தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, May 21, 2017

கோவிந்தன் மலர்தாசன் ஆன கதை




வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தருகிறது. அதையெல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எதையுமே எளிதாக எடுத்துக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் கடந்து செல்பவர்களுக்கு வாழ்க்கை சுவார்ஸ்யமாகிறது. சிறு சிறு பிரச்சனைகளைக்கூட பெரிதாக எண்ணி துயரப்படுபவர்களுக்கு வாழ்க்கை என்றுமே சுமைதான். இவற்றுள் முதல்வகையான மனிதர்தான் நம் மலர்தாசன்.
வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளூம் மனிதர் இவர். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரது வாழ்வின் இளமைப் பகுதியை வாசமுள்ள மலரிது என்று நூலாக வெளியிட்டுள்ளார். 60 பக்க நூல்தான் என்றாலும் வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் சுவார்ஸ்யம் குறையாத அற்புத எழுத்து நம்மை உள்ளிழுத்துச்செல்கிறது. எளிய நடை என்றாலும் முழுக்க உண்மைகள் அதுவே நூலுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. பள்ளி மாணவனாய் அவர் செய்த குறும்புகள் ஏறாளம் எல்லாமே சுவையான நிகழ்வுகள். இளம் வயதில் தாய் தந்தையை இழந்த வலியைக்கூட அவர் சொல்லும் விதம் வாசகர்களுக்கு வாழ்வின் துயரங்களைக் கடக்க ஒரு சிறு துடுப்பாகவேனும் இந்த நூல் பயன்படும். வாழ்க்கை வரலாறு என்றாலே பெரும் தலைவர்கள் சாதனையாளர்கள்தான் எழுதவேண்டும் என்ற நிலையை மலர்தாசன் உடைத்துள்ளார். எளிய மனிதர்களின் வாழ்விலும் சொல்லிக்கொள்ள ஏறாளமான செய்திகள் உள்ளன. அவை மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவலாம் என்கிற நோக்கில் எழுப்பட்ட இந்த தன் வரலாற்று நூல் இதுவரை வந்த தன்வரலாறுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. சிறுவனாக இருந்தபோதே முதன் முதலாக ஒலிப்பெருக்கியில் கோயில் அறிவிப்பு செய்யப்போக அந்த குரல்வளத்தைக்கண்டு காங்கிரஸ் கட்சிக் கூடம் பற்றிய அறிவிப்புக்குச்செல்லும் இவருக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் நட்பு கிடைக்கிறது இவற்றை எல்லாம் அவர் கூறும் விதம் படிப்பவர்களைக் கவர்வதாக அமைந்துள்ளன.
பத்திரிகையில் மாணவராக இருந்தபோதே நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி தனது எழுத்து ஆர்வத்தை வளர்த்துள்ளமை என தன் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒளிவு மறைவின்றி எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. அச்சில் வரப்போகிறது என்பதால் தன்னைப்பற்றிய பெருமைகளை மட்டும் பேசாமல் தனக்கு ஏற்பட்ட சிறுமைகளையும் தோல்விகளையும் அப்பட்டமாக எழுதியுள்ளார். 'உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண் டாகும்" எனப் பாரதியார் கூறியதைப்போல் மலர்தாசன் எழுத்தில் உணமை உள்ளது அதுவே இந்த நூலுக்கு பலம் சேர்க்கிறது.
மல்ர்தாசனின் அரசியல் பயணம் அடுத்த பாகத்தில் வெளிவரவிருப்பதாகக் கூறியுள்ளார் அது எப்போது வரும் என படிப்பவர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நூல்.
வாசமுள்ள மலரிது
ஆ.மலர்தாசன்
தெய்வானைப் பதிப்பகம்
24,சிதம்பரம் சாலை
விருத்தாசலம்

பக்கம்.68, விலை ரூ.80

Sunday, May 14, 2017

தமிழர் ஓவியம் குறித்த பன்னாட்டுக்கருத்தரங்கு

தமிழர் ஓவியம் குறித்த பன்னாட்டுக்கருத்தரங்கு







சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் கற்க அறக்கட்டளை மற்றும் கானல்வரி கலை இலக்கிய பண்பாட்டு இயக்கமும் இணைந்து தமிழர் ஓவியம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு, நூல்வெளியீடு, சிறந்த ஓவியர்களுக்கு விருதுவழங்கும் விழா மற்றும் ஓவியக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகள் 14.05.2017 ஞாயிறு அன்று வடலூர் வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியல் நடைபெற்றன.
கருத்தரங்க தொடக்க விழாவுக்கு ஓ.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்து கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தமிழர் ஓவியம் என்னும் நூலை வெளியிட்டார். முதல்பிரதியை உலகத்தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். முன்னதாக கானல்வரி உறுப்பினர் முனைவர் இரா.செந்தில்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் மா.சந்திரமூர்த்தி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரையர் கழகத் தலைவர் ராமானுஜம் காகிதம் பதிப்பகம் மனோபாரதி ஓவியர் தட்சணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
     அடுத்ததாக நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் செல்லம்மாள், ஓவியர் கோவிந்தன், துளசிராமன், ரமேஷ்பாபு, முனைவர் செந்தில்குமார் முனைவர் இரத்தின புகழேந்தி உள்ளிட்டோர் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தனர்.
மாலை சிறந்த ஓவியருக்கான கற்க அறக்கட்டளையின் கானல்வரி கலை விருது ஓவியர் நெய்வேலி கே. கோவிந்தனுக்கு வழங்க்ப்பட்டது. பாராட்டுப் பட்டையமும் பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. சிறந்த இளம் ஓவியருக்கான விருதும் ஐந்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் பராட்டுப்பட்டயமும் மன்னம்பாடி ஓவியர் தமிழரசனுக்கு வழங்கப்பட்டது. விருதினை அரசுத் துறை முன்னாள் செயலாளர் கி.தனவேல் இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார். பணமுடிப்பினை கற்க அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் தியாக இரமேஷ் அவர்களின் சார்பாக அவரின் சகோதரர் தியாக பாபு அவர்கள் வழங்கினார். விருது பெற்ற ஓவியர்களை கவிஞர் த.பழமலய், பண்ணுருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவரும் தாவரவியல் ஆய்வாளருமான பஞ்சவர்ணம் ஆகியோர் வாழ்த்தினர்.
ஓவியர்கள் தட்சணாமூர்த்தி, ஜேம்ஸ், பாலசுப்ரமணியன், கரோல், கோவிந்தன்,தமிழரசன் ஆகியோரின் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது.
உலகத்தமிழாராய்ச்சி நிறுவன நூலகர் முனைவர் பெருமாள்சாமி நிறைவுரையாற்றினார். கானல்வரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரத்தின புகழேந்தி நன்றியுரையாற்றினார்.