தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, May 28, 2012

பல்லி பயம்




புதிதாகக் கட்டப்பட்ட
நம் வீட்டில்
நாம் குடியேறுவதற்குள்
வந்து நுழைந்து விடுகின்றன
பல்லிகள்

நாம் முதன்முதலாக
வீடிற்குள் அடி வைக்கும்போது
தம் இருப்பைச்சொல்லி
நம்மை வரவேற்கின்றன

அன்று முதல்
பல்லிகள்
நம்மை மேய்க்கத் தொடங்கிவிடுகின்றன

அவை
கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை
நாம்

யாதொரு பணியையும்
தொடங்கும் முன்
அவற்றின் சம்மதம் வேண்டி
நிற்கிறோம்

நாம் வெளியில் புறப்படும்போது
விபத்தின்றி திரும்ப
ஆசீர்வதித்தனுப்புகின்றன

நமக்கென்று
சில உதவிகளையும் செய்கின்றன

கொசுக்களை உண்டு
நம்மைத்
தொற்று நோய்களிலிருந்து
காப்பாற்றுவதோடு
சிலந்திகளையும் தின்று
ஒட்டடையற்ற
வீடாகவும் பராமரிக்கின்றன

நாமோ
அவை கதவிடுக்குகளில்
இருப்பதைக் கண்டுகொள்ளாமல்
கதவைச் சாற்றி
வால்களைத் துண்டித்துவிடுகிறோம்

துண்டான வால்
துடிப்பதைப் பற்றியெல்லாம்
கவலைப் படுவதில்லை
பல்லிகள்

குட்டை வால்களை
விரைவிலேயே
வளரச் செய்துவிடுகிறார்
பல்லிகளின் கடவுள்

திருமணத்திற்குத் தயாராகிவிடும்
நம் பிள்ளைகளுக்குத்
துணை தேட
பல்லிகளிடம் ஒப்புதல்
கேட்கிறோம்

தன் துணையை
புணர்ச்சிக்கு அழைக்கிறது பல்லி
அழைப்பொலியைச்
சம்மதமாகக் கருதி வெளியேறுகிறோம் நாம்

பெரிதாகிவிட்ட
பல்லிக்குட்டிகளைப் பார்த்து
பயப்படுகின்றனர்
நம் பேரப்பிள்ளைகள்

ஒரு நாள்
கால் இடறி
நம் தலையில் விழுகிறதொரு பல்லி

மரண பயத்தில்
தலை தெரிக்க ஓடுகிறோம்
குளியலறை நோக்கி.

Sunday, May 27, 2012

நிரல்





நாட்டின் எதிர்காலத்தை
கைகளில் ஏந்தி
வரிசையில் நின்றனர் குழந்தைகள்
சத்துணவு கூடத்தின் முன்

சுகாதர நிலையங்களில்
நோயாளிகளின் வரிசை

ரசிகர்கள் கூட்டம்
இப்போது குறைவுதான்
திரையரங்க வரிசையில்

முன் பதிவுக்குக் காத்து நிற்கிறது
பயணிகளின் வரிசை

வளைந்து நெளிகிறது
ரேஷன் கடை வரிசை

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமின்றி
அவ்வப்போது தோன்றும்
வாக்காளர் வரிசை

பொங்கல் தோறும்
விலையில்லா வேட்டி சேலைக்கு நிற்கிறது
ஏழைகள் வரிசை

இந்நாட்டு மன்னர்களெல்லாம்
ஏதோ ஒரு
வரிசையில் நிற்க

எதிர்கால மன்னர்களோ
கைரேகைப் பதிவிற்காக
காத்து நிற்கின்றனர்
அமெரிக்க தூதரகத்தின்
நீண்ட வரிசையில்.

Saturday, May 26, 2012

பிணத்தை உண்பவன்



பூமிக்குள் புதைக்கப்பட்ட
நம் மூதாதையர்
ஒருவரைப் போல்
காட்சியளிக்கிறது
மண்ணுக்குள்ளிருந்து
தோண்டியெடுக்கப்பட்ட
சக்கரைவள்ளிக்கிழங்கு

தணலுக்குள் 
நுழைத்து வைத்து
மறுநாள் 
எடுத்துப் பார்க்கிறேன்

வெந்து சுருங்கிய உடலை
என் கோரைப் பற்கள்
நீண்டு வெளிவர
பிய்த்து உண்கிறேன்

எனக்கு மிகவும் விருப்பமான
என் மூதாதையரின்
வெந்த பிணத்தை.

Thursday, May 24, 2012

முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்-நூல் அறிமுகம்





                                      தென்னவராயன்பட்டு வேணுகோபால்



                 அறிஞர் வே. ஆனைமுத்து அவர்களின் வாழ்த்துரை







தென்னவராயன் பட்டுஇராமசாமி, விடுதலைப்போராட்ட வீரர் வேணுகோபாலசாமி அவர்களின் , நல்லாசிரியர் சஞ்சீவிராயன் ஆகிய மூன்றுதலைமுறை வரலாற்றை பேராசிரியர் த. பழமலை அவர்கள் தொகுத்துள்ளார். இந்நூலுக்கு அறிமுகவுரை எழுதியுள்ள அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள் பல வரலாற்று உண்மைகளையும் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் கட்சியின் பெயரால் எப்படியெல்லாம் ஒடுக்கினர் என்பதையும் அதற்கு எதிராக தந்தை பெரியார் ஆற்றிய தேர்தல் பணிகள் பற்றியெல்லாம் வெகுசன வரலாற்றில் அதிகம் பேசப்படாத செய்திகளை ஆனைமுத்து அவர்கள் இங்கே பதிவுசெய்துள்ளார். அந்த காலகட்டத்தில் ஆதிதிராவிடர்களும் வன்னியர்களும் இணைந்து தேர்தல் களம் கண்டு வெற்றிபெற்ற செய்திகள் இன்றைக்கு பாடமாக அமைகின்றன.
இந்த நூலைத் தொகுத்துள்ள பேராசிரியர் பழமலை அவர்கள் கடின உழைப்பு செய்திகளில் மிளிர்கிறது. அவர் முன்னுரையில்,"பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வழங்கும் நம்முடைய பண்டைநாள் நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டவையே அந்நாளில் அவற்றைத்தொகுத்தவர்கள் பட்ட அரும்பாட்டை இன்று நாம் நினைத்துப் பார்க்கவும் இயலாது. நம் கற்பனைக்கும் எட்டாது. இந்நாளில், இந்நூலைத் தொகுக்கையில் அடியேன் பட்ட பாடு அவர்கள் கடின உழைப்பில் ஆயிரத்தில் ஒரு பங்காவது இருக்கலாம். இதுதான் ஆசை பற்றி அறையலுற்றேன் என்பது". என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்
பக்கங்கள் : 192
விலை : ரூ.100/-
கிடைக்குமிடம் : மலையரசன் பதிப்பகம்
தென்னவராயன் பட்டு
வாக்கூர் அஞ்சல்
விழுப்புரம் மாவட்டம் - 605501.

Wednesday, May 23, 2012

தபசி கடிதம்...









திருச்சி
11-02-2006

அன்பு நண்பர் புகழேந்திக்கு,
நலமா? நகர்க்குருவி வாசித்துவிட்டேன். இயல்பான எளிமையான பல கவிதைகள் அளித்துள்ளீர்கள்.. வாசிப்பு நெருக்கடி இன்றி கவிதைகளை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.ந்வீன கவிதைகளில் இது ஒரு பிரதான அம்சமாக மிளிர்வதை அறிந்திருப்பீர்கள். இன்றைய கவிதை மொழியில் புதிர்கள் எதுவுமில்லை என்பதே அதன் பலம். அதே சமயம், கவிதைக்குள் ஒரு வித மாயாவாத வெளிப்பாட்டைக்கொண்டுவர முடியும். காட்சிப்பதிவுகளின் வழியே கருத்துப்பதிவின் நுண்ணிய இடங்களை கவிஞன் தொட்டுவிட முடியும். கவிதை நகர்வு, கவிதையைவிட முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். நூலகத்திலிருக்கும் புத்தக அடுக்கு போல, ஒரு இசைக்குறிப்பு போல, ஒரு தேர்ந்த வாகன ஓட்டியின் சாகசம் போல கவிதையை நகர்த்திச் செல்ல முடியும். ஒரு நல்ல கவிதை தன் மையத்தை ஒரு நாளும் இழப்பதில்லை. அது எப்போது எழுதப்பட்டதாக இருப்பினும் சரி அது இன்று மலர்ந்த பூவாகத்தான் மணம் வீசும்.
இழப்புகள் சுமைகள் இவைகளிலிருந்து விடுபடத் துடிக்கும் மன்க் கொந்தளிப்பைத் தங்களின் பல கவிதைகளில் உண்ர்கிறேன். கவிஞனுக்கே உரித்தான nostalgic மன நிலையும் கூட. ' நடப்பது என்பது நடந்தது ஆகிவிட்டது' , 'பூமிக்குள் புதைக்கப்பட்ட நம் மூதாதையர்...', ' என் மகனின் நாள்காட்டி முழுக்க ஞாயிற்றுக்கிழமைகள்' ஆகிய வரிகளில் a touch of class உள்ளது. அதே சமயம் . ' அன்றெ தொடங்கினேன் சமையல் கலையை மறந்து போக..' என்பது apt ஆகத் தெரியவில்லை. 'சமையலறையில் இனி எனக்கென்ன வேலை என்று இருக்கலாமோ அது? கவனிக்கவும். ஒரு கவிதையில் அதிகப்படியான சொற்களைப்பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் பொருத்தமற்ற சொற்கள் இருக்கலாகாது என உணர்கிறேன். கவிதையின் மீதான உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்தும்போது, ' சொல் தேர்வு' மற்றும் சொற்பொருத்தம் கை கூடிவிடும். உதாரணமாக என்னுடைய பூனைகளின் காலம் என்ற கவிதையில் புனுகுத்தைலம் என்ற ஒரு சொற்றொடருக்கு சுமார் 6 மாத காலம் நான் காத்திருக்க வேண்டியதாயிற்று. இறுதியில் அதுவாகவே நிகழ்ந்தது. உக்கிரமான மன நிலையில் இயங்கும்போது அங்கு மேலோட்டமான சொற்கள் வலுவிழந்து விடுகின்றன. தொடர்ந்து அப்படிப்பட்ட மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வதுதான் அரிதானது. மற்றபடி தொடர்ந்து எழுதுங்கள். கவிதையின் வடிவம் செய்நேர்த்தி ஆகியவை பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம். நீங்கள் என்ன சொல்லவேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதை மட்டுமே சொல்லுங்கள். வடிவமும் செய்நேர்த்தியும் தம்மால் வந்துவிடும். கவிதை என்பது கையில் பிரம்பை வைத்துக்கொண்டு நம்மைப் பயமுறுத்தும் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் அல்ல. அது நம் வீட்டு நாய்க்குட்டி அது நம்மைக் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். மற்றபடி தங்களின் 'வித்தைக்காரி', 'நாற்றமில்லாத...', 'நடந்த கதை' ஆகிய கவிதைகளை ரசித்துப் படித்தேன். அனைத்திற்கும் எழுதுங்கள்.

அன்புடன்
தபசி.

Sunday, May 20, 2012

மெய்ப்பொருள் காண்பது அறிவு - நூல் அறிமுகம்

விருத்தாசலத்தில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் செழியன் எழுதிய மெய்ப்பொருள் காண்பது அறிவு என்னும் நூல் என் அணிந்துரையோடு வெளியாகியுள்ளது. என் அணிந்துரையில் வரும் முதல் நூல் இது. உங்களோடு பகிர்ந்துகொள்வதில் ஒரு மகிழ்ச்சி...





நூல் பெறுவதற்கு




பாவாணர் இல்லம்
கபிலர் தெரு
பெரியார் நகர் - தெற்கு
திருமுதுகுன்றம் - 606001.
பேசி : 9362665443.

Tuesday, May 15, 2012

உலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு - டிசம்பர் 2012




உலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 15,16 தேதிகளில் சென்னை கிண்டியிலுள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா விடுதியில் நடைபெற உள்ளது. இம் மாநாட்டினைத் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்துகிறது. இதர்காகத் தமிழறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

தலைப்புகள்

1.தமிழ் மொழி கற்றல் கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறைகள்
2. தமிழ் மொழி பாடப்பொருள் - காலத்திற்கேற்றவை
3. மனனம் செய்து கற்றல் மூலம் விளையும் பயன்கள்
4. தமிழ் மொழியின் எதிர்காலம்
5. ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்க்கின்றனவா?
6. தமிழை இரண்டாம் மொழியாகப் பயிலும் தமிழ் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் வழிமுறைகள்
7. பிற மொழி மாணவர்கள் தமிழை எளிமையாகக் கற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள்
8. தமிழ் மொழித்திறன் வளர்ப்பு - வழிவகைகள்.
9. தமிழ் வளர்த்த அறிஞர்கள்
10. ஆசிரியப்பணி அறப்பணி

 கட்டுரைகள் 20 நிமிடங்களுக்குள் வழங்கும் வண்ணம் அமைதல் வேண்டும்.

முழு வடிவில் கட்டுரைகள் அனுப்ப இறுதி நாள் : 30/08/2012

பேராளர் கட்டணம் : ரூ.5000/-

கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி

ந. ரெங்கராஜன்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
78, பெல்சு சாலை
சென்னை - 600005.
பேசி : 044-28510575
மின்னஞ்சல் : testf@asiriyarkoottani.org
இணையதளம் : www.tamilkalam.in