்மாள்.ஆசிரியராகப்பணியாற்றும் இமையம் இதுவரை மூன்று புதினங்களும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். 1994 இல் வெளியான கோவேறுகழுதைகள் தமிழின் முக்கியமான புதினங்களுள் ஒன்று. இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புதிரைவண்ணார் சமூக மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டும் இப்புதினம் பரவலாக பேசப்பட்டது, விவாதங்களுக்கு உள்ளானது.இவரின் நூல்கள் அனைத்தையும் க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

1999 இல் வெளிவந்த ஆறுமுகம் புதினம் கதா பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மூன்றாவது புதினமான செடல் 2006 இல் வெளிவந்தது. மண்பாரம் சிறுகதைத் தொகுப்பு 2004 ஆம் ஆண்டும், வீடியோமாரியம்மன் சிறுகதைத் தொகுப்பு 2008 ஆம் ஆண்டும் வெளியாயின.

அக்னிஅக்சரா விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, அமுதனடிகள் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசின் பண்பாட்டுத்துறை 2002 ஆம் ஆண்டு இளநிலை ஆய்வு நல்கை இவருக்கு வழங்கியுள்ளது.

விருத்தாசலத்தில் வசித்துவரும் இவரைத் தொடர்பு கொள்ள, இமையம், முத்தமிழ் தெரு, பெரியார் நகர் தெற்கு, விருத்தாசலம்-606 001, பேச : 9865417399, மின்மடல் : imayam.annamalai@gmail.com

நண்பர் இமையம் மேலும் சிறந்த படைப்புகளை வெளியிட்டு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்த வாழ்த்துவோம்.