தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, May 21, 2017

கோவிந்தன் மலர்தாசன் ஆன கதை
வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தருகிறது. அதையெல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எதையுமே எளிதாக எடுத்துக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் கடந்து செல்பவர்களுக்கு வாழ்க்கை சுவார்ஸ்யமாகிறது. சிறு சிறு பிரச்சனைகளைக்கூட பெரிதாக எண்ணி துயரப்படுபவர்களுக்கு வாழ்க்கை என்றுமே சுமைதான். இவற்றுள் முதல்வகையான மனிதர்தான் நம் மலர்தாசன்.
வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளூம் மனிதர் இவர். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரது வாழ்வின் இளமைப் பகுதியை வாசமுள்ள மலரிது என்று நூலாக வெளியிட்டுள்ளார். 60 பக்க நூல்தான் என்றாலும் வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் சுவார்ஸ்யம் குறையாத அற்புத எழுத்து நம்மை உள்ளிழுத்துச்செல்கிறது. எளிய நடை என்றாலும் முழுக்க உண்மைகள் அதுவே நூலுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. பள்ளி மாணவனாய் அவர் செய்த குறும்புகள் ஏறாளம் எல்லாமே சுவையான நிகழ்வுகள். இளம் வயதில் தாய் தந்தையை இழந்த வலியைக்கூட அவர் சொல்லும் விதம் வாசகர்களுக்கு வாழ்வின் துயரங்களைக் கடக்க ஒரு சிறு துடுப்பாகவேனும் இந்த நூல் பயன்படும். வாழ்க்கை வரலாறு என்றாலே பெரும் தலைவர்கள் சாதனையாளர்கள்தான் எழுதவேண்டும் என்ற நிலையை மலர்தாசன் உடைத்துள்ளார். எளிய மனிதர்களின் வாழ்விலும் சொல்லிக்கொள்ள ஏறாளமான செய்திகள் உள்ளன. அவை மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவலாம் என்கிற நோக்கில் எழுப்பட்ட இந்த தன் வரலாற்று நூல் இதுவரை வந்த தன்வரலாறுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. சிறுவனாக இருந்தபோதே முதன் முதலாக ஒலிப்பெருக்கியில் கோயில் அறிவிப்பு செய்யப்போக அந்த குரல்வளத்தைக்கண்டு காங்கிரஸ் கட்சிக் கூடம் பற்றிய அறிவிப்புக்குச்செல்லும் இவருக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் நட்பு கிடைக்கிறது இவற்றை எல்லாம் அவர் கூறும் விதம் படிப்பவர்களைக் கவர்வதாக அமைந்துள்ளன.
பத்திரிகையில் மாணவராக இருந்தபோதே நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி தனது எழுத்து ஆர்வத்தை வளர்த்துள்ளமை என தன் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒளிவு மறைவின்றி எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. அச்சில் வரப்போகிறது என்பதால் தன்னைப்பற்றிய பெருமைகளை மட்டும் பேசாமல் தனக்கு ஏற்பட்ட சிறுமைகளையும் தோல்விகளையும் அப்பட்டமாக எழுதியுள்ளார். 'உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண் டாகும்" எனப் பாரதியார் கூறியதைப்போல் மலர்தாசன் எழுத்தில் உணமை உள்ளது அதுவே இந்த நூலுக்கு பலம் சேர்க்கிறது.
மல்ர்தாசனின் அரசியல் பயணம் அடுத்த பாகத்தில் வெளிவரவிருப்பதாகக் கூறியுள்ளார் அது எப்போது வரும் என படிப்பவர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நூல்.
வாசமுள்ள மலரிது
ஆ.மலர்தாசன்
தெய்வானைப் பதிப்பகம்
24,சிதம்பரம் சாலை
விருத்தாசலம்

பக்கம்.68, விலை ரூ.80

Sunday, May 14, 2017

தமிழர் ஓவியம் குறித்த பன்னாட்டுக்கருத்தரங்கு

தமிழர் ஓவியம் குறித்த பன்னாட்டுக்கருத்தரங்குசென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் கற்க அறக்கட்டளை மற்றும் கானல்வரி கலை இலக்கிய பண்பாட்டு இயக்கமும் இணைந்து தமிழர் ஓவியம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு, நூல்வெளியீடு, சிறந்த ஓவியர்களுக்கு விருதுவழங்கும் விழா மற்றும் ஓவியக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகள் 14.05.2017 ஞாயிறு அன்று வடலூர் வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியல் நடைபெற்றன.
கருத்தரங்க தொடக்க விழாவுக்கு ஓ.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை வகித்து கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தமிழர் ஓவியம் என்னும் நூலை வெளியிட்டார். முதல்பிரதியை உலகத்தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். முன்னதாக கானல்வரி உறுப்பினர் முனைவர் இரா.செந்தில்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தொல்லியல் துறையின் முன்னாள் இணை இயக்குநர் மா.சந்திரமூர்த்தி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரையர் கழகத் தலைவர் ராமானுஜம் காகிதம் பதிப்பகம் மனோபாரதி ஓவியர் தட்சணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
     அடுத்ததாக நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் செல்லம்மாள், ஓவியர் கோவிந்தன், துளசிராமன், ரமேஷ்பாபு, முனைவர் செந்தில்குமார் முனைவர் இரத்தின புகழேந்தி உள்ளிட்டோர் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தனர்.
மாலை சிறந்த ஓவியருக்கான கற்க அறக்கட்டளையின் கானல்வரி கலை விருது ஓவியர் நெய்வேலி கே. கோவிந்தனுக்கு வழங்க்ப்பட்டது. பாராட்டுப் பட்டையமும் பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. சிறந்த இளம் ஓவியருக்கான விருதும் ஐந்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் பராட்டுப்பட்டயமும் மன்னம்பாடி ஓவியர் தமிழரசனுக்கு வழங்கப்பட்டது. விருதினை அரசுத் துறை முன்னாள் செயலாளர் கி.தனவேல் இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார். பணமுடிப்பினை கற்க அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் தியாக இரமேஷ் அவர்களின் சார்பாக அவரின் சகோதரர் தியாக பாபு அவர்கள் வழங்கினார். விருது பெற்ற ஓவியர்களை கவிஞர் த.பழமலய், பண்ணுருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவரும் தாவரவியல் ஆய்வாளருமான பஞ்சவர்ணம் ஆகியோர் வாழ்த்தினர்.
ஓவியர்கள் தட்சணாமூர்த்தி, ஜேம்ஸ், பாலசுப்ரமணியன், கரோல், கோவிந்தன்,தமிழரசன் ஆகியோரின் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது.
உலகத்தமிழாராய்ச்சி நிறுவன நூலகர் முனைவர் பெருமாள்சாமி நிறைவுரையாற்றினார். கானல்வரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரத்தின புகழேந்தி நன்றியுரையாற்றினார்.


Wednesday, March 1, 2017

தேர்வுக்கால உணவுகள்தேர்வுக்கு நன்றாக படிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் முக்கியமானது தேர்வுக்கால உணவுமுறை. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். உடல் நலம் சிறப்பாக இருந்தால் மட்டுமே தேர்வுக்கு மாணவர்கள் முழுமையாக தயாராகமுடியும். நம் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்திட நமக்கு தகுத்தியான உடல் நிலை முக்கியம். நம் உடல் நிலையைத்தீர்மானிக்கும் காரணிகளில் முதன்மையானது நாம் உண்ணும் உணவு ஆகும். உணவு உயிரினும் மேலானது. உணவுக்கும் உயிருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.அதனால்தான் நம் இலக்கியங்கள் “ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எனக்குறிப்பிடுகின்றன.
கோடை தொடங்கும்போதுதான் தமிழகத்தில் பொதுத்தேர்வுகளும் தொடங்குகின்றன. கோடைக்காலத்தின் தொடக்கத்தை இளவேனிற்காலம் என்றனர் நம் முன்னோர். பருவகாலங்களுக்கேற்ப உணவுமுறைகளை மாற்றிக்கொள்ளும் பண்பாடு தமிழர்களிடையே உண்டு. கோடையில் குளிர்ச்சி தரும் உணவுகளை உட்கொள்வது நம் மரபு.எனவே நம் மரபு வழியான உணவுப்பழக்கத்தை நாம் தொடர்ந்திருந்தால் இக்கட்டுரைக்கான தேவையே இல்லை. இன்று ஊர்கள் தோறும், தெருக்கள்தோறும் விரைவு உணவகங்கள் தோன்றி நம் உணவுப்பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக மாணவர்களின் உணவுப்பழக்கம்  முற்றிலும் மாறி உள்ளது. வீட்டில் தயாரிக்கும் உணவுகளை விட கடைகளில் விற்கப்படும் கவர்ச்சியான உணவுகளையே மாணவர்கள் விரும்புகின்றனர். குளிர்ச்சி தரும் உணவுகளாக நம் மாணவர்கள் அறிந்திருப்பது குளிர்பானங்களும் ஐஸ்க்ரீம்வகைகளும்தான்.
கோடைக்கேற்ற உணவுகள்:
ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை நீர் குடிப்பது கோடையில் அவசியம். இளநீர், மோர், நீராகாரம் போன்ற நீருணவுகளை அவசியம் குடிப்பது கோடைக்கு ஏற்றது. நம் ஊரில் விளையும் சுரைக்காய், பறங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களை உரியமுறையில் சமைத்து உண்ணலாம். உள்ளூரில் கிடைக்கும் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து நீரில்கலந்து குடிப்பது எக்காலத்த்க்கும் ஏற்றது அதிலும் கோடைக்கு மிகவும் ஏற்றது. தேர்வுக்காலத்தில் மலசிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது படிப்பில் கவனத்தைக்கூட்டும். எனவே எளிதில் எங்கும் கிடைக்கும் முருங்கைக் கீரையை தேவையான அளவு தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. குழந்தைகள் விரும்பி உண்ணும் வெவ்வேறு வகையில் பெற்றோர் சமைத்துக்கொடுப்பது அவசியம். ஒரே மாதிரி சமைக்காமல் ஒரு நாள் கீரையைத் துவட்டியும் இன்னொருநாள் பருப்போடு சேர்த்து சமைத்தும் மற்றொரு நாள் வாழைப்பூவோடு சேர்த்தோ தேங்காய் சேர்த்தோ சமைப்பது சலிப்பின்றி சாப்பிட ஏதுவாக இருக்கும்.தினம் ஒரு பழம் சாப்பிடுவது அவசியம். நம் மக்கள் பழம் என்றாலே ஆப்பிள் ,ஆரஞ்சு, மாதுளை போன்ற விலை மிகுந்த பழங்களை மட்டும்தான் நினைக்கின்றனர்.நகரத்தில் வசிக்கும் வசதியான மாணவர்கள் அதை உண்டால் நாம், நம் ஊரில் அதிலும் நம் தோட்டத்தில் கிடைக்கும் எளிய பழங்களை உண்பதே போதும். வாழைப்பழம், கொய்யா,நுணா,கோவை பொன்ற எளிய பழங்களே போதும். அதிலும் நுணாப்பழம் உண்பது இன்று கிராமத்து மாணவர்களிடம் கூட இழிவானதாகக் கருதப்படுகிறது. ஆனால் அதை சாறாக்கி நோனி ஜூஸ் என்று பாட்டிலில் அடைத்து விற்றால் அதை வாங்கி குடிப்பது நாகரிகமானது என்கிற மனப்போக்கை நம் ஊடகங்கள் நம்மிடம் ஏற்படுத்தி உள்ளன.
பெற்றோர்கள் கவனித்திற்கு
உடல் உழைப்பை விடவும் மூளை உழைப்பு கடினமானது.மாணவர்கள் தேர்வுக்கு கண் விழித்து படிப்பதனால் உடல் மிகுந்த  சோர்வடைவதோடு உடல் சூடும் அதிகரிக்கும்.எனவே தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு அவ்வப்போது தெம்பு அளிக்கும் வகையில் தேவையான சிற்றுண்டிகளை வீட்டில் தயாரித்துக்கொடுப்பது அவசியம். நீரில், ஆவியில் வேகவைத்த எளிதில் சீரணிக்கக்கூடிய உணவுகளைக் கொடுப்பதே நல்லது. இட்டலி, இடையாப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகள் சிறந்தவை. இரவில் பாலும் பகலில் பானகமும் ஏற்ற குடிப்புகள். புடலங்காய் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டி மோரில் ஊரவைத்து தேவையான அளவு உப்பிட்டு காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே சாப்பிடக்கொடுக்கலாம். அதுபோல் வெள்ளரிக்காய், நெல்லிக்காய் போன்ற காய்களை கொடுப்புது உடலுக்கு புத்துணர்வு தரும். அவல் ,கடலை மிட்டாய் முளைகட்டிய பருப்புவகைகள் ஆகியவற்றை நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக உண்ணப் பழக்குவதும் பெற்றோர் கடமை. அளவுக்கு அதிகமாக உணவுகளை பாசம் என்ற பெயரில் திணிப்பதைத் தவிர்க்கவேண்டும். இரவில் அதிக நேரம் கண்விழித்து படிப்பதைத் தவிர்த்து போதிய அளவு ஓய்வு எடுக்க அனுமதிக்கவேண்டும். அவர்கள் விரும்பி உண்பார்கள் என்று சாக்லேட் போன்ற அதிக கொழுப்புடைய உணவுப்பொருள்களை தேர்வு நேரத்தில் தவிர்க்கவேண்டும். சளி பிடிக்காமல் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்கும்படி சுற்றுப்புறத்தையும் உணவு உண்ணும் பாத்திரங்களையும் சுகாதாரமாக வைத்துக்கொள்வது அவசியம். மாணவர்களிடம் இருசக்கர வாகனங்களைக் கொடுப்பதையும் தவிர்த்தால் அவர்களுக்கு விபத்து ஏற்படாமல் காக்கலாம். உணவில் ஆறு சுவைகளும் இடம்பெறும்படி சமைத்திட வேண்டும்.
தவிர்க்கவேண்டிய உணவுகள்

குளிர்பானங்களை அவசியம் தவிர்க்கவேண்டும். அதற்கு பதில் பழங்களை சாறுபிழிந்து கொடுக்கலாம். அதை விட பழங்களை அப்படியே உண்பதே சிறந்தது. அசைவ உணவுகள், மசலா நிறைந்த உணவுகளை கட்டாயம் தேர்வு நேரத்தில் தவிர்க்க வேண்டும். பள்ளிக்கு அருகிலோ தெருவிலோ திறந்த வெளியில் விற்கும் உணவுப்பொருள்களை வாங்கி உண்ணாமலிருப்பது அவசியம்.பீசா,நூடுல்ஸ், ஃப்ரைடுரைஸ் ஆகிய விரைவு உணவு வகைகளையும் தேர்வுக்காலத்தில் மட்டுமல்ல எப்போது தவிர்க்கவேண்டும்.  மிகுந்த காரம் , மிகை இனிப்பு ஆகிய சுவையுள்ள உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.  சிறப்பான உடல் நலத்துடன் தேர்வை எதிர்கொண்டு வேற்றிபெற வாழ்த்துகள்.

Tuesday, February 28, 2017

தமிழர் ஓவியம் பன்னாட்டுக்கருத்தரங்கு

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், கற்க அறக்கட்டளை மற்றும் கானல்வரி கலை இலக்கிய இயக்கம் இணைந்து வடலூர் வள்ளலார் கலை அறிவியல் கல்லூரியில் 07.05.2017 இல் நடத்தவிருக்கும் பன்னாட்டுக்கருத்தரங்கிற்கு தமிழர் ஓவியம் என்ற மையத்தலைப்பில் சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரை அனுப்ப நிறைவு நாள் : 30.03.2017.மேலும் விவரமறிய அழைப்பைப் பார்க்கவும்.


Tuesday, January 17, 2017

கல்வி அடைவுத்திறன் தேர்வுகள் எதற்காக?


 


    

 

     மத்திய மாநில அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் நிதியின் அளவு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தேசிய இடைநிலைக்கல்வித்திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் பல கோடி ரூபாயை கல்விக்காக செலவு செய்யும் அரசு அந்த நிதியினால் விளையும் பயனை அறிந்துகொள்ள விரும்புவது இயல்பான ஒரு நடைமுறை ஆகும். அதற்கென பல தர மதிப்பீட்டுக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றுள் ஒன்றுதான்  அடைவுத்திறன் தேர்வு. இத்தேர்வு இரு நிலைகளில் நடைபெறுகிறது. 1.தேசிய அடைவுத்திறன் தேர்வு (NAS) எனப்படும் (National Achievement survey)

 2. (SLAS) State Level Achievement Survey எனப்படும் மாநில அடைவுத்திறன் தேர்வு. இத்தேர்வினை  (SSA) அனைவருக்கும் கல்வி இயக்கம் முன்னின்று நடத்துகிறது. 2012 ஆம் ஆண்டிலிருந்து இத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான மாநில அடைவுத்திறன் தேர்வு அண்மையில் நடைபெற்றது. முடிவுகள் வெளிவரும் நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை இத்தேர்வு ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்த ஆண்டுக்கான கல்வித்திட்டங்களும் பயிற்சிகளும் வடிவமைக்கப்படுகின்றன.

முன்பு இத்தேர்வுகளை ஊடகங்கள் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. இப்போது இத்தேர்வுகளுக்கு தேசிய முக்கியத்துவம் கிடைத்துள்ளது. உலக அளவில் மாணவர்களை மதிப்பிடுவதற்கான  பல தேர்வு முறைகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை  Programme for International Student Assessment (PISA), Progress in International Reading Literacy Study (PIRLS) , Trends in International Mathematics and Science Studies (TIMSS). இந்த தேர்வுகளுக்கு இணையாக செவ்வியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நம் நாட்டு அடைவுத்திறன் தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

     தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் கற்றுக்கொண்ட திறன்களை  சோதித்து அறியும் பொருட்டு நடைபெறும் தேர்வுகள்தான் இவை.  இத்தேர்வில் மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பங்குபெறுகின்றனர்.. மொழிப்பாடம் கணக்கு மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் பல்வேறு நிலைகளில் கற்றல் அடைவுத் திறன்களை சோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வினாக்களைக்கொண்ட வினாத்தாள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தேர்வு நடைபெற்றாலும் அனைத்து பள்ளிகளிலும் நடைபெறுவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.

     இத்தேர்வு பள்ளியில் நடைபெறும் வழக்கமான தேர்வுகளிலிருந்து மாறுபட்டது. போட்டித்தேர்வுகளுக்கு வழங்கப்படுவது போல் பல விடைகளிலிருந்து ஒரு விடையைத் தேர்வு செய்யும் முறையில் வினாக்கள் அமைந்திருக்கும். இதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பல திறன்களையும் எவ்வாறு கற்றுள்ளனர் எந்த திறன்களில் பின்தங்கியுள்ளனர் என்பதை எளிதாக மதிப்பிடும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும் மாணவர்கள் கற்ற திறன்களை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தும் வகையிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

மொழிப்பாடங்களில் கேட்டல் திறன், சொற்களஞ்சியத்திறன், படித்தல் திறன் ஆகியவை மதிப்பிடப்படுகின்றன. கணக்கு பாடத்தில் அடிப்படைத்திறன்கள் விவரங்களைக் கையாளும் திறன் போன்ற திறன்கள் சோதிக்கப்படுகின்றன.

     இத்தேர்வை பள்ளி ஆசிரியர்கள் நடத்துவதில்லை. வட்டார வளமையத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நடத்துவர். வேறு ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பயிற்றுநர்களைக்கொண்டு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் மாவட்ட வாரியாக ஆராய்ந்து ஒப்பிட்டு மாநிலத்திற்கு அனுப்பப்படும். இதன்மூலம் கல்வியில் மாணவர்களின் திறன்கள் ஒப்பிடப்படுகின்றன. ஆண் பெண் ஒப்பீடு , நகரங்களுக்கும் கிராமங்களுக்குமான ஒப்பீடு மாணவர்களின் சமூக நிலைகளுக்கேற்ப ஒப்பீடு என பலவகை ஒப்பீடுகள் அளவிடப்படுகின்றன.

     இந்த தேர்வு கல்விக்கான எதிர்கால திட்டங்களை வடிவமைக்கவும் உதவுகின்றன. எந்த பாடத்தில் எந்த திறனில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என அறிந்துகொள்வதன் மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் குறிப்பிட்ட திறன்களை வலுவூட்ட வேண்டும் என திட்டமிடுவதற்கும் உதவுகிறது. மேலும் தேர்வு முடிவுகள் பல்வேறு கல்வி ஆய்வுகளுக்கு பயன்படுகின்றன.

கல்வியில் காணப்படும் பாலியல் பாகுபாடுகளைக் களையவும், கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக்க்காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளை வழங்கவும் இத்தேர்வுகள் கல்வியாளர்களுக்கு துணைபுரிகின்றன.

     ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் ஏற்படும் மாற்றங்களைத் தீர்மானிக்கும் முக்கிய கருவியாக இத்தகைய தேர்வுகள் அமைகின்றன. மாவட்ட அளவிலான ஒப்பீடு மாநிலக் கல்வி வளர்ச்சிக்கும் மாநிலங்களுக் கிடையிலான ஒப்பீடு தேசியக் கல்வி வளர்ச்சிக்கும் பேருதவி புரிகின்றன.

 

Saturday, January 7, 2017

கருப்புசாமி என்றொரு மாணவன்


 

 

இசையை உயிராக நேசிப்பவன்

கற்றுக்கொள்வதற்காக

பட்டினி கிடந்தேனும்

பறையைக்கொணரும் திறம் படைத்தவனுக்கு

 

அலகிட்டு வாய்பாடு சொல்லித்தருகிறார்

தமிழாசிரியர்

அதனை இளையராஜாவின் இசையோடு

பொருத்திப் பார்க்கிறான் அவன்

 

காய்ச்சிய பறையில் பேசத்தெரிந்தவனுக்கு

வவ்வல்ஸ் எல்லாம் வவ்வாலாய்த்தெரிவதில்

வியப்பேதுமில்லை.

 

வடிவியலில் வட்டம் வரையும் போதெல்லாம்

அவன் பறையை வரைந்து பார்ப்பதாக

எண்ணி மகிழ்வான்

 

ஒலியில் விளயாடும் அவனுக்கு

ஓம்ஸ் விதி பற்றி கவலை இல்லை

 

காலத்தை தீர்மானிக்கப்போகிறவனுக்கு

காலக்கோடு எதற்கெனெ எண்ணினான்

 

கடந்த ஆண்டு கலைக்கழகப்போட்டியில்

கோப்பை வென்ற அவனுக்கு

வருகையைக் காரணம் காட்டி

அனுமதி மறுக்கப்பட்டதும்

 

விடுதலைப் பறவையாய் வந்து

உற்று நோக்குகிறான் போட்டிகளை

 

கருவி இசைக்கான முடிவுகள்

வெளியாகி வேறொருவன்

பெற்றுவிட்ட சான்றிதழைக்

 கிழித்தெறிந்துவிட்டு

இளையராஜாவாக விரும்பியவனை

இஞ்சினியர் ஆக்கத்துடிக்கும்

ஆசிரியர்களை

சபித்தபடி வெளியேறினான்

கருப்புசாமி என்றொரு மாணவன்.