தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, August 18, 2016

ஆசிரியர் பணியில் வெள்ளிவிழா


இடைநிலை ஆசிரியர் பயிற்சியை 1989 ஏப்ரலில் முடித்தாலும், பட்டயமும் சான்றிதழும் 1989 ஜூனில்தான் கிடைத்தன. 1989 ஆகஸ்ட் 10 ஆம் தேதி அப்பாவின் நண்பர் திரு கேசவன் அவர்கள் தாளாளராக இருந்த சு.கீணனூர் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விடுப்புப் பதிலி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். எனக்காகவே ஆசிரியர்கள் திரு.மகாலிங்கம், திரு.ஜெயராமன், திரு.கேசவன் ஆகியோர் மருத்துவ விடுப்பில் சென்றனர். இப்படி முதல் ஆறுமாதம் கீணனூர் பள்ளியில்தான் என் ஆசிரியர் வாழ்வு தொடங்கியது. என் தந்தையும் இப்பள்ளியில்தான் தன் பணியைத்தொடங்கினாராம்.
அதன் பிறகு 19.8.1991 இல் தொழூர் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பணி கிடைத்தது. அங்கு ஒரு 8 ஆண்டுகள். அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டுவிழா சுற்றுவட்டார ஊர்கள் வரை பிரபலமானது. மாணவர்களின் பல திறமைகளை வெளிக்கொணர்ந்தோம். கல்விச்சுற்றுலாவும் மாணவர்களுக்கும் எங்களுக்கும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொடுத்தது. அப்போது தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய திரு.ராஜகோபால் அவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் மெல்லக்கற்கும் மாணவர்களை தனியாகப் பிறித்து சிறப்பு கவனம் செலுத்தி அவர்களையும் மற்ற மாணவர்களுக்கு இணையாகக் கொண்டு வருவார். இப்போது உள்ளதுபோல் அன்று எந்த சிறப்பு திட்டங்களும் கிடையாது. அவரே தன் சொந்த அனுபவத்தில் இத்தகைய செயலைச்செய்தது, இன்று நினைக்க வியப்பாக இருக்கிறது. அவரைத் தொடர்ந்து தலைமை ஆசிரியராக வந்த திரு.சதாசிவம் அவர்கள் வேதாத்திரி மகரிஷியின் சீடர். இயற்கை உணவு எளிய உடற்பயிற்சிகளில் ஆர்வம் உடையவர். எங்களுக்கும் அவ்வப்போது அவற்றைப் பழக்குவார். அலுவலகப் பணிகளைக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. அப்பள்ளியில் பணியாற்றியபோதுதான் டெல்லியில் ஒரு மாதகால பொம்மலாட்டப்பயிற்சியைப்பெற்றேன். அறிவொளி இயக்கத்தில் ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளராக ஓராண்டுகாலம் மாற்றுப்பணியாற்றினேன். கம்மாபுரம் ஒன்றியம் முழுக்க கற்றலுக்கான கலைப்பயணம் சென்றது இன்றும் பசுமையான நினைவுகள். திரு. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நட்பு கிடைத்ததும் அப்போதுதான். அன்றைய தென்னார்க்காடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் அவர்.
அதன்பிறகு அரசு பணி கிடைத்து 19.01.1999 இல் பெலாந்துறை தொடக்கப்பள்ளியில் பணியில் சேர்ந்தேன். அங்கு ஒராண்டு பணிக்குப்பின் கார்குடல் நடுநிலைப்பள்ளிக்கு பணிமாறுதல் பெற்றேன். அப்பள்ளியில்தான் பல செயல்பாடுகளைச் சோதனை அடிப்படையில் நிகழ்த்திப்பார்த்தேன். அதற்கான ஒத்துழைப்பு பெற்றோர் ஆசிரியர் தலைமை ஆசிரியர் என அனைத்து தரப்பிலும் சிறப்பாகக் கிடைத்தது பள்ளிக்கு செல்லாத நாடோடி சமூகமான சாதிப்பிள்ளை மாணவனை பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தேன். நடு நிலைப்பள்ளி அளவில் சாரணர் இயக்கத்தைத்தொடங்கி மூன்று மாணவர்களை ஆளுநர் விருது பெற வைத்தேன். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்களைப்பங்கேற்க வைத்து குழந்தை விஞ்ஞானிகள் பட்டம் பெற வைத்தேன். மாணவர்களுக்கான இதழை ”தளிர்” என்ற பெயரில் அச்சிட்டு வெளியிட்டேன். மாணவர்களே தயாரித்த மூலிகைப் பல்பொடியை பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளூர் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தினோம். முன்னோடி சாரணர் ஆசிரியர் பயிற்சி பெற்றதும் இங்கு பணியாற்றியபோதுதான். மாணவர்களுக்கான ஓவியப் பயிலரங்கை ஓவியர் கோவிந்தன் ஓவியர் காசி அவர்களின் ஒத்துழைப்போடும் மகளிர் சுய உதவிக்குழுவின் ஒத்துழைப்போடும் நடத்தினோம்.
அதன் பிறகு வேப்பங்குறிச்சி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டபோது விருப்ப மாறுதலில் அங்கு சென்று ஓராண்டு பணியாற்றினேன். அங்கும் அறிவியல் இயக்க ஆய்வுகள் தொடர்ந்தன. பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு விதை வங்கியை ஏற்படுத்தினோம். சூரிய ஒளியைக்கொண்டு குடிநீரை சூடேற்றும் எளிய சாதனத்தை உருவாக்கினோம்.
பின்னர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பணியாற்றிடும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு இலக்கிய மன்றச்செயலாளராக செயல்பட்டு பேராசிரியர் நன்னன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களைப் பள்ளிக்கு அழைத்து மாணவர்களிடையே தமிழ் உணர்வை ஏற்படுத்தினேன். குறுவட்ட வளமைய ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் பதவி உயர்வு கிடைக்காமையால் கணக்கில் இளங்கலைப்பட்டம் பெற்று பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று விரும்பிய இடம் கிடைக்காமையால் கிடைத்த ஊரைத்தேர்ந்தெடுத்தேன். ஆனால் அங்கு சென்று பணியாற்றிட விருப்பமின்மையால் அரசியல் செல்வாக்கை முதன்முதலாக பயன்படுத்தவேண்டியதாயிற்று. அப்படித்தான் தொரவளூர் பள்ளியில் சேர்ந்தேன். அப்போதுதான் சமச்சீர் கல்வி அறிமுகமானது. அதனைத்தொடர்ந்து முப்பருவக் கல்வியும் தொடர் மதிப்பீட்டு முறையும் அறிமுகமானது. சுட்டி விகடன் இதழில் நண்பர் கணேசன் வாயிலாக சரவணன் அவர்களின் தொடர்பும் கிடைத்தது. வளரறி மதிப்பீடுகளுக்கான எளிய செயல்பாடுகளை ஊடகத்தின் வாயிலாகவும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு பணி நிரவலில் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் மன்னம்பாடி பள்ளிக்கு செல்ல நேர்ந்தது. இப்பள்ளியில் முதலில் சில கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்தாலும் தொடர்ந்து என்னால் இயன்ற சில பணிகளை இன்று வரை தொடர்கிறேன்.
மொத்தத்தில் இப்பணி, ஒரே வேலையைத் தொடர்ந்து 25 ஆண்டுகள் செய்த அலுப்பை சில நேரங்களில் ஏற்படுத்தியிருந்தாலும் வெவ்வேறு விதமான குணங்களையுடைய பத்தாயிரம் மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன், அவர்களோடு கலந்துரையாடியிருக்கிறேன், அவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறேன் என நினைக்கும்போது மிகவும் நிறைவாகவே உள்ளது.
அதைவிட என்னிடம் படித்த மாணவர்கள் பலர் இன்றும் தொடர்பில் உள்ளனர். முகநூல் நண்பர்களாக உள்ளனர் என்று நினைக்கும்போது இப்பணி நிச்சயம் ஒரு வரமாக்க் கிடைக்கப் பெற்றதுதான்.

இப்பணியில் என்னுடன் பயணித்த சக ஆசிரியர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். நீங்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை நண்பர்களே. இயன்றதைச் செய்வோம் இதயத்தால் செய்வோம்.
























Thursday, August 11, 2016

கோச்சிங் செண்டர்களாக மாறிவரும் அரசு பள்ளிகள்.

     


                     
     ஆசிரியர் என்பவர் மாணவர்கள் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தரக்கூடிய ஃபெசிலிடேட்டர் ஆக இருக்கவேண்டும் என்பதே நவீன கல்விமுறையின் கொள்கையாக உள்ளது. ஆனால் நடைமுறையில் நம் ஆசிரியர்களால் அப்படி இருக்க முடிகிறதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை நிலை. இதற்குக் காரணம் ஆசிரியர்கள் மட்டுமல்ல. அவர்களை அப்படி இருக்கவிடாமல் செய்கிற நமது அரசும்தான்.
     மாணவர்களை மதிப்பெண் பெறுகிற இயந்திரமாக மட்டுமே பார்க்கும் நிலை இருக்கின்ற வரை நம் ஆசிரியர்கள் ஃபெசிலிடேட்டர்களாக இருப்பது சாத்தியமிலை. அப்படி இல்லாமிலிருப்பதைக்கூட சகித்துக்கொள்ளலாம். அனால் ஒவ்வொரு ஆசிரியரும் டீச்சராகக்கூட இனி இருக்கமுடியாது. வெறும் கோச்சராக மட்டுமே காலம் தள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். நம் ஆட்சியாளர்களும் உயர் அதிகாரிகளும் இந்த நிலைக்கு தமிழக ஆசிரியர்களைத் தள்ளியுள்ளனர்.
     நூறு விழுக்காடு தேர்ச்சி என்ற இலக்கின் மூலம் கற்பித்தல் என்னும் செயல்பாட்டிற்கு கொஞ்சம் கொஞ்சமாக மூடுவிழா நடத்திவிடுவார்கள். கடந்த ஆண்டு 90% தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு இலக்கு 100% ஆகும். இதனை மேலோட்டமாக பார்க்கும் பொதுமக்கள் நல்ல முயற்சிதானே என்று எண்ணுகின்றனர். ஆனால் இது முழுமையான கற்பித்தலுக்கு எதிரான செயலாகும். கல்வி என்பது சிறுவர்களிடையே ஆளுமைப் பண்பை வளர்க்க வேண்டும். அப்படியெனில் ஒருவரின் உடல் உள்ளம், ஆன்மா ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியே ஆளுமைக்கு அடிப்படை. இவற்றைப்பறியெல்லாம் கவலைப்படாமல் மதிப்பெண் பெறுவது மட்டும்தான் சிறந்த கல்வி என்ற நிலைக்கு வந்திருக்கிறது இன்றைய அரசு. அதனால்  மாணவர் மைய கல்வி என்பது  மதிப்பெண் மையக்கல்வியாக  மாறியுள்ளது.
     100% தேர்ச்சி என்ற கொள்கைக்கும் கற்பித்தலுக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் என்றுதானே யோசிக்கிறீர்கள். 100% தேர்ச்சி என்பது வழக்கமான கற்பித்தல் முறையைப் பின்பற்றி நிச்சயமாக பெறமுடியாத ஒன்று. அதற்கென சில முறைகளை பின்பற்றிட உயர் அலுவலர்களே ஆசிரியர்களுக்கு மறைமுகமாக வலியுறுத்துகின்றனர். ஒவ்வொரு பாடத்தையும் எத்தனை பாடவேளைகளில் முடிக்கவேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. ஒரு பாடநூலில் உள்ள அத்தனைப் பாடங்களையும் ஒரு கல்வியாண்டிற்குள் முடிக்கவேண்டும் என்பதுதான் நியதி.அப்படி முடித்தால் ஓர் ஆண்டில் 3 தேர்வுகள் மட்டுமே நடத்தவேண்டும். நாம் படிக்கும் போது அப்படித்தான் தேர்வு எழுதினோம். காலாணடு,அரையாண்டு முழுஆண்டு என 3 தேர்வுகள் மட்டுமே எழுதுவோம். ஆனால் இன்றைய நிலை அப்படியா உள்ளது. வாரத்தேர்வு, மாதத்தேர்வு, பருவத்தேர்வு, திருப்புதல் தேர்வு, பொதுத் தேர்வு என ஆண்டு முழுவதும் தேர்வுகள், மாணவர்களை அச்சுறுத்தி அச்சுறுத்தி மன அழுத்தத்திலேயே வைத்துள்ளன.  எனக்கு தெரிந்த ஒரு ஆசிரியர் பள்ளி திறந்த முதல்நாளான ஜூன் 1 ஆம் தேதியே 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வைத்தார் . இதனை உங்களால் நம்ப முடிகிறதா? அனால் இது உண்மை.
     அலுவலர்கள் ஆசிரியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால் 10 ஆம் வகுப்பில் எப்படியாவது 35 மதிப்பெண் எடுத்து தேர்ச்சிபெறச் செய்து விடுங்கள் 100% தேர்ச்சி என்ற இலக்கை எளிதாக எட்டிவிடலாம். எப்படியாவது என்பதற்கு நீங்கள் தவறாக பொருள்கொள்ள வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு மதிப்பெண்ணுக்கு சொல்லிக்கொடுத்தாலே போதும் 180 நாள்கள் பள்ளி நடைபெறுகிறது. அதில் ஆசிரியர்கள் விடுப்பு, இதர பணிகள், தேர்வுகள், மாணவர் விடுப்பு என 80 நாட்கள் போனாலும் மீதமுள்ள 100 நாட்கள் சொல்லிக்கொடுத்தாலே 100 மதிப்பெண் பெற்று விடலாம் என எல்லா நடைமுறைகளையும் கணக்காக அணுகுகின்றனர். இவர்களின் கணக்குப்படி ஒரு ஆசிரியர் ஒரு நாளைக்கு ஒரு மதிப்பெண்ணுக்கு மட்டும் நடத்தினால் போதுமா அப்படித்தான் நடத்தமுடியுமா? இதனுடைய விளைவுதான் முதல் வேலை நாளிலேயே தேர்வு வைத்தார் அந்த ஆசிரியர். நமக்கு ஏன் வம்பு என்று பல ஆசிரியர்கள் மாணவர்களைத் தேர்வுக்கு தயார்செய்வதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதனால் முழுமையான கற்பித்தல் நடைபெறாமல். வினாவுக்கான விடையைத் தயார்செய்து மாணவர்களுக்கு வழங்கி மனப்பாடம் செய்து தினமும் எழுதிக்காட்டி அவனை தேர்வுக்கு முழுமையாக தயாரித்து விடுகின்றனர். சைக்கிளை தினமும் ஓட்டி ஓட்டி பயிற்சி எடுத்துக்கொள்வதுபோல் தேர்வை எழுதி எழுதி பயிற்சி எடுக்கின்ற ஒரு பயிற்சிக்கூடமாக பள்ளிகள் மாறிவருகின்றன. இதனால் மாணவர்களின் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் தேர்வும் மதிப்பெண்ணும் மட்டுமே. யார் எப்படிப் போனாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு என் தேர்வு முக்கியம் மதிப்பெண் அதைவிட முக்கியம். இப்படி ஒரு இளைஞர் சமூகத்தை நம் பள்ளிகள் உருவாக்கி வருகின்றன. இது எதிர்காலத்தில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். இப்படி வளரும் ஒருவன் இந்த சமூகத்தைப் பற்றியோ நம் நாட்டைப் பற்றியோ நிச்சயம் கவலைப்பட மாட்டான். இன்றைய மாணவர்கள் எதிர்கால சமூகத்தின் தூண்கள் அல்லவா? இப்படி பலகீனமான தூண்களை நாமே விரும்பி உருவாக்குகிறோமே இது எங்கே போய் முடியப்போகிறது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
     அரசு, கல்வித்துறைக்கு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது. அந்த செலவுக்கு முழுமையான பலன் வேண்டாமா? அதனால்தான் 100% தேர்ச்சியை எதிர்பார்க்கிறது. எப்படி செலவாகிறது இந்த தொகை. அரசு பள்ளியில் மட்டுமல்ல அரசு உதவிபெறும் பள்ளியிலும் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை விலையில்லா திட்டங்கள். மிதிவண்டி, மடிக்கணினி, சீருடை, பை, நோட்டு , பாடநூல், வடிவியல் பெட்டி, நிலவரைபடநூல், செறுப்பு என எல்லாம் விலையில்லாமல். இது உண்மையில் மிகப்பெரிய புரட்சிதான். உண்மையில் தேவையான திட்டங்கள்தான். இவற்றை எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்த முடிகிறதா என்றால் புள்ளிவிவரப்படி முடிகிறது. சீருடையும் பாட நூலும் முழுமையாக வழங்கப்படுகின்றன. மற்ற பொருள்கள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் வழங்கப்பட்டாலும் மாணவர்களுக்குத் தேவைப்படும்போது கிடைப்பதில்லை. பாடநூல், நோட்டுகள் தவிர மற்ற பொருள்களின் தரம் முழுமையாக இல்லை. இந்த திட்டங்கள் மூலம் அலுவலர்கள் முதல் ஆட்சியாளர்கள்வரை அனைவருக்கும் பல கோடி ரூபாய் கமிஷனாகச் செல்கிறது என்பதை பல பத்திகைகளில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் அவற்றைப்பற்றியெலாம் கவலைப்படாமல் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதிக்கின்றனர்.

     10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை விளையாட்டுப் பாடவேளையில்கூட விளையாட விடுவதில்லை. வாழ்க்கைக்கல்வி, நன்னெறிக்கல்வி என எந்த பாடவேளையாக இருந்தாலும் யாராவது ஒரு பாட ஆசிரியர் அந்த பாடவேளையில் அங்கு சென்று அவரது பாடத்தைப் படிக்க வலியுறுத்துவார் அல்லது தேர்வு வைப்பார். அது மட்டுமின்றி காலை மாலை சிறப்பு வகுப்புகள் என அரசு பள்ளிகளும் இன்று மதிப்பெண் ஒன்றே குறியாக செயல்படுவது எதிர்கால சமூகத்திற்கு உகந்தது அல்ல. மதிப்பெண் பற்றிய கவலைகளிலிருந்தும் மன உளைச்சல்களிலிருந்தும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விடுதலை கொடுப்போம் அரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
நன்றி: தினகரன்