தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, November 11, 2013

நாட்டுப்புறவியல் கருத்தரங்கு

தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம்.
21 ஆவது தேசிய கருத்தரங்கு

நாள் ; 19,20 ஜனவரி 2014

இடம்: கர்நாடக நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் ( உலகின் முதல் நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம்)
கொடகொடி(Gotagoti)
ஷிக்கஒன்  வட்டம்(Shiggaon )
 ஹவெரி மாவட்டம் (Haveri)
கர்நாடகா-581 197

கருத்தரங்க பொருண்மை

மரபுவழி அறிவு
கிராமப்புற மற்றும் பழங்குடி மேலாண்மை
கிராமப்புற மற்றும் பழங்குடி பண்பாட்டு  உற்பத்தியும் விநியோக முறையும்
நிலைத்த வளர்ச்சியும் நாட்டுப்புறவியலும்.

கட்டுரை கட்டணம் அனுப்ப கடைசி நாள்
ஜனவரி 1 ,2014

முகவரி
முனைவர் டாக்டர் நசீம்தீன்
பொருளாளர்
77/13 பேராசிரியர் குடியிருப்பு
அம்மக்குளம் 5 ஆம் தெரு
போடிநாயக்கனூர் 625513
பேசி: 919488580085
மின்னஞ்சல்: nazeemdeen@gmail.com





Friday, November 1, 2013

சுழியான் சிறுகதை




               
                உருண்டி வைத்திருந்த சுழியான் உருண்டையை மைதாவில் நனைத்து எண்ணெயில்  போட்டபடி ,”தீவாளிக்காவது தலையில எண்ணெய் தேச்சு குளிக்கக் கூடாதா?” என்றாள்.
இதைக்கேட்ட அவள் கணவனுக்கு அவன் எட்டாவது படிக்கும் போது அவன் ஆசிரியர் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. என் மருமொவ இருக்காள தீவுளிக்கு தீவுளி எண்ண தேச்சு குளிப்பா. என் மொவ இருக்காளே  சனியோ... சனி தான்  எண்ண தேச்சு குளிப்பா.  (அந்த தீவுளிக்கு தீவுளி என்று சொல்லும்போது தீபாவளி வாரம் ஒரு முறை வருவது போலவும் சனியோட சனி என்பது சனிக்கிழமை ஆண்டுக்கு ஒரு முறை வருவது போலவுமிருக்கும்) அவன் சிறு வயது நினைவுகளில் மூழ்கினான்.
அப்பா அதிகாலையிலேயே கீரனூர் செட்டியாரிடம் வாங்கிய நல்லெண்ணெயை தலையில் வழிய வழிய தேய்த்துவிட்டு புலிமார்க் சீயக்காயை டபராவில் கொட்டி வடிகஞ்சியை ஊற்றி களிம்பு போல் குழைத்து வென்னீரை தலையில் ஊற்றி ஒருமுறைக்கு இரு முறை சீயக்காயை நுரை வரும்படி தேய்த்து அலசி விடுவார். தலையோடு உடலும் மனமும் புத்துணர்வாயிருக்கும். (தீபவளியென்றில்லை ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய்க் குளியல்தான்)
மகன் , அம்மா  சொலவதைக் காதில் வாங்கிக்கொள்ளாதவனாய் ஷாம்ப்பு சாஷேயை எடுத்துக்கொண்டு குளிக்கக் கிளம்பினான்.
நான் சொல்றது காதுல விழலையா?
ஏம்மா  எதுக்கும்மா எண்ணெய் தேய்க்கணும் ஷாம்ப் போட்டு குளிச்சா என்ன?
அதிகாலை நல்லெண்ணெய் தேய்ச்சு குளிச்சா கங்கையில் குளிச்ச மாதிரி
அப்போ கடலை எண்ணெய் தேச்சு குளிச்சா காவிரியில குளிச்ச மாதிரியா? போம்மா என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் குளியலறைக்குள் நுழைந்தான்.
அவன் அப்பாவுக்கு மகனின் பகுத்தறிவை எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி.
மகன் குளிக்கச்சென்றதும் மீண்டும் இவன் சிறுவனானான். அம்மா  எப்போது எழுவாள் என்று தெரியாது. இவனை அதிகாலை ஐந்து மணிக்கு எழுப்புவார்கள் அப்போது அம்மா சுழியான் செய்துகொண்டிருப்பாள். அவள் செய்யும் சுழியான்  நாவில் நீர் சுரக்கச்செய்யும். படைக்காமல் உண்ணக்கூடாது என்பதால் எப்போது படைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பான். படைத்து முடித்ததும் புதுசட்டையைக் கூட சட்டைபண்ணாமல் சுழியானை எடுத்து சுவைப்பான். அது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் பலகாரம் என்பதால் எல்லோருக்குமே சுழியான் மீது ஒரு ஈர்ப்பு. ஏன் மற்ற நாட்களில் சுழியான் செய்வதில்லை என்பது இன்று வரை புரியாத புதிராய் உளது. வித விதமாய் கொல்லையில் என்ன விளைகிறதோ அதிலிருந்து தின் பண்டங்களை செய்து கொடுப்பாள் அம்மா. கம்பு அவல், சோளப்பொரி, அவிச்ச தட்டைப் பயிர், பச்சைப்பயிர் பால் கொழுக்கட்டை, வறுத்த கொள்ளு, எள்ளுருண்டை என்று செய்யும் அம்மா சுழியானை  ஏன் தீபாவளிக்கு மட்டுமே செய்கிறாள்என எண்ணிக்கொண்டிருந்தவனை  நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான் மகன்.
குளித்து தலையை துவட்டியபடி அடுப்பறையில் நுழைந்து சுழியானை எடுத்ததும் அம்மா பதறினாள். அய்யைய்யோ படைக்காம சாபிடக்கூடாதுடா என்று செல்லம் கொஞ்சினாள்.
யாருக்கு படைக்கணும் ? என்று கேட்டதும்
அவளுக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று புரியவில்லை நரகாசுரனுக்கா? கிருஷ்ணனுக்கா? என்று சந்தேகம். பொதுவாக சொல்லிவைப்போம் என்று சாமிக்குதான் என்றாள்.
சாமிக்குதான... அப்ப சரி என்று சுழியானைக்கையிலெடுத்தான்.
என்ன... தம்பி? என்று செல்லமாகக் கடிந்துகொண்டாள்.
ஏம்மா ,”நீதான என் சாமி சாப்புடுப்பான்னுகொஞ்சுவ. அப்ப நாந்தான ஒனக்கு சாமி என்றவன்
இந்த சுழியான் எப்படிம்மா செய்றீங்க?
இனிப்புப் பூரணத்த உள்ள வச்சு மைதாவக் கரைச்சு அதுல பூரணத்த முக்கிஎடுத்து எண்ணெயில போட்டா சுழியான் ரெடி”, என்றாள் உற்சாகமாக. இந்த மைதா மாவு ,உருண்டைய உடையாம கெட்டியா புடிச்சுக்கும்.
இந்த உருண்டையைப் பாத்தா மைதாமவுல சிக்கிகிட்டு முழிக்கிற மாதிரியே இருக்கு. நீ அப்பாகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிற மாதிரி” .
அவளுக்கு திக்கென்று ஆனது நம்ம மகனா இப்படி பேசுகிறான் என்று. சற்று சுதாரித்துக்கொண்டு ருசியா இருக்கா இல்லையா?
இருக்கு.. இருக்கு.. என்று வெளியில் வந்தான்.
பட்டாசு சத்தமும் புகை மூட்டமும் காதையும் மூக்கையும் அடைத்தன.
பட்டாசு வெடிக்கிற பழக்கம் சீனாவுல இருந்து நாம கத்துகிட்டதுன்னு யாரோ சொல்லக் கேட்டதா ஞாபகம். இந்த மக்கள் பழக்கங்கள் என்னும் மைதாவுக்குள் சிக்கிக்கொண்டு விழிக்கிறார்களோ என்று தோன்றியது.

நம் ஊரும் கூந்தன் குளம் போல பட்டாசு சத்தமில்லாமலிருந்தால் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தான். நினைக்கவே மகிழ்ச்சியாய் இருந்தது .
அப்படி ஒரு தீபாவளிக்காக மனம் ஏங்கியது.

நன்றி : தமிழ்முரசு தீபாவளி சிறப்பிதழ்