தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, May 14, 2013

பட்டா மாறுதல் செய்ய என்ன செய்யவேண்டும்?




பட்டா என்பது விவசாயிகளின் உயிராதாரம். வங்கிகளில் விவசாயக்கடன், நகைக்கடன் பெறவும், பத்திரப்பதிவுகள் செய்யவும் அரசின் நலத்திட்டங்களைப்பெறவும், வெள்ள நிவாரணம், வரட்சி நிவாரணம் போன்றவற்றைப்பெறவும். பட்டா/சிட்டா அவர்களுக்குத்தேவைப்படுகிறது. நில உரிமையாளருக்கு அரசு வழங்கும் இந்த ஆவணம் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. ஒருவரிடமிருந்து விவசாய நிலத்தை மற்றொருவர் வாங்கும்போது அதற்கான பத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில்  பதிவு செய்யப்படுகிறது என்றாலும் அந்த குறிப்பிட்ட நிலம் விலைகொடுத்து வாங்கியவரின் பெயருக்கு உடனடியாக மாற்றப்படுவதில்லை. நில ஆவணங்கள் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டிலிருப்பதால் நிலத்தைவாங்கியவர் அதற்கான பத்திர நகல், அந்த புல எண்ணுக்கு உரிய பட்டா நகல், 'அ' பதிவேடு நகல் நில வரைபடம், உட்பிரிவு செய்ய வேண்டுமெனில் அதற்கான கட்டணம் செலுத்திய சீட்டு நகல் ஆகியவற்றை இணைத்து வட்டாட்சியருக்கு விண்ணப்பித்து அந்த பட்டாவை இவர் பெயருக்கு மாற்றம் செய்யக் கோர வேண்டும்.  அந்த மனுவை உரிய நில அளவையாளருக்கு வட்டாட்சியர் அனுப்புவார். அதன்பிறகு நில அளவையாளர் நிலத்தை நேரில் சென்று அளந்து உட்பிரிவு செய்து ஆவணங்களில் உரிய மாறுதலைச்செய்து புதிய நில உரிமையாளருக்கு பட்டாமாற்றம் செய்து வழங்கவேண்டும். இதனை மாற்றி வாங்குவதற்குள் விவசாயிகள் படும் பாடு பெரும்பாடு.

நிலத்தை பத்திரப் பதிவு செய்யும்போதே உட்பிரிவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது அதற்கு ரசீதும் வழங்கப்படுகிறது. ஆனால் வருவாய்த்துறையில் அந்த ரசீதை ஏற்றுக்கொள்வதில்லை. இன்னொருமுறை உட்பிரிவுக்கட்டணம் செலுத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். ஒரே பணிக்கு பொதுமக்கள் இரண்டுமுறை கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது.இதுகுறித்து அரசு பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.இந்த நடைமுறைகள் கல்வியறிவில்லாத விவசாயிகளுக்கு தேவையற்ற அலைச்சலை ஏற்படுத்துகிறது என்பதற்காகவும் பட்டா மாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டும் ஜெயலலிதா முதல்வரானதும் ஒரு அறிவிப்பை 10/06/2011 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். பட்டா மாறுதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலையாமல்  கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்தாலே போதும். இதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் ஒவ்வொரு திங்கள் கிழமையும் முழு நேரம் அலுவலகத்திலிருந்து மனுக்களைப் பெற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட மனுக்களின் மீது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் வருவாய்க்கணக்குகளில் தேவையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு பட்டா மாற்றத்திற்கான உத்தரவுகள் வழங்கப்படும்.வெள்ளிக்கிழமைதோறும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்யும் நாளாகக் கடைபிடிக்கப்படும். உட்பிரிவு செய்ய அவசியமில்லாத இனங்களில் 15 நாட்களுக்குள்ளாகவும் உட் பிரிவு செய்யவேண்டிய இனங்களில் 30 நாட்களுக்குள்ளாகவும்  பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை வட்டாட்சியர் உறுதி செய்ய வேண்டும். இந்த நடைமுறைகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு நில நிர்வாக ஆணையர் மட்டத்திலும், வருவாய்த்துறை அமைச்சர் அளவிலும் ஆய்வுசெய்யப்படும். இதற்காக வருவாய் நிலை ஆணையில் உரிய திருத்தங்கள் செய்யப்படும். என்று முதல்வர் அறிவித்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது.ஆனாலும் மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலைவது மாறவில்லை.
இந்த நடைமுறை சாத்தியமில்லை என்று உணர்ந்து தற்போது பொதுமக்களின் ஊருக்கே சென்று பட்டா மாற்றம் உள்ளிட்ட திட்டங்களை வழங்கும் 'அம்மா' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான அரசு ஆணை  04/03/2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது. வட்டட்சியர் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமைதோறும் கிராமங்களை நோக்கிச்சென்று பொதுமக்களிடம்  பட்டாமாறுதல், இலவச மனைப்பட்டா , முதியோர் ஓய்வூதியம் போன்ற மனுக்களைப் பெற்று அந்த இடத்திலேயே கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்படாத மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வுசெய்வார். எக்காரணம் கொண்டும் 30 நாட்களுக்குள் முடிவான பதில்தராமல் மனுக்களை நிலுவையில் வைக்கக்கூடாது.என்று விதிமுறைகளை பொதுமக்களுக்கு சாதகமாக அரசு வகுத்திருந்தாலும் வருவாய்த்துறை அலுவலர்கள் இந்த விதிமுறைகளைக் கண்டுகொள்வதில்லை. பெயரளவுக்கு ஒரு சில மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து வாரந்தோறும் ஒரு ஊரில் அம்மா திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக செய்தித்தாளில் படத்தையும் அறிக்கையையும் வெளியிடுகின்றனர். இவர்கள் உணமையிலேயே மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் வரவேண்டிய அவசியம் இருக்காது.ஆனால் இன்றைக்கும் மக்கள் அலையும் அவலம்தான் நடக்கிறது.

நடைமுறையில் என்னதான் நடக்கிறது? மக்கள் கிராமநிர்வாக அலுவலரிடம் மனுக் கொடுத்துவிட்டு
அந்த மனு நில அளவையாளருக்கு சென்றுவிட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளவே பல நாட்கள் ஆகும். அப்படியே தெரிந்துகொண்டாலும் அந்த நில அளவையரைப் பார்ப்பது அரிதிலும் அரிது. ஏனென்றால் மற்ற அலுவலர்களைப்போல அவர்கள் தினமும் அலுவலகம் வருவதில்லை. நிலத்தை அளப்பதற்காக ஏதேனும் கிராமத்திற்கு சென்றுவிடுவார். தப்பித்தவறி பார்த்துவிட்டாலோ அவரிடமிருந்து நீங்கள் பதிலை எதிர்பார்க்கக்கூடாது. தொடர்ந்து பலமுறை அவரை சந்தித்தால் அவராக பரிதாபப்பட்டு உங்களுக்கு பதில்கூறுவார். அதுவும் கடுகடு என்று முகத்தை வைத்துக் கொண்டு என்னா சும்மா சும்மா வந்து தொந்தரவுபண்றீங்க. இப்பதான் உங்கள் மனு வந்துள்ளது, அதற்குள் அவசரமோ? ஆறு மாசத்துக்கு முன்னாடி வந்த மனுவே இன்னும் பாக்கி இருக்கு ஒரு பத்துநாள் கழிச்சு வந்து பாருங்க என்று கடுப்படிப்பார்.இதுவாவது பரவாயில்லை ஒருசில நில அளவையர்களோ வாயையேத் திறக்க மாட்டார்கள் நாம் எதோ அவர்களிடம் பிச்சைகேட்க வந்திருப்பவர்போல் நினைத்து கையை மட்டும் இல்லை என்பது போல ஆட்டி சைகை காண்பிப்பார்கள். நம் வேலை இன்னும் முடியவில்லை என்று நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.சரி இப்படியிருந்தால் எப்படி பட்டா மாற்றுவது என்று சிந்தித்து அளவையர் நல்ல மூடில் இருக்கும்போது தனியாகப் பார்த்து முன்பணமாக ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்து அய்யா எப்போ சொல்றீங்களோ அப்போ வந்து உங்களை கார் வைத்து அழைத்துச்செல்கிறேன் என்று கூறினால் அவரும் இரக்கப்பட்டு உங்களுக்கு ஒருநாளைச் சொல்வார் அந்த நாளில் நீங்கள் போனால் உங்களுக்கு எமாற்றம்தான் மிஞ்சும். அவர் வேறு வேலையாக வெளியில் சென்றிருப்பதாக அலுவலகத்திலிருப்பவர்கள் கூறுவார்கள். இதுபோல் பலமுறை நீங்கள் அலைந்து அலுத்துப்போவீர்கள். அதற்குள் சில மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு வழியாக அவர் வருவதாகக் கூறிய நாளில் நீங்கள் ஊரிலிருக்க மாட்டீர்கள்.அப்படியே அவர் வந்தாலும் உங்கள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்யமாட்டார் வரப்பில் நின்றுகொண்டு எது உங்கள் நிலம் பக்கத்தில் யார் நிலம் என்பதை க்கேட்டு தெரிந்துகொண்டு நில வரைபடத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு செல்வார் அதன்பிறகு மீதித் தொகையைக் கொடுத்தால் உங்களுக்கு ஆறு மாதங்களுக்குள் உட்பிரிவு செய்து வழங்கப்படும். இல்லையென்றால் ஏழெட்டு மாதங்கள் நீங்கள் அலைய வேண்டியிருக்கும். இதெல்லாம் எனக்கு எப்படிதெரியும் என்கிறீர்களா? பட்டா மாற்றுவதற்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 10 மாதங்களாக அலைகிறேனே இதுகூடத் தெரியாதா? இதெல்லாம் தெரிஞ்சி என்ன தெரியவேண்டியது தெரியலையே!