தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, December 18, 2015

ஆ.மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது


                           
எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது அவர் எழுதிய இலக்கியச்சுவடுகள் என்ற நூலுக்கு வழங்கப்பட உள்ளது. அவருக்கு வாழ்த்துகள்.

அவரின் வாழ்க்கைச்சுருக்கம் இங்கே பதிவிடப்படுகிறது.

.மாதவன் 1934ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். அவரது தந்தைபெயர் ஆவுடைநாயகம். தாயார் செல்லம்மாள். இருவருமே குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். .மாதவனின் தாயின் ஊர் கொட்டாரம். தந்தையின் ஊர் நாகர்கோயில். பிளவுபடாத திருவிதாங்கூர் இருந்த காலத்திலேயே அவர்கள் திருவனந்தபுரத்துக்குக் குடியேறிவிட்டனர். அவரது தந்தை திருவனந்தபுரம் சாலை அங்காடியில் சிறுவணிகராக இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த ஆ.மாதவன் மேலே படிக்கவில்லை. திராவிட இயக்க ஆதரவாளராக எழுத ஆரம்பித்தார். அவரது முதல் கதை 1955ல்சிறுகதைஇதழில் வெளியாகியது. பின்னர் மலையாளம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று தீவிர இலக்கியதளத்தில் செயல்படலானார். அவரது முதல் சிறுகதைத் தொகுதி மோகபல்லவி. கடைத்தெருக்கதைகள் இவருக்குப் புகழைத்தேடித்தந்த தொகுதி.

.மாதவன் திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அவரது பெரும்பாலான கதைகள் அமைந்துள்ளன. அவர் விமர்சகர்களால் கடைத்தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகிறார். தமிழிலக்கியத்தில் ஒரு கடைத்தெரு இலக்கியப்பதிவு பெறுவது ஆ.மாதவன் கதைகள் வழியாகவே.

1974ல் ஆ.மாதவனின் முதல் நாவலானபுனலும் மணலும்வெளிவந்தது.கரமனையாற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை அது. அந்நாவல் அதன் யதார்த்தத்துக்காகப் பெரிதும் கவனிக்கப்பட்டது. 1982ல் வெளிவந்த கிருஷ்ணப்பருந்து தான் ஆ.மாதவனின் மிகச்சிறந்த நாவல் என்று விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. 1990ல் அவரது மூன்றாம்நாவலானதூவானம்வெளிவந்தது.

மாதவன் மொழிபெயர்ப்பாளரும்கூட. 1974ல் அவர் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் என குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002ல் சாகித்ய அக்காதமி வெளியீடாக மலையாள எழுத்தாளர் பி கெ பாலகிருஷ்ணனின் இனி ஞான் உறங்ஙட்டே என்ற நாவலை இனி நான் உறங்கட்டும் என்ற பேரில் மொழியாக்கம் செய்தார். மாதவனின் மனைவி பெயர் சாந்தா. இவர்களுக்கு 1966ல் மணமானது; கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்களும் கோவிந்தராஜன் என்ற மகனும் உள்ளனர். 2002ல் மனைவியும் 2004ல் மகனும் மறைந்துவிட்டனர். மாதவன் மகளுடன் வசிக்கிறார்.

மாதவன் 2010 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதை பெற்றார். இது இலக்கிய முன்னோடிகளுக்கு இளையோரால் வழங்கப்படும் விருது

சிறுகதைத் தொகுப்பு
மோகபல்லவி 1974
கடைத்தெருக்கதைகள் 1974
காமினிமூலம் 1975
மாதவன் கதைகள் 1984
ஆனைச்சந்தம் 1990
அரேபியக்குதிரை 1995
.மாதவன் கதைகள், முழுத்தொகுப்பு 2002, தமிழினி பதிப்பகம்
நாவல்கள்
புனலும் மணலும் (1974)
கிருஷ்ணப்பருந்து (1982)
தூவானம் (1990)
மொழியாக்கம்
யட்சி [மூலம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன், யக்ஷி]

இனி நான் உறங்கட்டும் [மூலம் இனி ஞான் உறங்ஙட்டே, பி.கெ.பாலகிருஷ்ணன்]

விருதுகள், நூல்கள்
கடைத்தெருவின் கலைஞன், [ஜெயமோகன் எழுதிய நூல்]

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வழங்கும் விஷ்ணுபுரம் விருது 2010 ஆம் வருடத்திற்கு ஆ.மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் இயல் துறைக்கான 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருது ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது
2014 ஆம் ஆண்டுக்கான  சாகித்ய அக்காதமி விருது  இவரது இலக்கியச் சுவடுகள் நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது

 நன்றி: விக்கிப்பீடியா

Wednesday, December 16, 2015

புதிய கல்விக்கொள்கை எப்படி இருக்கவேண்டும்?


                                           
     
      மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை உருவாக்க நினைத்திருப்பது வரவேற்கத்தகுந்த ஒன்றுகாலத்திற்கேற்ப, கல்விக்கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இந்த நிலையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை எப்படி இருந்தால் சமூகத்திற்குப் பயன்படும் என்று சிந்திப்பது ஒவ்வொரு கல்வியாளரின் கடமை.
கல்வி என்பது அறிவைப்பெறுவது என்ற நிலையில் மட்டுமே இன்றைய கல்வி முறை உள்ளது. மாணவர்களின் ஆளுமைப் பண்பை மேம்படுத்துவதும், சுய சிந்தனையை வளர்ப்பதுமே கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருக்கவேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து. இந்த கருத்துக்கு வலுச் சேர்ப்பதாக இன்றைய கல்வி முறை இல்லை என்பது முக்கியமான குறை.
இந்த குறையைப் போக்குவதாக புதிய கல்விக்கொள்கை அமைய வேண்டும்.
ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உணமை.
     புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு முன் நாடெங்கும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதும் வரவேற்க க்கூடியதுதான். ஆனால் அக்கூட்டங்கள் நடத்தப்பட்ட விதம்தான் போற்றத்தக்கதாக இல்லை. கருத்துக் கேட்பு என்ற பெயரில் நடந்ததெல்லாம் கருத்துத்திணிப்புதான். பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு துறைகளிலும் விவாதிக்க வேண்டிய வினாக்களை அவர்களே வடிவமைத்து உள்ளனர். பள்ளிக்கல்விக்கு 13 தலைப்புகள், உயர்கல்விக்கு 20 தலைப்புகள் . ஒவ்வொரு தலைப்பிலும் பல வினாக்கள். அந்த வினக்களுக்கும் ஆம், இல்லை என்றுதான் நீங்கள் பதிலளிக்கலாம். உதாரணமாக ஒரு வினைவைப் பார்ப்போம். பள்ளிக்கல்வித்துறையில் விவாதிக்க வேண்டிய முதல் கருப்பொருள் தொடக்கக் கல்வியில் மாணவர்களின் கற்றல் வெளிப்பாட்டை உறுதி செய்தல் என்பதாகும் அதில் கேட்கப்பட்டுள்ள இரண்டாவது வினா ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருகிறார்களா? என்பது தான்.
நாடு விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் நம் ஆட்சியாளர்களுக்கு வந்திருக்கிறது. மாணவர்களின் நலனில் ஆட்சியாளர்களுக்குத்தான் எவ்வளவு அக்கரை. இவர்கள் விவாதத்திற்கு விட்டுள்ள பல வினாக்கள் இந்த ரகம்தான். இது ஒவ்வொரு அரசும் இத்தனை காலம் நிகழ்த்திய வழக்கமான ஒரு நிகழ்வேயாகும்.  
உண்மையில் கருத்துக்கேட்புக்கூட்டங்கள் ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். கல்விக்கொள்கை குறித்து கருத்து கூறும் தகுதியும், உரிமையும் மற்றவர்களைக் காட்டிலும்  நேரடிப் பயனாளர்கள் என்ற வகையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமே அதிகமாக உள்ளது.
     கல்வி என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்பதை எந்த அரசும் நினைவில் கொள்வதில்லை. அதன் விளைவாக இன்று சாராய வியாபாரிகளிடமும், கந்துவட்டிக்காரர்களிடமும்,அரசியல் தாதாக்களிடமும் கல்வித்தாய் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறாள். கல்விக்கான விலையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கல்வி தனியார்மயமாவதை முற்றிலும தடுக்க இயலவில்லை என்றாலும் சற்று குறைப்பதற்கான நடவடிக்கைகளாவது எடுக்கலாமல்லவா. புதிய கல்விக்கொள்கையில் இது பற்றிய எந்த விவாதத்திற்கும் வழி ஏற்பட்டுவிடாமல் கவனமாக பார்த்துக்கொண்டுள்ளனர்.
ஒருவர் எழுதிய பாடத்தைப் படித்து மனப்பாடம் செய்து அதிலிருந்து கேட்கப்படும் வினாவுக்கு விடை எழுதும் இந்த அரதப் பழசான கல்விமுறை குறித்து எந்த வினாவும் எழுப்பப் படவில்லை. இப்படி நாம் குறை கூறிக்கொண்டே சென்றால் பட்டியல் நீளும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொண்டு, புதிய கல்விக்கொள்கை கவனம் செலுத்தவேண்டிய சில முக்கியமான பகுதிகளை இவ்வாறு பட்டியலிடலாம்.
கல்வி தனியார் மயமாவது படிப் படியாகக் குறைக்கப் பட வேண்டும்
அது வரை கல்விக்கட்டணங்களை இதற்கு மேல் உயர்த்தக்கூடாது
ஒவ்வொரு குழந்தைக்கும் தொடக்கக் கல்வி அவர்கள் வாழுமிடங்களுக்கு அருகமைப் பள்ளியில்தான் கட்டாயம் வழங்கப் படவேண்டும்.
கட்டாய இலவசக்கல்வி தொடரவேண்டும்
கல்வி உரிமைச்சட்டம் இன்னும் மேம்படுத்தப் படவேண்டும்
அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் படவேண்டும்.
பள்ளிக் கல்வியில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள இடைவெளி நீக்கப்படவேண்டும்
கல்வி முறை மாணவர்களின் சுய சிந்தனையை வளர்ப்பதாக மாற்றப் படவேண்டும்.
பள்ளிக் கல்வியில் தாய் மொழியே பயிற்று மொழியாக்கப்படவேண்டும்.
மாணவர்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மைகள் வளர்க்கப்படவேண்டும்
ஆராய்ச்சிகள் சமுதாயத்திற்கு பயன்படுவதாக அமைய வேண்டும்.
உண்மையிலேயே தரமான ஆசிரியர்களை உருவாக வேண்டுமெனில் தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
அனைத்து பள்ளிகளிலும் ஆய்வகம், விளையாட்டுமைதானம், கணினி, கழிவறைகள் ஆகியன அமைந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் ஒரு நளைக்கு ஒரு பாடவேளை விளையாட்டு கட்டாயமாக்கப் படவேண்டும். குழந்தைகள் விளையாட்டின் மூலம் பல நற் பண்புகளைக் கற்றுக்கொள்வார்கள்.
மாணவர்களிடம் உள்ள தேர்வு அச்சம் நீங்கும் வகையில் தேர்வு முறைகளில் விரும்பத்தகுந்த மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.

நன்றி: குங்குமச்சிமிழ்