தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, January 31, 2016

கானல் வரி கருத்தரங்கம் – 1 அறிவிப்பு



            கானல்வரி,கற்க அறக்கட்டளை, அகிலா பதிப்பகம் இணைந்து நடத்தவிருக்கும் முதல் கருத்தரங்கிற்கு தங்களை அழைப்பதில் மகிழ்கிறோம்.
2016 மேத்திங்கள் 22 ஆம் நாள் விருத்தாசலத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கின் மையத்தலைப்பு  “தெருக்கூத்து”.  இத்தலைப்பை ஒட்டி கீழ்க்கண்ட  தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பலாம்.
1.தெருக்கூத்தின் வரலாறு
2.தெருக்கூத்துப்பாடல்கள்
3.தெருக்கூத்து ஒப்பனைமுறைகள்
4. தெருக்கூத்து நடிகர்கள்
5. தெருக்கூத்து ஆசிரியர்கள்
6. தெருக்கூத்துக்கான கதைகள்
7. தெருக்கூத்து இசைக்கருவிகள்
8. தெருக்கூத்தில் கட்டியக்காரர் பணிகள்
9. தெருக்கூத்து நுட்பங்கள் / உத்திகள்
10. தெருக்கூத்தின் அறிவுசார் பயன்கள்
மேற்கண்ட தலைப்புகளிலும் இதுபோல் தெருக்கூத்து சார்ந்த வேறு தலைப்புகளிலும் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பலாம்.
நாட்டுப்புறவியல் வல்லுநர் குழுவால் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் நூலாக்கப்பட்டு கருத்தரங்க நாளன்று வெளியிடப்படும்.
கட்டுரை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode font)  மட்டுமே தட்டச்சு செய்து word document ஆக kaanalvari2016@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  கட்டுரையாளரின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் 30/03/2016 தேதிக்குள் அனுப்பிட வேண்டும்.
கானல் வரி:
ஒத்த சிந்தனையுடைய நாட்டுப்புறவியலாளர்கள், படைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து தொடங்கியுள்ள அமைப்பு. ஆண்டுக்கு ஒரு கருத்தரங்கு நடத்தி, அதில் அளிக்கப்படும் கட்டுரைகளை நூலாக வெளியிடுவது என்ற நோக்கத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கற்க:
விருத்தாசலத்தில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் கவிஞர் தியாக ரமேஷ் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளை. சிறந்த நாட்டுப்புற கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி ரூ.10000/- பண முடிப்பு வழங்கி சிறப்பு செய்வது எனத்திட்டமிட்டுள்ளார்.
அகிலா பதிப்பகம்:
திரு. நரி அரி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் தொடங்கப்பட்டு சென்னையில் இயங்கி வரும் பதிப்பகம். கருத்தரங்கக் கட்டுரைகளை நூலாக வெளியிட இசைவளித்துள்ளார்.
கருத்தரங்க அமைப்பு:
  கருத்தரங்க நாளில் காலையில் கருத்தரங்கமும் மாலையில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் நடைபெறும். கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வழங்குபவர்களுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ், கருத்தரங்கில் வெளியிடப்படும் நூல் ஆகியன வழங்கப்படும். கருத்தரங்கில் கலந்துகொள்ள பதிவுக்கட்டணம் எதுவும் இல்லை.
கானல்வரிக் குழு:
முனைவர் எழிலவன்
முனைவர் பல்லவி குமார்
முனைவர் இரத்தின புகழேந்தி
முனைவர் நவஜோதி
முனைவர் செந்தில்குமார்
திருமதி வெற்றிச்செல்வி
ஓவியர் திரு.கோவிந்தன்
கவிஞர் தியாக ரமேஷ்
திரு ந.இரமேஷ்பாபு
திரு. ரொசாரியோ

தொடர்பு முகவரி:
இரத்தின புகழேந்தி
18, தங்கம் நகர்
பூதாமுர்
விருத்தாசலம் – 606001

கைபேசி:9944852295

Tuesday, January 5, 2016

முக நூல் கவிதைகள் 13


1.குட்டி வானத்தை
பொருட் காட்சியில்
வாங்கியதோடு
படுக்கையறையின்
மேற்கூறையாக்கி
பலஆண்டுகளாயிற்று
ஒவ்வொரு இரவிலும்
எங்களைக்காண
பிறைநிலாவும்
விண்மீன்களும்
கோள்களும்
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்
வந்தனர்.
அழுக்கான
வானத்துக்கு
வெள்ளையடிக்கும்
நாளில்
தென்னை விளக்குமாற்றின்
தீண்டுதலில்
உதிர்ந்தன 
விண்மீன்களும்
தரையில் கிடந்த
நிலவையும்
குப்பைத் தொட்டியில்
போட்டாயிற்று
நிலா பார்க்காமல்
உறங்குவது
எப்படி?
எங்காவது
பொருட்காட்சி
நடக்கிறதா
சொல்லுங்களேன்.

2. ஒரு புளியமரம்
குழம்புக்கு 
புளி மட்டும் தருவதில்லை
குழந்தைகள்
ஊஞ்சலாட
தோள் மட்டும் தருவதில்லை
கல்லெறிந்த
சிறுவருக்கு
பிஞ்சுகளை உதிர்ப்பது
மட்டுமல்ல
தன் தழைகளை
மருந்தாகத் தருவது
மட்டுமல்ல
உயிர்நீத்த பின்
உரலாவது மட்டுமல்ல
எங்களுக்கு 
வகுப்பறையாகவும்தான்
அதன் வயிற்றில்
ஆணியைச்
செருகி
கரும்பலகையைத்
தூக்கிலிடுவோம்
கைகளாய் நீளும்
அதன் வேர்
முடிச்சில்
சாக்பீஸ் கொடுக்க
எங்களை
அமர்த்தி
பாடம் நடத்தத்
தொடங்குவார்
புளியமர வாத்தியார்.

3. நாம் பிள்ளைப் பருவத்தில்
துள்ளி விளையாடியதை
நினைவூட்டுகின்றன
இருசக்கர ஊர்தியினடியில்
நழுவும்
மழைக்கால
சாலைகள்

4. நடக்கச் சென்றவனை
ஓட வைக்கிறது
மழை.

5.மாணவர் கற்றுக் கொடுக்கிறார்
ஆசிரியருக்கு
கார் ஓட்டுவதற்கு

6. வாரக் கடைசியைக்
கொண்டாடுவோம்
மாதக் கடைசியில்
திண்டாடுவோம்.

7. ஊர்திச் சக்கரங்களின்
எண்ணிக்கையிலும்
வீட்டு விலங்குகளின்
விலையிலும்
உயர்ந்துகொண்டிருக்கிறது
தமிழரின் வாழ்க்கைத் தரம்.

8. டியோடரண்ட்
பூசாத எழுத்தின்
வியர்வை நெடியை
சகித்துக்கொள்வோமாக.

9. சொல்லுக்கும்
செயலுக்கும்
இடையில்
ஏன்
வெளி
அதுவும்
இவ்வளவு
அகலமாஅக!

10. இது 
எந்த கடைவீதியிலும்
கிடைக்காது
இலக்கியவான்களுக்கு
தேவைப்படலாம்
சொற்களை சலித்தெடுக்க
சோதிக்க விரும்பினால்
மிஞ்சுவது 
ஒற்றைச் சொல் மட்டுமே
எழுதுவோமா
வாழ்நாள் முழுவதும்
அந்த ஒற்றைச்சொல்
இலக்கியத்தை!

11. முன் தயாரிப்பின்றி
உள்ளே சென்ற
உதயநிதியை
செல்லக்குட்டிகள்
சந்தானமாக்கி
வெளியேற்றுகின்றனர்

12. நேர்க்கோட்டுப் பாதையில்
சென்றுகொண்டிருக்கும்
போது
அதன் சாய்வை 
மனம் நினைக்க
எக்சும் தெரியாமல்
ஒய்யும் தெரியாமல்
ஆயத் தொலை வடிவியலாய்
அச்சுறுத்துகிறது
வாழ்க்கை.

13. கவிதைக்கா
பொய்
அழகு
கவிதைக்கு
பொய்யா
அழகு
கவிதைக்கு
பொய்
அழகா?


Saturday, January 2, 2016

பயிற்சியா……? அலறும் ஆசிரியர்கள்.


                    
          
            பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பணியிடைப்பயிற்சிகள் வழங்கப்படுவது உண்டு. அது தேவைதான். புதிய கற்பித்தல் உத்திகளை நடைமுறைப்படுத்தவும், வகுப்பறைச் சூழலில் ஆசிரியர் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விவாதித்து அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதாகவும்  ஆசிரியர்களுக்குள் கலந்துரையாடி துறை சார்ந்த வளர்ச்சிக்கு வித்திடுவதாகவும் அமையும் எனில் கட்டாயம் பணி இடைப்பயிற்சிகள் தேவைதான். ஆனால் சமீப காலமாகக் கல்விதுறையில் நடைபெறும் பயிற்சிகள் மேலே கூறியவாறு நடைபெற வில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
 இந்த பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு கல்வித்துறையில் மூன்று அமைப்புகள் உள்ளன. அனைவருக்கும் கல்வித்திட்டம்(SSA) ,அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் (RMSA), மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(DIET) ஆகிய திட்டங்களின் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஓர் ஆண்டுக்கு ஓர் ஆசிரியர் (SSA) மூலம் 20 நாட்கள் பயிற்சி பெறவேண்டும். குறுவட்ட வள மையம் எனப்படும் (CRC)இல் 10 நாட்களும் வட்டார வள மையம் எனப்படும்(BRC)இல் 10 நாட்களும் இந்த பயிற்சிகள் வழங்கப்படும். (RMSA) மூலம் பாடம் தொடர்பான பயிற்சி 10 நாட்களும் மதிப்பீட்டு முறை சார்ந்த பயிற்சி 3 நாட்களும் நிர்வாகம் சார்ந்த பயிற்சி 3 நாட்களும் TAN EXEL எனப்படும் பயிற்சி 5 நாட்களும் (அரசு பள்ளி மாணவர்களை மாநில மாவட்ட அளவில் முதலிடம் பெற வைப்பதற்கான சிறப்புப் பயிற்சி) ஆகிய பயிற்சிகள் நடைபெறும். (DIET) மூலம் சுகாதாரப் பயிற்சி, வாழ்வியல்திறன் பயிற்சி பாடங்களில் உள்ள கடினப்பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை எளிமைப்படுத்தும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இவை தவிர ஆண்டுக்கு ஒரு முறை வாக்காளர் கணக்கெடுப்புக்கான பயிற்சி மற்றும் பணிகள், 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் பணி மற்றும் பயிற்சி (உள்ளாட்சி,சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் தனித்தனியே), 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கிடுவதற்கான பயிற்சி மற்றும் பணி பொருளாதாரக் கணக்கெடுப்புப் பயிற்சி. என பல்வேறு பயிற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகின்றன. பயிற்சிகள் ஒரு அளவோடு இருந்தால் அது ஊக்கமளிப்பதாக அமையும். அளவுக்கு அதிகமாக பயிற்சிகள் வழங்கப்படுவதால் அவை ஆசிரியர்களுக்கு அலுப்பூட்டுவதாக உள்ளன என்றால் கல்வித்துறை சாராத பயிற்சிகள் கூடுதல் சுமையாக அமைகின்றன.
            பயிற்சி வழங்குவதற்கான கருத்தாளர்கள் பற்றாக்குறை கல்வித்துறையில் உள்ளது. சிறந்த ஆசிரியர்கள் பலர் கருத்தாளர்களாக முன் வருவதில்லை. (SSA) திட்டத்தில் பயிற்சிகள் வழங்குவதற்கு (BRT) எனப்படும் வட்டார வளமைய ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு பள்ளியில் பாடம் நடத்திய அனுபவம் இல்லை நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் பள்ளியில் ஆசிரியர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது இப்படி என்றால் (RMSA) திட்டத்தில் அதற்கும் வழி இல்லை. அலுவலர்களுக்கு நெருக்கமான ஆசிரியர்களே இங்கு கருத்தாளர்கள். கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு சில நேரங்களில் கல்லூரி பேராசிரியர்களைப் பயன் படுத்துகின்றனர். பள்ளிக் கல்விக்கும் பேராசிரியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமையால் பயிற்சியின் நோக்கம் பல வேளைகளில் நிறைவேறாமலே போய்விடுகிறது. மொத்தத்தில் பயிற்சிகள் என்பது அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை செலவு செய்வதற்கான ஒரு சடங்காக ஆகிவிடுகிறது. ஓர் ஆசிரியர் ஓர் ஆண்டில் 20 முதல் 40 நாட்கள் வரை பயிற்சிக்காக செல்லவேண்டிய நிலை உள்ளது. ஒரு பள்ளியில் 10 ஆசிரியர்கள் இருந்தால் 5 ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுவார்கள் மீதமுள்ள 5 ஆசிரிய்ர்கள்தான் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். இது அவர்களுக்கு கூடுதல் சுமையாகவே உள்ளது. அந்த கற்பித்தல் நாட்களை பயிற்சிக்கு சென்ற ஆசிரியர் எவ்வாறு ஈடு செய்வார் என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை. இவை ஒரு புறமிருக்க இன்னும் பல்வேறு பணிகளையும் ஆசிரியர்கள் செய்யவேண்டியுள்ளது
            மாணவர்களுக்கு சீருடைகள், பாடநூல்கள், காலணிகள், பை போன்ற நலத்திட்டப் பொருள்களை அலுவலகத்திலிருந்து பெற்று வந்து வழங்குவது, அதற்கான பதிவேடுகளைப் பராமரிப்பது,மூவகைச்சான்றுகள் (சாதி,வருமானம்,இருப்பிடம்) பெறுவதற்கான விண்ணப்பங்களை நிரப்பி உரிய அலுவலகத்தில் சேர்த்து சான்றுகளைப் பெற்று வழங்குவது, மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றுக்கான தேவைப்பட்டியல் தயாரிப்பது, அவற்றைப் பெற்று மாணவர்களுக்கு வழங்குவது, வழங்கிய விவரங்களை இணியத்தில் பதிவிடுவது. பெண்கல்வி ஊக்கத்தொகை, சாதி வாரியான உதவித்தொகை, power finance, தேசிய திறனறித்தேர்வு, ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனறித்தேர்வு போன்ற உதவித்தொகைகள் பெறுவதற்காக மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கிட வங்கிக்கு சென்று விண்ணப்பப் படிவங்கள் பெற்றுவந்து அவற்றுக்குத்தேவையான ஆவணங்களை மாணவர்களிடம் பெற்று விண்ணப்பத்தை நிரப்பி வங்கியில் கொடுத்து கணக்கு தொடங்கி அந்த எண்களையும் மற்ற விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றுவதோடு குறுந்தகடாகவும் அச்சிட்ட நகலாகவும் உரிய அலுவலகங்களுக்கு வழங்குவது, பஸ் பாஸ் பெறுவதற்கு போக்குவரத்துக் கழக அலுவலகம் சென்று அதற்கான நடைமுறைகளை மேற்கொள்வது என அந்த பட்டியல் நீளும். இவை தவிர தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, வரையறுக்கப்பட்ட விடுப்பு, மருத்துவ விடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு, மகப்பேறு விடுப்பு என பல்வேறு விடுப்புகளை எடுக்க நேரும். இவையேல்லாம் போக மீதமுள்ள நாட்களில்தான் கற்பிக்க முடியும்.
            இவையெல்லாம் முழுமையான கற்பித்தலுக்கு இடையூறாகவே உள்ளன. இவற்றை சரி செய்யவேண்டுமெனில்
ஆசிரியர்களை கற்பித்தல் பணி சாரத பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி நாட்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
நலத்திட்டங்களை வழங்கிட தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும்
துறை சார்ந்த வல்லுநர்களை பயிற்சிக்கான கருத்தாளர்களாக நியமிக்க வேண்டும்.

ஒவ்வொரு பயிற்சியும் உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.