தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, April 23, 2010

உலகப் புத்தக நாள்


உலகப் புத்தக நாள் என்பது யுனெஸ்கோ நிறுவனத்தின் தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று புத்தகம் தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகக் கடைப்பிடிக்கப்படும் சிறப்பு நாளாகும்.


பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"

ஷேக்ஸ்பியரின் பிறந்ததினமான ஏப்ரல் 23 அன்று உலகப்புத்தக தினம் கடைப்பிடிக்கப்படுவதை பொருத்தமானதாகக் யுனெஸ்கோ மாநாடு கருதியது. ஷேக்ஸ்பியர் மறைந்த தினமும், செர்வான்டிஸ், இன்கா போன்ற இலக்கியவாதிகள் மறைந்த தினமும் இதுதான்.

விருத்தாசலம் கிளை நூலகத்தில் வாசகர்களும் நூலக அலுவலர்களும் படைப்பளிகளும் இணைந்து புத்தக நாள் விழாவை நிகழ்த்தினோம்.
நன்றி:http://ta.wikipedia.org/

Saturday, April 17, 2010

காட்சி வடிவில் நெடு நல் வாடை






பகை முடிப்பதற்காக போர் மேற் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு ஒரு பொழுது ஓர் ஊழிக்காலமாகத் தோன்றுவதால் வாடைக்காலம் தலைவியைப் பொறுத்த வரை நெடிய வாடையாய் உள்ளது. இன்பத்தில் ஈடுபடாமல் வேற்று நாட்டிற்குச் சென்று, பாசறைக்கண் தங்கி, வினைபுரியும் தலைவனுக்கு, வாடை, நல்ல வாடையாய் உள்ளது. இவ்விரு நிலைகளையும் உணர்த்துவதால் இப்பாடல் நெடு நல் வாடை எனப்பட்டது.
188 அடிகளைக்கொண்ட இந்நூலை மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன் இயற்றினார். இன்று இதனைப்படிப்பவர்களுக்கு பொருள் விளங்குவது கடினம்.
இந்நூலில் மனை வகுத்த முறை, கோபுர வாயில், முற்றம் முன் வாயில், அந்தப்புறத்தின் அமைப்பு, கட்டில், கட்டில் மேலமைந்த படுக்கை எனத் தொழிலியல் சார்ந்த பல நுட்பமான செய்திகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.
இவற்றை மனதிற்கொண்டு நெடு நல் வாடையை 96 படங்களாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன். இராதாகிருட்ணன் என்ற பெயரைத் தமிழில் மாற்றிக்கொண்டதோடு தன் மகனுக்கும் மெய்ம்மன் தெந்நா எனப்பெயர் சூட்டியுள்ளார்.
சென்னை கவின்கலைக் கல்லூரியில் மரபுக் கட்டடக்கலை படித்த இவர் தமிழர்களின் மரபுப்படி கட்டடங்களை அமைத்துத் தருவதில் ஆர்வமாக ஈடுபட்டு வருபவர். அது குறித்து நூலும் வெளியிட்டுள்ளார். நெடு நல் வாடையை முதலில் காட்சிப் படுத்தியதற்குக் காரணமும் அதிலுள்ள தொழில் சார் செய்திகள்தான் என்கிறார்.
சங்க இலக்கியங்கள் முழுவதையும் ஓவியங்களாக வரையத் திட்டமிட்டுள்ள இவர் தனித் தமிழில் பேசும் இயல்புடையவர். தன் மகனை சிறு வயதிலேயே சங்க இலங்கியங்களைப் படிக்க வைத்து வருகிறார் அவருக்காகத்தான் இந்த ஓவிய முயற்சி என்று மகிழவோடு தெரிவித்தார்.
பருவம் பொய்க்காமல் உரிய காலத்தில் மழையைத் தரும் மேகங்கள், தாங்கள் கிடந்த மலைப்பகுதியை வலமாக சூழ்ந்து மேலெழுந்தன என்ற பொருளிலமைந்த
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

என்னும் முதல் பாடல் தொடங்கி இறுதிக் காட்சிகளை விளக்கும் அனைவரும் உறங்கும் யாமப் பொழுதிலும், துயில் கொள்ளச் செல்லாமல், பாசறையில் சிலரொடு உலவியவாறு அரசன் கடமையுணர்வினனாய் விளங்கியமையால், வாடை, அவனுக்குத் துயரைத் தராமல் நன்மையைத் தருவதாயிற்று என்னும் ஈற்றுப் பாடலான
நள்ளென் யாமத்து பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே

என்ற பாடல் முடிய 96 ஓவியங்களும் நம்மை சங்க காலத்திற்கே அழைத்துச் செல்வதாக அமைந்துள்ளன.
இவரின் இம்முயற்சி தமிழுக்கு முற்றிலும் புதிது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இது பயன்படும். நீங்களும் நெடு நல் வாடையைக் காண விரும்புகிறீர்களா 9282348253 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மனை.
வாழ்த்துகள் தோழர் தொடர்க உங்கள் தமிழ்ப் பணி.



Wednesday, April 14, 2010

மாற்றுத்திறனாளிகளின் சாதனைப் படைப்பு 'மா'





முற்றிலும் மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப் பட்டிருக்கும் திரைக் காவியம் 'மா' விரைவில் வெளிவர உள்ளது.கதை,திரைக்கதை,உரையாடல்,திரைவடிவம் என அனைத்துப் பணிகளையும் மதன் கேப்ரியெல் சிறப்பாகச் செய்துள்ளார். ஒலி,ஒளி,இசை,பாடல் என அனைத்துப் பணிகளையும் தமிழ்த் திரைக்குப் புதியவர்களான இவர்கள் எப்படி இவ்வளவு சிறப்பாகச் செய்துள்ளனர் என்கிற வியப்பு எழுகிறது.இசைக் குருந்தகடையும் 'மா' உருவான விதத்தினை விளக்கும் குருந்தகடையும் இப்படத்தில் நடித்து ஒரு பாடலையும் எழுதியிருக்கும் தோழர் தமிழியலன் அனுப்பியிருந்தார். படத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பார்த்து நமக்கு பரிதாபம் ஏற்படவில்லை. மகிழ்ச்சியும் நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க வில்லையே என்கிற பொறாமையும்தான் தோன்றுகின்றன.
கிடியோன் கார்த்திக்கின் இசையில் அமைந்த பத்து பாடல்களும் கேட்க கேட்க புத்துணர்வை ஏற்படுத்துகின்றன.பாரதியாரின் நான்கு பாடல்களோடு ஜி.சிதம்பரநாதன், பவானி கண்ணன், தமிழ்இயலன், மு.வள்ளி, லிடியோன் கார்த்திக், வேதை த.இளங்கோ ஆகியோர் எழுதிய பாடல்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ்இயலன் எழுதிய புயலாக நீ மாறு பாடல் துள்ளல் இசையில் அமைந்து கேட்போரை உற்சாகம் கொள்ளச்செய்கிறது.
இசைக் குருந்தகடு வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி- இன்லேண்ட் பிலிம்ஸ், 4/528, பரசுராம் பட்டி, கே.புதூர், மதுரை-625 007. பேசி: 9345999990.

Monday, April 12, 2010

திராவிட பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் கருத்தரங்கம்








ஆந்திர மாநிலம் குப்பத்திலுள்ள திராவிட பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய நாட்டுப்புறவியல் கழகம் நடத்திய (8-10,ஏப்ரல் 2010) மூன்று நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு 'சாமி குடை உருவாக்கத்தில் மரபுவழித் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன். தமிழ் அமர்வு நண்பர் முனைவர் எழிலவன் தலைமையில் நடைபெற்றது.27 கட்டுரைகள் தமிழில் வழங்கப்பட்டன.இலங்கை நண்பர்கள் கலந்து கொண்டனர் பேராசிரியர் ஜெயசங்கர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவரின் மூன்றாவது கண் அமைப்பு நம் பழங்கலைகளை மீட்டுருவாக்கம் செய்வதில் சிறப்பாக பணியாற்றுகிறது.
பல்கலைக்கழகம் இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில் அமைந்துள்ளது. மலையின் மீது அமைந்திருப்பதால் இதமான தட்பவெப்பம். கொசுக்களே இல்லை என்பதுதான் வியப்பு.

வரும்போது ஒகேனகல் சென்று வந்தோம். இத்தகைய இயற்கை எழிலை இவ்வளவு நாட்களாக சென்று பார்க்காமலிருந்து விட்டோமே என்கிற ஏக்கம் மனதுக்குள் எழுந்தது.அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள் நண்பர்களே.
கட்டுரைச் சுருக்கத்தினையும் அது தொடர்பான படங்களையும் ஒகேனக்கல் படத்தையும் பார்வைக்கு வழங்குகிறேன். கருத்தரங்கப் படம் அழிந்துவிட்டது. நண்பர் எழிலவனிடம் பெற்று பிறகு இணைப்பேன்.

சாமி குடை உருவாக்கத்தில் மரபுவழித் தொழில்நுட்பம்(கட்டுரைச் சுருக்கம்)


முன்னுரை
கடவுளர் சிலைகளை சகடை எனப்படும் ஊர்தியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச்செல்லும்போது பயன்படுத்தப்படும் குடை சாமி குடை எனப்படுகிறது.அக்குடை நெசவாளர்களால் உருவாக்கப்படுகிறது.அதற்கான மூலப்பொருள்கள் யாவை, அவற்றை எவ்வாறு தயார்படுத்துகின்றனர், எத்தகைய தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது, அதன் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டுகின்றனர் என்பனவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

ஆய்வுக்களம்
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை, நடுவீரப்பட்டு ஆகிய ஊர்களில் சாமி குடை செய்பவர்களிடம் கலந்துரையாடி பெறப்பட்ட தகவல்கள் இக்கட்டுரைக்கு சான்றாதாரங்களாக அமைகின்றன.

மூலப்பொருள்கள்
மூங்கில்கழி, இரும்பு வளையம், கட்டுக்கயிறு, காடாதுணி, உட்புற உறையணி துணி(லைனிங் கிளாத்), பட்டு அல்லது வெல்வெட் துணி, சரிகை, ஜால்ரா, தையல் நூல், உல்லன் நூல், பி.வி.சி.குழாய், பெரிய ஆலம் விழுது ஆகியவை சாமி குடை செய்வதற்கான மூலப்பொருள்கள் ஆகும்.

ஆயத்தப் பணி
கல்லங்கழி எனப்படும் நடுப்பகுதியில் ஓட்டையில்லாத மூங்கில்கழியைத் தேர்ந்தெடுத்துப் பிளந்து தேவையான அளவில் சிறு பிளாச்சுகளாக்கி அவற்றை எவ்வாறு பதப்படுத்துகின்றனர்,அதற்காகப் பின்பற்றப்படும் மரபுவழி தொழில்நுட்பம் எத்தகையது என்பனவற்றை ஆய்வுக் கட்டுரையின் இப்பகுதியில் காணலாம்.

புள்ளத்தண்டு தயாரித்தல்
குடையின் கைப்பிடி புள்ளத்தண்டு எனக் குறிப்பிடப்படுகிறது. பெரிய ஆலம் விழுதில் இது தயாரிக்கப்படுகிறது. ஆலம் விழுதை எவ்வாறு பக்குவப் படுத்துகின்றனர், விழுதைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை, இத் தண்டில் பூசப்படும் எண்ணெய் வகைகள் யாவை என்பன இப்பகுதியில் இடம்பெறும்.

குடை செய்முறை
மேற்கண்ட மூலப்பொருள்களைக் கொண்டு சாமி குடை செய்வதற்கு மரபுவழி தொழில்நுட்பங்களைப் பின்பற்றுகின்றனர். வட்ட வடிவில் துணியை வெட்டுவதற்கும், ஆரக்கால்களை அமைப்பதற்கும் குடையைச்சுருக்குவதற்கேற்ப வடிவமைக்கும் விதம், குடையை அலங்கரிக்கும் முறை ஆகியவை மேற்கண்ட துணைத் தலைப்பில் ஆய்வு செய்யப்படும்.


ஒரு குடைக்கான செலவு
ஒரு குடை செய்வதற்கான செலவு எவ்வளவு, அதற்கு எத்தனை நாட்கள் உழைக்கவேண்டும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு, இலாபம் கிடைக்கிறதா என்கிற தகவல்கள் இத்தலைப்பின் கீழ் ஆராயப்படும்.

முடிவுரை
இக்கைவினைத் தொழிலைச் செய்துவரும் குடும்பத்தினர் எத்தனை தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களை முற்றிலும் பயன்படுத்த இயலுகிறதா காலத்திற்கேற்ப மாற்றங்கள் ஏதேனும் செய்துள்ளனரா சமூகத்தில் பொருளாதார நிலையில் இத்தொழிலாளர்களின் நிலை என்ன? எதிர்காலத்தில் இத்தொழில் தொடர்வதற்கு வழிவகை உள்ளதா அரசு தரப்பில் இத்தொழில் கைவினைத்தொழிலாக ஏற்கப்பட்டுள்ளதா என்பனவற்றையெல்லாம் இந்த ஆய்வுக்கட்டுரையின் முடிவரை எடுத்து இயம்பும்.

Sunday, April 4, 2010

தமிழ்மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும்




தமிழ்மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும் மூன்றுநாள் கருத்தரங்கு செனைப் பல்கலைக் கழக பவளவிழா அரங்கில் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் நடத்தப்பட்டது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடக்கிவைக்க நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் நிறைவுப்பேருரையாற்ற சிறப்பாக நடந்தது. நான் வழங்கிய கட்டுரைச் சுருக்கத்தினை இணைத்துள்ளேன்.

தமிழர்களின் உணவு மருத்துவ அறிவு


முன்னுரை
தமிழர்களின் மரபுவழி உணவுப்பழக்கம் உடல் நலத்தைக்காப்பதாகவும், நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையதாகவும், தமிழ் மருத்துவக் கோட்பாடுகளுக்குட்பட்டதாகவும் அமைந்திருக்கிறது என்பதை உரிய சான்றுகளோடு இக்கட்டுரை ஆராய்கிறது.

உடல்நலம் காக்கும் உணவு
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.
என்னும் திருக்குறள் உணவை அளவறிந்து உண்டால் உடலுக்கு மருந்தே தேவையில்லை என்பதை வலியுறுத்துகிறது. தமிழர்கள் உணவை அளவறிந்து எவ்வாறு உண்டனர் அதன் மூலம் உடல் நலத்தை எவ்வாறு காத்தனர் என்பது இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நோயை எதிர்கும் உணவு
தமிழர்களின் மரபு வழி உணவு முறையில் எந்தவகை உணவுப்பொருள்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலுடையவை என்பதைக் கண்டறிந்து பட்டியலிடுவதோடு அறிவில் பூர்வமாக உரிய சான்றுகளோடு ஆராய்கிறது இக்கட்டுரை.

தமிழர்களின் உணவுக் கோட்பாடு
தமிழர்கள் உணவுப்பொருள்களைச் சூடு, குளிர்ச்சி, பித்தம்,வாயு எனப் பகுத்துப் பார்த்து உடல்நிலை, பருவகாலம், வயது ஆகிய சூழலுக்கேற்ப உண்ணும் வழக்கத்தை மரபு வழியாகப் பின்பற்றி வருகின்றனர். இந்த உணவுக் கோட்பாடு தமிழ் மருத்துவமுறையான சித்த மருத்துவ முறையோடு பொருந்துவதாக உள்ளது இதனை இக்கட்டுரை விரிவாக ஆய்வு செய்கிறது.

அறுசுவைக் கோட்பாடு
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கி உண்டாகும்
என்னும் நாலடியார் பாடல் தமிழர்களிடம் அறுசுவை உணவுக் கோட்பாடு இருந்ததை உணர்த்துகிறது. இந்த ஆறு சுவைகள் ஒவ்வொன்றும் ஒரு வகை ஆற்றலை உடலுக்கு அளிப்பதாக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. இனிப்புச் சுவை வளத்தினையும், கார்ப்பு வீரத்தையும், துவர்ப்பு ஆற்றலையும், புளிப்பு இனிமையையும், உவர்ப்பு தெளிவினையும், கசப்பு மென்மையையும் அளிக்கிறது. மேலும் உணவில் இந்த ஆறு சுவைகளும் குறிப்பிட்ட அளவில் அமைய வேண்டும். அந்த அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலுக்குக் கேடு நேரும் என்பதை மருத்துவ நூல்களின் துணைகொண்டு இக்கட்டுரை விளக்குகிறது.

உணவே மருந்து
தமிழர்களின் அன்றாட உணவே எவ்வாறு மருத்தாகத் திகழ்கிறது. அவர்கள் வழக்கமாக உண்ணும் உணவுப் பொருள்கள் எத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்தனவாக உள்ளன.வாழ்க்கை வட்டச் சடங்குகளில் பயன்படுத்தும் உணவுகள் அச்சடங்குகளுக்குப் பொருத்தமான மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளனவா. எளிய நோய்களுக்கு உணவு மருத்துவத்தின் வாயிலாக எவ்வாறு தீர்வு காணப்படுகிறது என்பனவற்றை இக்கட்டுரைக் கள ஆய்வுத் தரவுகளையும் துறை சார்ந்த நூல்களையும் கொண்டு ஆராய்கிறது.

முடிவுரை
தமிழர்களின் மரபு வழி உணவுப் பழக்கம் உடல் நலம் காப்பதோடு மருத்துவத் தன்மை நிறைந்ததாக உள்ளது என்பதை வலுவான சான்றுகளோடு இக்கட்டுரை நிறுவுகிறது.