தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, March 28, 2009

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்




கிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம். தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார். இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பிய முதல் பதிபு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காபகத்தின் தனிச்சிறப்பு. திருக்குறள் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன. கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.நான்கு வேதங்கள், உபநிடதங்கள்,ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், பல் சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பம்சம். தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய தூண்களும், நேப்பாள மன்னரின் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் எனப் பார்த்த இடங்களில் தன்னைக் கவர்ந்த கட்டட வடிவமைப்புகளைக் கூறி பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார். நூலகத்திற்கென தனிக் கட்டடத்தை 50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும் உருவாக்கி மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார். இவரின் இம்முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்களிடம் உள்ள பல நூல்களை அளித்துள்ளனர். பல்லடம் மாணிக்கம் நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல் நூல்களையும் வெளியிட்டுள்ளார். வள்ளுவம் என்ற இதழையும் நடத்தியுள்ளார். 24 இதழ்களோடு அது நின்றுபோனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும். தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என விருப்பமுடையவராக இருக்கிறார். பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன என்பது கூடுதல் சிறப்பு. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காபகம்தான். இது தொடர்பாக புலவர் பல்லடம் மாணிக்கத்தைச் சந்தித்த போது," தமிழில் எத்தனையோ அரிய நூல்களைப் பாதுகாக்க இயலாமல் இழந்திருக்கிறோம் அந்த இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது. அதை உணர்ந்தே என் காலத்தில் நூல்களைக் காப்பத்ற்கென்றே தனி கவனம் எடுத்துக்கொண்டேன். அவ்வாறு காப்பதன் மூலம் தமிழ் மொழியையும் அதில் உள்ள செறிவான் சிந்தனைகளையும் எதிர்காலத் தமிழர்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற இலக்குடனே இந்தத் தமிழ்நூல் காபகம் படிப்படியாக உருவாக்கப்பட்டது" என்றார். தங்களிடம் உள்ள அரிய நூல்களை கால காலத்திற்குக் காக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். பல்லடம் மாணிக்கம், தமிழ்நூல் காப்பகம், சேலம் நெடுஞ்சாலை, விருத்தாசலம்-606 001 பேசி: 9443042344.

Thursday, March 19, 2009

விடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்







இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போயின. வரலாற்றுத் தரப்படி நிலையில் இத்தகைய பிழைகள் இன்று வரைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவர்தான் விடுதலைப் போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்பாள். கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ஆம் எண் இல்லத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள் திண்ணைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெணமணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே அஞ்சலையம்மாளின் பொது வாழ்க்கைத் தொடங்கி விட்டது. 1927 ஆம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம், 1930-உப்பு சத்தியாகிரகப்போர், 1933-கள்ளுக் கடை மறியல், 1940- தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு கடலுர், திருச்சி வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் நானகரை ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றவர். குறிப்பாக வேலுர் பெண்கள் சிறை அவர் அடிக்கடி சென்று வந்த சிறையாகும். 1932 ஆம் ஆண்டு வேலுர் பெண்கள் சிறையில் 727 ஆம் எண் கைதியாக அஞ்சலையம்மாள் இருந்த போது அவர் நிறை மாத கர்ப்பிணி, சிறையிலேயே குழந்தை பிறந்துவிடுமென்பதால் அவரை வெளியில் அனுப்பி குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனால் சிறையில் குழந்தை பிறந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை. அப்போது பிறந்தவர்தான் ஜெயவீரன் இன்றும் கடலூர் முதுநகரில் சின்னஞ்சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள நற்குணம் என்ற சிற்றூரில் முருகப்படையாட்சி என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். அஞ்சலையம்மாளின் அரசியல் பணிக்கு உறுதுணையாகக் கணவரும் கடலுரிலேயே தங்கி விடுதலைப் போரில் பங்கேற்று அவரும் பல முறை சிறை சென்றுள்ளார் இவர்களின் மூத்த மகள் அம்மாப்பொண்ணு ஒன்பது வயதிலேயே நீலன் சிலையகற்றும் போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அவரை காந்தியடிகள் வார்தாவுக்கு அழைத்துச் சென்று லீலாவதி எனப் பெயர் சூட்டி சபர்மதி ஆசிரமத்தில் வளர்த்தார். அங்கு செவிலியர் படிப்பை முடித்து சென்னை வந்ததும் தன்னைப்போலவே இளம் வயதில் விடுதலைப் போரில் ஈடுபட்ட பன்மொழிப் புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்து கொண்டார். காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அஞ்சலையம்மாள் அரும்பாடு பட்டுள்ளார். கடலூரில் அஞ்சலையம்மாளின் இல்லம் எப்போதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த வண்ணமிருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்காக செலவிட்டிருக்கிறார். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது நல்ல உள்ளம் கொண்ட சிலர் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலையம்மாள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார். 1946 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. "கதர் என்று மகாத்மா கொண்டு வந்தார், கிராமங்களில் நூற்றால் ஒரு சிட்டம் இரண்டரை அணா விற்கிறது. இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போகாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கத்திலே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமில்லாமல் கவுரவமாய் இருப்போம்... கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப் போய்விடுவார்கள். பத்து மணிக்கு அவர்களுக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டு இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்".(சட்டமன்ற அவைக்குறிபு தொகுதி-1,பக்.317,மே,ஜூன்-1946) ஏழைப் பணக்காரர் நிலையை ஒப்பிட்டு பேசியது அவரின் பொது உடைமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. உழவு, நெசவு ஆகிய இரு தொழில்களையும் அவர் குடும்பத்தினர் செய்துள்ளனர். இருப்பினும் நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாகச்செய்துள்ளனர். இவர் கணவர் முருகப்படையாட்சி 1932 ஆம் ஆண்டு கடலுர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு வயது 56 தொழில் நெசவு என்று சிறைப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஞளசலையம்மாளும் அவர் கணவர் முருகப்படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தரி நெசவு செய்து நீண்டநாள் கட்சிப்பணி செய்துள்ளனர். நெசவு செய்த கைத்தரி துணிகளைச் சுமந்து கொண்டு தந்தைப் பெரியாரோடு சென்று சிற்றூர்களில் விற்றுள்ளனர். அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றியுள்ளார். அப்போது அவரின் முயற்சியால் தான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ் கதிர் கருவி கொண்டுவரப் பட்டுள்ளது. ஒரு முறை கடலூருக்கு காந்தியடிகள் வந்த போது அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு மாறு வேடத்தில் காந்தியடிகளை குதிரை வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளை தென்னாட்டின் ஜான்ஸிராணி என அழைத்தாராம். பண்ணுருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் நல்ல குடி நீர் கிடைக்காமல் மக்கள் நரம்பு சிலந்தி நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அத்தகைய சிற்றூர்களில் அஞ்சலையம்மாள் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார். வீராணம் ஏரியிலிருந்து புவன கிரிக்கு பாசன நீர் செல்லும் பெரிய வாய்க்காலில் ஒரு கிளை வாய்க்காலை ஏற்படுத்தி தீர்த்தாம்பாளையம் என்ற சிற்றூருக்கு பாசன வசதி செய்தார் அவ்வாய்க்கால் இன்றும் அஞ்சலை வாய்க்கால் என்றே குறிப்பிடப் படுகிறது. இத்தகைய வரலாற்று நாயகியை நம் வரலாற்றுப் பாட நூல்கள் எப்படி சிறப்பித்துள்ளது தெரியுமா? கடலூர் அஞ்சலையம்மாள் விடுதலை வீரர்களுக்குக் காவல் துறை வளாகத்திலேயே உணவு சமைத்துக் கொடுத்தார் அதனால் அவர் சிறைத் தண்டனைப் பெற்றார் என எழுதப்பட்டுள்ளது அஞ்சலையம்மாளின் வரலாறு. பெண் என்பவள் சமைக்கப் பிறந்தவள் என்னும் ஆணாதிக்கப் பொதுப் புத்தியின் வெளிப்பாடுதான் இது.

Monday, March 16, 2009

கடிதங்கள்-கலாப்ரியா

அன்பு மிக்க புகழேந்தி, வணக்கம். உங்கள் தொகுப்பு கிடைத்தது நன்றி.கரிகாலன் ஏற்கெனவே சொன்னார். பனி முடிந்து கோடை நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் அக்காக் குருவியின் முதல் கூவலை பிபரவரி 7/8 வாக்கில் கேட்டேன். முன்பு இதை தெளிவாகக் குறித்து வைப்பேன். ஒரு முறை நானும் வண்ணநிலவனும் எங்களூர் ரயில் பாதையோரமாக மாலை நேரம் நடந்துகொண்டிருந்த போது அந்த வருடத்தைய முதல் கூவலைக் கேட்டேன். இதமான மனுசன், ஆதமான பழைய நினைவுப் பகிர்தல்களுடன் நடந்துகொண்டிருந்த போது இதமான கூவல் அக்காக்குருவியின் சோகமான கூவல், செண்பகப் பூவின் மணம் தருகிற சோக பாவம் என்று ஒரு விதமான சோம் தான் நான் போலிருக்கிறது. இன்றும் இந்த மாலைப் பொழுது ஒரு சோர்வாகத்தானிருக்கிறது. உங்கள் கவிதைகளை வாசிக்கத் தொடங்கியதும் சற்று சோர்வு விடுபட்ட உணர்வு. ஏற்கெனவே சில கவிதைகள் பத்திரிகைகளில் படித்தவை ஆனாலும் ஒரு கவிஞனுக்கு தொகுப்புதான் முழு உருவையும் ஆளுமையையும் வெளிப்படுத்த உதவுகிறது அந்த வகையில் நல்ல தொகுப்பாக அமைந்திருக்கிறது. அச்சும் அமைப்பும் அழகாக இருக்கிறது. ஒன்றிரண்டேயுள்ள படங்களை முற்றாகத் தவிர்த்திருக்கலாம். நிரல் கவிதை போல நானொன்று எழுதியிருக்கிறேன். வரிசை மனிதர்கள் யாரையும் விட்டு வைக்கமாட்டார்கள் போலிருக்கிறது. பல்லி கவிதை ஏற்கெனவே பத்திரிகையில் தீராநதி(!) படித்த போதே பிடித்திருந்தது 'பல்லிகளின் கடவுள்' என்ற பிரயோகம் நன்றாயிருக்கிறது பொருளோடு இயைந்து. சில அதிகப்படியான வரிகளை நீக்கியிருக்கலாம். வெளியில் போகும்போது பல்லிச் சத்தம் குறித்து இரண்டு முறை வருவதையும் ஒரு நாள் என்ற வரியை நீக்கி விட்டு கால் இடறி தலையில் விழுகிறதொரு பல்லி தலை தெரிக்க ஓடுகிறோம் களியலறை நோக்கி மரண பயத்தில்இன்னும் இறுக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது. மரணத்தை மறந்து- நல்ல கவிதை செறிவான வரிகளுடன் புதுக்கோணத்தில் குழந்தைகளின் பார்வையில் சொல்கிறது. பிரபஞ்சன் கூறியிருப்பது போல் நீங்கள் குழந்தை மனதுடன் நிறைய எழுதியுள்ளீர்கள். கி.ரா. சொல்லுவார் குழந்தைக் கதைகளை குழந்தையின் பாசையில் பரிமாணத்தில் பெரிய மனுச வார்த்தைகள் இல்லாமல் சொல்லணும் என்று. தமிழ் சினிமாக் குழந்தைகள் அவ்வளவு புத்திசாலித் தனமாய் அனுபவத்திற்கு அதிகமான வார்த்தைகளில் சொல்லும் போது எரிச்சலாய் இருக்கிறது எனக்கு நினைவுக்கு வரும். உங்கள் குழந்தைகள் உலகம் குழந்தைகளின் கண்கள்/வார்த்தைகளாலேயே பார்க்கப்படுவது சிறப்பு.பிணத்தை உண்பவன் சரியான கவிதை இதிலும் 'வெந்து சுருங்கிய உடலை' என்ற வரி நீக்கப்படுமானால் எப்படியிருக்கும் (இப்படிச் சொல்லலாமா தெரியவில்லை-தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்) விபத்தின் முகவரி அழகான செறிவாக உள்ள கவிதை. தலைப்பும் அற்புதம். கவிதை சிறிதாகவும் இருக்கலாம் நீளமாகவும் இருக்கலாம். ஆனால் தன்னை மறந்து படிமங்கள் வரிகளை அடுக்கிக் கொண்டே போவது அயர்ச்சியூட்டக் கூடியது ஒரு நல்ல (நீளக்) கவிதை தானே தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் உங்களுடைய மணிப்பேச்சு அப்படி ஒரு கவிதை.இளம் பெண்களைதங்களின் கண்காணிப்பில்வைத்திருக்கிறதுகொலுசு மணி- நல்ல வரிகள்மாட்டுக்கு சலங்கை மணி கட்டுவது பற்றி நான் எழுதியிருக்கிற நினைவு. ஆனால் உங்கள் வரிகளில் தோன்றுகிற தோற்றுவிக்கிற வலி அடர்த்தியானது. கீதாரியின் வருகையைப் புரிந்து கொள்கிற கிடையின் மணியும் எங்கேயோ இட்டுச்செல்கிறதுஇளநீரை விற்பவன் - இன்னொரு நல்ல கவிதை. கைக்குழந்தையென தாங்கிப் பிடித்து சீவுகிறான் கடைசி இளநீரை . மரண அறிவிப்பாளன் நன்றாக வந்திருக்கிறது. கைவிட இயலாத நட்பு போன்ற கவிதையாக மறுக்கிற கவிதைகளைத் தவிர்த்திருக்கலாம். இவை என்னுடைய அன்பு கலந்த அபிப்ராயங்கள் சற்று அக்கறையும் எடுத்துக் கொள்ள உங்கள்,கரிகாலன்,செல்வி,ஞானதிரவியம் போன்றோரின் அன்பு என்னை அனுமதிக்கும் என்ற நெகிழ்வுடன்,என்றும் உங்கள், கலாப்ரியா.9842178870

Saturday, March 14, 2009

வாசகர் வட்டக் கூட்டம் திருவண்ணாமலை




தமிழ் ஒளி இயக்கக் கூட்டம்







திருக்குறள் பலகை திறப்பு விழா




திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் கிராமத்து விளையாட்டுகள் நூலுக்கு திறனாய்வுக்கூட்டம் 22.02.2009 அன்று நடைபெற்றது.தலைமை; வாசுதேவன், முன்னிலை;ஆகாசு.முத்துக்கிருட்டிணன், வேணுகோபால்,விசுவனாதன், வரவேற்புரை;இளங்கோ,நூல் திரனாய்வு செய்தவர் இரமாதேவி. வாழ்த்துரை;ஆனந்த்,சக்திவேல்.இணைப்புரை;சிவராமன். சிறப்பு ஆலோசனை; கவிஞர் தமிழியலன்.காலையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திருக்குறள் பலகைத் திறப்பு விழாவிலும் பங்கேற்றேன். மாலை தமிழ் ஒளி இயக்கம் கலந்தாய்வுக்கூட்டத்தில் ஈழத்தமிழர் சிக்கல் குறித்து விவாதித்தோம். இரவு பேராசிரியர் நெடுஞ்செழியன் வீட்டில் நடைபெற்ற முச்சந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நண்பர்கள் அசோக் உடன் சாந்தகுமார் இல்லம் சென்று வீடு திரும்பினோம். நண்பர் சிவராமன் திருவண்ணாமலையைச் சுற்றிக்காண்பித்தார்.வாழ்க்கையில் முதல் முறையாக திருவண்ணாமலை சென்று வந்தது மன நிறைவைத் தந்தது.

கவிதைகள்

1.நகர்க் குருவி
வீட்டில்முற்றம் வரை
திரும்பும்தவிட்டுக் குருவிகளை
ஊரிலிருந்து திரும்புகையில்எடுத்துப் போகச்சொன்னார்கத்திரி மேட்டிலிருந்துஅறுவடையின் போது கொண்டு வந்துசின்னப்பா பின்னிக்கொடுத்தநெற்கதிர்களை
வாஸ்து மணி கட்டுவதற்காகபொறியாளர் அமைத்தவளையத்தில் தொங்கவிட்டுகண்காணிக்கையில்வினோதமாகவே பார்க்கின்றனநகரத்து.

2.மேல் நிலையாக்கம்
ஆடு பன்றி வெட்டித்தான்ஆண்டுக்கொரு முறைபூசை நடக்கும் ஆகாச வீரனுக்கு
மிச்சமிருப்பதைப்பகிர்ந்து கொள்வோம் பத்து வீட்டு பங்காளிகளும்
சாமி கிடா வயலில் மேய்ந்தால்அடிக்காமல் விரட்ட வேண்டும்இது அறியாப் பிள்ளைகளும்அறிந்ததுதான்
வீரியழும் குழந்தைகளைவீரம்பண்ணியென்றுதான்ஆச்சிகள் திட்டுவர்
பற வீரன் கோயிலில்கிடா வெட்டி காது குத்தும்மொட்டையன் மகன்ஆண்டைக்கும் எடுத்து வைப்பான்அரைக்கிலோ பச்சைக்கறி
ஆடு மாடுகளைபுசிக்க அனுமதிக்கிறதுவேத ஆகமம்
மாற்றுகளைத் தேடும் நீதி அரசர்களோபூசணிக்காய்களைப் பரிந்துரைக்கின்றனர்
எமது பிள்ளைகளுக்குக்கற்பிக்கப்படுகிறதுபலி பூசையை விடவும் பால் பூசை சிறந்ததென்று
அன்றுதொல்தமிழர் வீடுகளில்ஆட்டுக்கறி தின்றஎங்கள் முருகன்இன்று பழனியில்பஞ்சாமிர்தம் உண்டுநாக்கு செத்துக் கிடக்கிறான்
இனிபூசாரிகளின் தோள்களில்பூணூல் தொங்கஎங்கள் மாரியாத்தாள்மெல்ல மாறுவாள்அருள்மிகு மாரியம்மனாய்.
3.பரிகாசம்
அந்த அத்தையோடஆடு மேய்க்கப் போனாமானம் போவும்"சாண்ட குடிச்ச மறுமொவன.."தெனம் இதே வேலதான்ஒரு நாள்"சாண்டு போற எடமெல்லாம்சால் போட்டு மீன் புடிச்சுடுவன்"சின்னம்மாசொல்லிக் கொடுத்ததசொன்னேன்வாயத் திறக்கணுமேஅத்த..!
என்னத்த வெதைக்க
நெல்லறுத்த கொல்லையிலஎள்ளு வெதைக்கலாம்னாஎள்ளு வெதைச்ச கொல்லையிலகொள்ளு கூட மொளைக்காதாம்கரும்பு போடலாந்தான்ஒரம் வெலைய நெனைச்சாலேசக்கரையும் கசக்குதேகரம்பா போட்டாலும்கணராவி வரியகட்டித் தொலைக்கணுமேன்னுஉளுந்து பயிரு வெதச்சுபுட்டேன்பயிர வெதச்சுமயிர புடுங்கறதான்னுபங்கத்த வாங்குறான்பங்காளி.

------------
4. மீன்கள்
-------------
அந்த காலத்துலயுந்தான்வெள்ளம் வரும்கொல்லையில வெறகால்தண்டிய வடிகட்டுனாதட்ட காலுல மீனுவோ கடஞ்சிருக்கும்அரவம் படாத போயிநோவாத அமுக்குனாவெறாகொறவகெளுத்திமடவகெண்டன்னு..சாக்குல கட்டிகிட்டு வருவோம்அடடா...அர்ச்சுனர் சொல்லஎச்சி ஊர ஊரக் கேப்போம்எல்லாம் எங்க தாத்தா போச்சி?ஒரம்ஊரியாபூச்சி மருந்துன்னுவக்காளோழிகொல்லைய நாசம் பண்றானஎப்புடி தங்கும்?5.ஆண்களுக்கு சமமாய்
களை வெட்டமண் அணைக்கஅறுப்பு அறுக்ககட்டு தூக்கவைக்கோல் திரைககூககருப்பம்புள் தூக்கஅண்டை வெட்டகான் பரிக்கவாறகு உடைக்கநெல் தூற்றவாய்க்கால் செத்தகட்டட வேலை செய்யஎல்லாவற்றையும்ஆண்களுக்கு சமமாய்செய்ய வரும்அவர்களைப்பெண் எனப் பிரித்துக் காட்டுவதுஅந்தகூலி மட்டுந்தான்.
6.தாத்தாவின் பறி
பெரிசும் சிறுசுமாய்இரண்டு திறப்புகள்சிறு திறப்பைவைக்கோல் சுருணை அடைத்திருக்கபெரிய வாய்நீரோட்ட திசைக்கு எதிராய்கன்னி வாய்க்காலில்பொழுது சாய வைத்து விடுவார்தாத்தா மூங்கில் குச்சுகளால்தான் பின்னிய பறியை.
விடிகாலை எழுந்து ஓடுவோம்மீன்களுடன் பறியிலிருந்து உதிரும்பாம்பு, நண்டுகளைக் காணதுள்ளத்துடிக்கும் மீன்களைகாணிகள கல்லில் செதிலெடுத்துகவுச்சி சட்டியில் கொதிக்க வைத்துஇறக்கும் போதுஎச்சில் ஊரச் செய்யும்ஆயாவின் கை நேர்த்தி.
பறிபரண் மேல் கிடக்கவரண்டு கிடக்குதுகன்னி வாய்க்காலும்வீராணம் ஏரியும்.இன்று சேதியூரில்குளிக்கும் குளத்தில்சாணியும் யூரியாவும் போட்டுஆச்சி புள்ள ஆயி மகன்வளர்க்கிறார்கட்லா, மிருகலா, ரோகுபோய் சேர்ந்துவிட்டனர்தாத்தாவும் ஆயாவும்.
7.தீபகற்பமும்
நீங்களும்
நாங்களும்ஒன்றுதான்
உங்களை மூன்று பக்கமும்எங்களை நான்கு பக்கமும்சூழ்ந்துள்ளது நீர்
நீங்கள் பேசுவதும்நாங்கள் பேசுவதும்செம்மொழியைத்தான்
உங்களுக்கு மேகங்களும்எங்களுக்கு வானூர்திகளும்பொழிகின்றனமழைக் குண்டுகளை
நீங்கள் இலக்கியங்களில் படிக்கிறீர்கள்நாங்கள் இல்லங்களில் எதிர்கொள்கிறோம்போர்க்களக் காட்சிகளை
உங்கள் குழந்தைகள்தீபாவளி வெடியோசையைச் சகிக்க இயலாமல்படுக்கையறைக்குச் செல்கின்றனர்எங்கள் குழந்தைகள்தினசரி வெடியோசையைச்சகிக்க இயலாமல்பதுங்கு குழிக்குச் செல்கின்றனர்
நீங்கள் பொங்கலைப் பொங்குகிறீர்கள்இங்கு நாங்களே பொங்குகிறோம்
அன்று தோட்டாக்கள் பன்றியின் கொழுப்பில் தோய்ந்தனசிப்பாய்க் கலகம் பிறந்ததுநீங்கள் விடுதலை பெற்றீர்கள்இன்றுதோட்டாக்கள்எங்கள் குருதியில் நனைந்தனபுலிகள் பிறந்தனர்நாங்களும் விடுதலை பெறுவோம்
நீங்களும் நாங்களும்ஒன்றுதான்.
-8.மரண அறிவிப்பாளன்---------------------------------
கொஞ்சமும் வருத்தமின்றிஉரத்து அறிவிக்கிறான்ஊரார் மரணத்தைஒலிப்பெருக்கி உதவியோடு
எழுத்துகளின் மாத்திரை நீட்டிஅழுத்தம் திருத்தமாகவெளிப்படும் சொற்கள்நம்மையும் கொல்லத் துணிவன
ஒருமுறை மட்டும்மரணமடைந்தவர்களைதன் அறிவிப்பில்ஒவ்வொரு முறையும்மரணமணையச் செய்கிறான்
இறந்தவர் வகித்த பதவியைச் சொல்லிஉறவுமுறைச் சொல்லிஇறுதிச்சடங்கு நடைபெறுமிடத்தையும்சொல்லிச் செல்கிறான்ஊர்கள் தோறும்மரணங்களால் வாழ்பவன்.
9.இளநீரை விற்பவன்-------------------------------
எல்லா திசைகளிலிருந்தும்நகருக்குள் நுழைகின்றனமிதி வண்டிகள்இளநீர்க் குலைகளைச் சுமந்தபடி
பொசுக்கும் வெக்கையில்வியர்வை வழியதாகத்தோடு காத்து நிற்கின்றனர்தென்னை மரங்களைப்போல்மூலை முடுக்குகளெங்கும்கைக் குழந்தையெனதாங்கிப் பிடித்து சீவுகிறான்கடைசி இளநீரை
வியாபாரம் முடிந்த மகிழ்வோடுவீடு திரும்பும் முன்அவன் வாய்க்குள் பொழிகிறது மழைதண்ணீர் பொட்டலம் உடைந்து.

Friday, March 13, 2009

இரத்தினபுகழேந்தியின் நூல்கள்



2) வன்னிய சாதிப்பிள்ளைகள் :நாட்டுப்புறவியல் ஆய்வுக்கட்டுரைகள், அண்ணல்வெளியீடு, 4,கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 097, பேச: 044-232840, முதல்பதிப்பு 2001.ISBN : 81-87962-08-9 விலை ரூ 50.


3) தமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அளித்த முனைவர் பட்ட ஆய்வெட்டின் ஒரு பகுதி. வெளியீடு: ஸ்நேகா பதிப்பகம்,348, டி.டி.கே.சாலை, இராயப்பேட்டை, சென்னை -600 014, முதல் பதிப்பு :2004 ISBN :81-87371-45-5 விலை ரூ 60.



4) நகர்க் குருவி : நவீன கவிதைகள், வெளியீடு: மருதா பதிப்பகம், 226, பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை -600 014. முதல் பதிப்பு: 2005 , விலை ரூ 60.



5) மரபுவழி அறிவுமுறை: நாட்டுப்புற ஆய்வுக்கட்டுரைகள் , வெளியீடு : ஸ்நேகா பதிப்பகம், முதல் பதிப்பு 2006, விலை ரூ. 60 ISBN : 81-87371-56-0.




6) கிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, விலை ரூ. 55. ISBN: 978-81-8476-126-9










1) மண்கவுச்சி : கதை,கவிதை,நாட்டுப்புற பாடல்கள் அடங்கிய நவீன தொகுப்பு. களம் வெளியீடு, மருங்கூர்,விருத்தாசலம் வட்டம்,கடலூர் மாவட்டம்-608 703. முதல் பதிப்பு 1994விலை ரூ 15.

2) வன்னிய சாதிப்பிள்ளைகள் :நாட்டுப்புறவியல் ஆய்வுக்கட்டுரைகள், அண்ணல்வெளியீடு, 4,கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 097, பேச: 044-232840, முதல்பதிப்பு 2001.ISBN : 81-87962-08-9 விலை ரூ 50.

3) தமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அளித்த முனைவர் பட்ட ஆய்வெட்டின் ஒரு பகுதி. வெளியீடு: ஸ்நேகா பதிப்பகம்,348, டி.டி.கே.சாலை, இராயப்பேட்டை, சென்னை -600 014, முதல் பதிப்பு :2004 ISBN :81-87371-45-5 விலை ரூ 60.

4) நகர்க் குருவி : நவீன கவிதைகள், வெளியீடு: மருதா பதிப்பகம், 226, பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை -600 014. முதல் பதிப்பு: 2005 , விலை ரூ 60.

5) மரபுவழி அறிவுமுறை: நாட்டுப்புற ஆய்வுக்கட்டுரைகள் , வெளியீடு : ஸ்நேகா பதிப்பகம், முதல் பதிப்பு 2006, விலை ரூ. 60 ISBN : 81-87371-56-0.

6) கிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, விலை ரூ. 55. ISBN: 978-81-8476-126-9.