தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, June 30, 2012

நாட்டுக்குதேவை மதுக்கடைகளா மருத்துவக்கல்லூரிகளா?





புதுவை மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் வழக்கம்போல கவலை தெரிவித்துள்ளார். 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கவேண்டிய நிலையில் 2000 பேருக்கு ஒரு மருத்துவரே உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். நம் தமிழகத்தில் தற்போது சிவகங்கையில் தொடங்கியுள்ள கல்லூரியையும் சேர்த்து 18 மருத்துவக்கல்லூரிகளில் 2145 மாணவர்கள் இந்த ஆண்டிலிருந்து மருத்துவக்கல்வி பயில உள்ளனர். இது நம் நாட்டுக்குப்போதுமானது அல்ல என்பது பிரதமரே ஒப்புக்கொண்ட உண்மை. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரியை ஏன் அரசு திறக்கக்கூடாது.
மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமா?


தினமணி செய்தி

First Published : 01 Jul 2012 12:25:38 AM IST
Last Updated : 01 Jul 2012 01:20:52 AM IST

 புதுச்சேரி, ஜூன் 30: இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.342 கோடியில் கட்டப்பட்ட குழந்தைகள், பெண்கள் மருத்துவமனை, பயிலகம், விடுதி கட்டடங்களைத் திறந்து வைத்தும், முதுகலை, இளங்கலை முடித்த 311 பேருக்குப் பட்டங்களை வழங்கியும் அவர் சனிக்கிழமை பேசியது:
 நாட்டு மக்களுக்குச் சுகாதாரத்தை அளிப்பதில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறோம். சுகாதாரக் குறியீடுகள் மோசமாகத் தொடர்வதும், சிசு மற்றும் பிரசவகால மரணங்களும் கவலையளிக்கின்றன.
 பல ஆண்டுகளாகச் சுகாதார மற்றும் குடும்ப நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், இன்றைக்கும் மருத்துவச் செலவுகளுக்காக, 3-ல் இரு பங்குத் தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவிட நேர்கிறது.
 இதை சரி செய்யும் நோக்கில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம், சிசு மற்றும் பிரசவகால மரணங்கள் விகிதம் குறைந்தது. மருத்துவமனையில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்களின் தேவைகள் பல நிறைவேற்றப்பட்டாலும், இன்னமும் இலக்குகள் பல இருக்கின்றன.
 இதனால், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. அதேபோல, நகர்ப்புற பகுதிகளில் சுகாதாரத் திட்டங்களை அமல்படுத்த, புதிய தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம் தொடங்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
 நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளின் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்பதற்குப் பதிலாக, 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருக்கிறது. ஒரு மருத்துவருக்கு 3 செவிலியர்கள் என்பதற்குப் பதிலாக, இரு மருத்துவர்களுக்கு 3 செவிலியர்கள் என்ற நிலையும் இருக்கிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண, மத்திய மற்றும் மாநில அரசுகள், குறிப்பாக மாநில அரசுகள் அந்தந்தப் பகுதிகளில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
 மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கும் நிலையில் உள்ளது. மருத்துவக் கல்வி குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இந்நிலை தொடர அனுமதிக்கக்கூடாது. கல்வித்தரம் உயர்வதற்கு உதவியாக நம்பகமான கட்டுப்பாட்டு அமைப்பும், கல்விக்கூட அமைப்புகளையும் நிறுவ வேண்டியது அவசியம். அதேபோல, பாடத்திட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
 கிராமங்களிலும், உள்ளூர் சமுதாயத்தினரோடும் இணைந்து பணியாற்றுவதற்கேற்ப மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். நோய்களைக் குணப்படுத்தும் பணியைவிட, நோய்த் தடுப்புப் பணிகளில் தங்களது பங்களிப்பை அதிகம் அளித்து, சமூகப் பங்களிப்பை நிறைவேற்ற வேண்டும்.
 இந்திய மருத்துவக் கவுன்சில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதோடு, சமூக மருத்துவம் சார்ந்த பயிற்சிகளையும் அனைத்து நிலைகளிலும் இணைத்து வருகிறது.
 நாட்டின் மருத்துவக் கல்வியைப் பலப்படுத்த பல்வேறு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இளநிலை, முதுகலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளும் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன.
 தேவையான இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
 பிரதம மந்திரி சுவஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ், போபால், புவனேசுவரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் போன்ற 6 மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இந்த மருத்துவக் கல்லூரிகள் 2012-13ம் கல்வியாண்டிலும், மருத்துவமனைகள் 2013-14ம் கல்வியாண்டு முதலும் செயல்படத் தொங்கும் என எதிர்பார்க்கிறோம்.
 கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மேம்பாடு அடைவதற்கான திட்டத்தோடு புதுச்சேரி மாநிலம் செயல்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகிறது. இதற்காக புதுச்சேரி அரசைப் பாராட்டுகிறேன். நாட்டிலேயே உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வியில் சிறந்த மையமாக புதுச்சேரி மாநிலம் திகழ அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். மேலும், புதுச்சேரி மாநிலத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா மையமாக மேம்படுத்தத் தேவையான வாய்ப்புகளை வெளிக்கொணர, மத்திய சுற்றுலா அமைச்சகத்தோடு இணைந்து புதுச்சேரி அரசு செயல்பட வேண்டும் என்றார்.
 மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் இக்பால்சிங், முதல்வர் என்.ரங்கசாமி, மாநிலங்களவை உறுப்பினர் ப.கண்ணன், சுகாதாரத்துறைச் செயலர் பி.கே.பரதன், ஜிப்மர் தலைவர் என்.கே.கங்குலி, இயக்குநர் டி.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.


எழுத்தாளர் விந்தன் நினைவு நாள்


         

தமிழிலக்கிய உலகில் அதிகம் பிரபலமாகாத சிறந்த எழுத்தாளர் விந்தன் நினைவு நாள் இன்று. ஆண்டுதோறும் தினமணியில் ஒரு சிறு விளம்பரம் வரும். அவரது படைப்புகள் ஏழை எளிய மக்களை கதை நாயகர்களாகக்கொண்டவை. அவரின் படைப்பாற்றல் வியப்பானது. அவரைப்பற்றி ஒரு நூலை சாகித்ய அக்கதமி இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வெளியிட்டுளது. அவரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு இப்பதிவில் இடம்பெறுகிறது.

வாழ்க்கை வரலாறு
             விந்தன் என்னும் கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் வேலை செய்து வந்தார்.
இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.
1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.

அச்சகத்தில் பணி

மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.
கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.

எழுத்தாளராக

1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.
"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.

திரைப்படவுலகில்

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும், "அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், "கூண்டுக்கிளி" என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். குழந்தைகள் கண்ட குடியரசு, பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.
கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.
இறுதிக் காலம்

பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
அவர் மகன் திரு கோ. ஜனார்தனன் விந்தன் நினைவு அறக்கட்டளை நடத்தி வருகிறார்.முகவரி : கோவிந்தாலையா 17(7/2) அருணாசலம் தெரு, செனாய்நகர், சென்னை - 600030. பேசி: 9444145275.
இணயம் கீழுள்ள இணைப்பை சொடுக்குக. ஒருங்குறி எழுத்துருவிலிருன்தால் நலம். விந்தன் 

நன்றி: தமிழ்விக்கிப்பீடியா


Thursday, June 21, 2012

பெரியாருக்கு ரஜாஜி எழுதிய கடிதம்



1925 ஆம் ஆண்டு பெரியாருக்கு ராஜாஜி எழுதிய கடிதம். காந்தியின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதம்.

Sunday, June 17, 2012

தொழில்நுட்பக்கல்வி சேர்க்கை புதிய விதிமுறை


பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்க சேர்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும். அவர்கள் 3 வருடம் பாலிடெக்னிக் படிக்க வேண்டும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள பாலிடெக்னிக் படிக்கும்போது அவர்கள் முதலாம் ஆண்டு படிக்காமல் நேரடியாக 2-வது ஆண்டில் சேரலாம். இது நடைமுறையில் உள்ளது.



இப்போது பிளஸ்-2 படிக்கும் போது தொழில்கல்வி படித்தவர்கள் மட்டும்தான் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-வது ஆண்டில் நேரடியாக சேரமுடியும் என்றும், வேறு குரூப் எடுத்தவர்கள் சேரமுடியாது என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.
         இது ஏழை எளிய மாணவர்களை பாதிக்கும் என்பதை கண்கூடாக இந்த ஆண்டு நான் கண்டேன். இதை உணர்ந்த வைக்கோ அவர்கள் ஏ.ஐ.சி.டி.இ. ன் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி ஒன்றில் படித்து அப்பள்ளியில் முதல் மாணவனாகத் தேரிய மாணவன் ஏழ்மை நிலை காரணமாக பொறியியல் படிக்காமல் பாலி டெக்னிக் படிக்க நினைத்தான். 2 ஆம் ஆண்டில் சேர முடியாது என்ற அறிவிப்பால் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணைக்கொண்டு இப்போது முதலாண்டு சேரப்போகிறான். இது ஏழைகளின் தலையெழுத்து என்று விட்டு விடாமல் மற்ற அரசியல் தலைவர்களும் இதனை கண்டித்து பழைய நிலை தொடர்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வைக்கோ அவர்களை இந்த கண்டன அறிக்கைக்காகப் பாராட்டுவோம்.

நன்றி : தினமணி, கல்விச்சோலை

Saturday, June 16, 2012

தமிழனின் ஊர்ப்பெயர் தமிழில் வேண்டும்



விருத்தாசலம் என்னும் வட மொழிப் பெயரை தமிழில் திருமுதுகுன்றம் என்று மாற்றுவதற்காக 20 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். இப்போது நல்ல சூழல் நிலவுகிறது. கோட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் ஆர்வமாக உள்ளனர். அதுகுறித்த வரலாறுகளை காணுங்கள்.


15.12.1993 விடுதலை தலையங்கம்
 திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு அரசுக்கு அனுப்பிய கடிதம்

 திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு நடத்திய பொதுக்கூட்டம்
தமிழக அரசு நடுவணரசுக்கு அனுப்பிய கடிதம்
நடுவணரசு எழுத்தாளர் கூட்டமைப்புக்கு வழங்கிய தகவல்
தமிழக அரசு கூட்டமைப்புக்கு வழங்கிய தகவல்

 அகநானூற்றில் முதுகுன்றம் என குறிப்பிடும் மாமூலனார் பாடல்
பழமலைநாதர் கோயில் கல்வெட்டு

பழமையான இவ்வூரின் பெயரை மீண்டும் திருமுதுகுன்றம் என மாற்றவேண்டும்.


Tuesday, June 12, 2012

ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு

ஓர் ஆண்டு முழுதும் கற்ற கல்வியை 3 மணி நேரத்தில் மதிப்பிடுவது சரியல்ல என்பது கல்வியாளர்களின் கருத்து. இதனை வலியுறுத்தி 2006 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிகழ்ந்த கருத்தரங்கில் மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை என்பதை உணர்த்தும் "மதிப்பீட்டு முறையில் பன்முகத்தன்மையின் தேவை" என்னும் தலைப்பில் ஆய்வுக்கத்துரை ஒன்றினை அளித்தேன். அக்கட்டுரையில் நான் பரின்துரைத்த ஒரு சில செயல்கள் இன்று தமிழக அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மகிழ்ச்சிதான் என்றாலும் இன்னும் முழுமையான மதிப்பீட்டு முறை தேவை. என் கட்டுரையின் ஒளி நகல் கீழே காண்க இன்னும் விரிவாக அடுத்த பதிவில் காண்போம்.




Tuesday, June 5, 2012

ஏட்டுச் சுரைக்காய்





ஒரு குளத்தில்
நூறு கொக்குகள் இருந்தன
அதில் ஒன்றைச் சுட்டான்
வேட்டைக்காரன்
மீதி எத்தனை
கொக்குகள்
அங்கிருக்கும்?

தொண்ணூற்றொன்பது
என்றனர்
மாணவர்

பூச்சியம்
என்றனர்
ஞானியர்.


நன்றி : படம் - தமிழ்விக்கிப்பீடியா

Monday, June 4, 2012

படிப்பு





எழுதச்சொல்லி
நச்சரிக்கும்
ஆசிரியர்களின்
பிடுங்கல்களிலிருந்து
விடுபட நினைக்கும்
என் மகனின்
நாள்காட்டி முழுக்க
ஞாயிற்றுக்கிழமைகள்

பள்ளி செல்லாமல்
வீதியில் திரியும்
நாய்களின் சுதந்திரம்
தனக்கில்லாதது பற்றி
வருந்துமவனை
உணவு முறையில்
நமக்கும் நாய்க்குமான
வேறுபாடு கூறி
தேற்றுவாள் மனைவி

விளையாட்டு மைதானத்தில்
கழற்றி வைக்கப்பட்ட
மனத்தோடு
பள்ளிக்கு விரட்டப்படும்
அவன் கடிகாரம்
நொண்டியடிக்கும்

உற்சாகத்தோடு
வீடு திரும்பும்
ஒவ்வொரு அந்தியிலும்
அவனுக்குக்
கண்ணீரால் எழுதக்
காத்திருக்கும்
பை நிறைய வீட்டுப்பாடம்

விரலிடுக்குகளில்
எழுதுகோலோடும்
விரிக்கப்பட்ட
குறிப்பேடுகளின் மீது
உலர்ந்த கண்ணீர்க் கோட்டு
கன்னங்களோடும்
உறங்கிப் போனவனை
எழுப்பி
ஊட்ட முயல்கையில்
உள்ளிறங்க மறுக்கும்
சோற்றுருண்டைகளும்.