தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, June 27, 2009

தாகம்(சிறுகதை)

வழக்கத்திற்கு மாறாக இன்று பல்லவன் சரியான நேரத்திற்கு வந்துவிட்டது. இதை எதிர்பார்க்காத பலர் ஏமாந்தனர். சீட்டு வாங்குமிடத்திலும் கூட்டம் குறைவுதான். முன்பே சீட்டுவாங்கி காத்திருந்தவர்களை பெண்காவலர்கள் வரிசையில் நிற்கவைத்து பெட்டிக்குள் அனுப்பிக்கொண்டிருந்தனர். குறுக்கே வந்து ஏற முயற்சித்தவர்களைக் கண்டித்து வரிசைக்குப் பின்னால் அனுப்பத் தவறவில்லை. காந்தி வழக்கம் போல் அலட்சியமாக வந்து வரிசையில் சேர்ந்துகொண்டான். இடம் கிடைப்பது கடினம்தான் இருந்தாலும் நின்று பார்ப்போம் என்றுதான் நின்றான். ஒரு பெரியவர் பெண் காவலர் ஒருவரிடம் வயசானவன் என்னால நிக்க முடியல இது மாதிரி அனுப்புவீங்கன்ன தெரியாது கொஞ்சம் விடுங்கம்மா என்று கனிவாகக் கேட்டுப்பார்த்தார். ஒங்கள மாதிரி வயசானவங்கல்லாம் நிக்கிறாங்க பாருங்க தெரியலன்னா இப்ப தெரிஞ்சிக்கோங்க என்று கூறியபடி வரிசையை ஒழுங்கு படுத்தத் தொடங்கினார். ஒரு வழியாக காந்தி உள்ளே சென்றான் எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. உள்ளே செல்லச் செல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது இரண்டு குழந்தைகளும் ஒரு முதியவரும் அமர்ந்திருந்த இருக்கையில் இன்னொருவர் அமரலாம் அங்கு பையை வைத்திருந்தனர். எதற்கும் கேட்டுப்பார்ப்போமே என்றுதான் கேட்டான் அவன் எதிர்பாராத விதமாக எதிரே அமர்ந்திருந்த பெண் அந்த பைய எடுங்கப்பா அவரு உக்காரட்டும் என்று கூற எதிர்பாராமல் இடம் கிடைத்த மகிழ்ச்சியை புன்னகைத்து நன்றி கூறி வெளிப்படுத்தினான். மெல்ல மெல்ல வண்டி நிறையத் தொடங்கியது. காந்திக்கு அருகில் வந்த நடுத்தர வயதுக்காரர் இன்னைக்கு வண்டி நேரத்தோட வந்துட்டுதோ எனக்கேட்க வண்டி சரியான நேரத்துக்குதான் வந்துது நீங்கதான் லேட் என்று தலையை ஆட்டி கேட்பவர் புன்னகைக்கும்படி தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு பதிலளிக்க இடம் கிடைக்காத வருத்தத்தை மறந்து சிரிக்கத்தொடங்கினார். பக்கத்திலிருந்தவர்களும் காந்தியின் பதிலுக்கு சத்தமில்லாமல் சிரித்தனர். பெட்டிக்குள் மின் விசிரிகளிருந்தும் வேர்த்துக்கொட்டியது.இவனுக்கு தாகம் நாக்கை வரட்டியது. தண்ணீர் வாங்கி வந்திருக்கலாம். இனிமேல் போவது கிடைத்த இடத்திற்கு ஆபத்தாகி விடும். பையை வைத்துவிட்டு பக்கத்திலிருப்பவரிடம் சொல்லிவிட்டுப் போகலாம். ஏனோ அப்படிச் செய்ய மனமில்லை எல்லோர் கைகளிலும் தண்ணீர் பாட்டிலிருந்தது. கேட்டு வாங்கிக் குடிக்க சுயமரியாதை இடமளிக்கவில்லை. தண்ணீர் விற்பவர்கள் வந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டான். ஒருவரும் வருவது போல் தெரியவில்லை. வேறு வழியின்றி வேர்வை சொட்டச் சொட்ட காப்பி வாங்கி குடித்தான். எதிரில் அமர்ந்திருந்த மற்றொரு அம்மாவை வழியனுப்ப வந்திருந்த அவர் தம்பி குடும்பத்தினர் மஞ்சள் நிற குளிர்பான பாட்டிலை வாங்கி நீட்ட எதுக்கு அதான் தண்ணி இருக்கில்ல நீங்க குடிங்க இந்தா கோபி நீகுடிச்சுட்டு குடு என்று வெளியில் நின்று கொண்டிருந்த சிறுவனிடம் நீட்ட அவன் வேண்டாம் அத்த... என்று தலையை ஆட்டினான். கட்டாயப்படுத்தவே வாங்கி ஒருவாய் குடித்தான் வெளியில் நின்றவர்கள் ஆளுக்கு ஒருவாய் குடித்து அரை பாட்டிலுக்கு மேல் காலி செய்து திருப்பிக் கொடுத்தனர். வாங்கி குடிக்கும் போது காந்தி சாடையாகப் பார்த்தான் நாம் பார்ப்பதை வேறுயாராவது பார்க்கிறார்களா என்று கண்களைச் சுழற்றி நோட்டம் விட்டான் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் இவனைப்போலவே குளிர்பானம் குடித்த அம்மாவை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.அவரும் நம்மைப்போல தாகத்தோடு இருக்கிறார் என்பதை அவரின் அந்தப் பார்வை உணர்த்தியது. வண்டி கிளம்பத் தயாரானது வழியனுப்ப வந்தவர்கள் விடை பெறத் தொடங்கினர். பக்கத்து இறுக்கையில் அமர்ந்திருந்த பெரியவருக்கும் தண்ணீர் தாகமாகத்தானிருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பவர்கள் வாயை அண்ணாந்து ஏக்கமாகப் பார்த்தார். ஒருவர்கூட அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம் என எந்த நிலையத்திலும் தண்ணீர் விற்பவர்கள் வராமல் போனது வியப்பாக இருந்தது. தாகம் நாக்கை வரட்டியது தொண்டை வரண்டு உதடுகளுக்கும் பரவியது வரட்சி. யார் யாரெல்லாம் தண்ணீர் வைத்திருக்கிறார்கள் என நோட்டம் விட்டான் இவனைத்தவிர எல்லோரிடமும் இருந்தது.ஒருத்தரின் முகமும் தண்ணீர் கேட்டால் கொடுப்பது போலில்லை.காசு கொடுத்து வாங்குகிற பொருளாகி விட்ட தண்ணீரைக் குடிக்க ஓசியில் கேட்பது நியாமில்லை அப்படியே கேட்டாலும் வாங்கிக்க வேண்டிதான என்ற பதில்தான் வரும் அதற்குக் கேட்காமலிருப்பதே புத்திசாலித்தனம். இருந்தாலும் நா வரட்சி தாக்குப் பிடிக்க முடியல.அந்தப் பெரியவருக்கும் அப்படித்தானிருந்திருக்க வேண்டும் அவர் தாகத்தில் தவிப்பது முகத்தில் தெரிகிறது. மெல்லிய தூரல் விழத்தொடங்கியது. சற்று குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. பெரியவர் முகம் சற்று மலர்ந்தது. தாகம் தணிந்தது போல் உணர்ந்திருக்க வேண்டும். அவருக்கு பக்கத்தில் அவரைப் போலவே வேட்டி கட்டியிருந்தவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார் இவர் மீண்டும் அண்ணாந்து அவர் வாயைப்பார்த்தார் குடித்து முடித்ததும் கெஞ்சுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கையை நீட்டினார். கொடுத்ததும் கொஞ்சமாகத் தொண்டையை நனைத்துக்கொண்டு சுடுது இல்ல.. என்னா வெய்யிலு.. ஏ அப்பா என்று பெருமூச்சு விட்டார்.ஒரு வாய் மட்டும் குடித்துவிட்டு தந்து விட்டார் தாகம் அடங்கவில்லைதான் என்ன செய்வது.ஓசியில வாங்கி தாகம் தீரக் குடிக்க முடியுமா. பொறியியல் கலந்தாய்வுக்கு சென்று வந்த மகளும் தந்தையும் தாங்கள் தேர்வு செய்த கல்லூரியின் சிறப்புகளை பேசியபடி கையிலிருந்த குளிர்பானத்தை குடித்துக்கொண்டு வந்தனர். அவர் அதையும் ஏக்கமாகப் பார்த்தது காந்தி மனதுக்கு சங்கடமாக இருந்தது. இன்னும் அஞ்சு வருடம் கழிச்சு நான் ஒன்னோட அதிகமா சம்பளம் வாங்குவன் மகள் கூறியதைக் கேட்ட அப்பாவுக்கு பூரிப்பு. இவனுக்கு இடம் தந்த முதியவர் எதிரில் அமர்ந்திருந்த தன் மகளிடம் ஏதோ கிசுகிசுக்க பையைத் திறந்து முறுக்குப் பொட்டலத்தை எடுத்து குழந்தைகளுக்குக் கொடுத்தார் நமக்கும் கொடுத்துவிடுவார்களோ கொடுத்தால் எப்படி மறுப்பது என்று யோசித்தபடி முகத்தை வேறுபக்கம் வேடிக்கை பார்ப்பது போல் திருப்பிக்கொண்டான். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் என்ன மனிதர்கள் இவர்கள் பக்கத்திலிருப்பவர்களிடம் ஒரு மரியாதைக்காகவாவது கேட்க வேண்டாமா என்று மனதுக்குள் கூறிக்கொண்டான். குழந்தைகள் முறுக்கைத்தின்று முடித்ததும் தண்ணீர் கேட்கத்தொடங்கிவிட்டனர். தண்ணீர் பாட்டிலைக் கொடுக்க ஒரு பாட்டிலைக் காலி செய்தனர். அதையும் பெரியவர் உமிழ்நீரை விழுங்கியபடி பார்த்துக்கொண்டிருந்தார். விழுப்புரம் வந்து விட்டது தோச... வட...சம்சா... டீ...காபி..... வாட்டர்.... கூல்டிரிங்ஸ்...என பல வித சத்தம் கேட்க காந்தி ஒரு பாட்டில் தண்ணீரை வாங்கி கட கட வென குடித்தான் பெரியவர் பழயபடி பார்க்கத்தொடங்கினார். பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கியதைப் பார்த்துக்கொண்டுதானிருந்தார் அதனால் நம்மிடம் கேட்க மாட்டார் என்றுதான் நினைத்தான் ஆனாலும் அவர் கைகள் அவனை நோக்கி நீண்டன் அவனும் கொடுத்தான் இரண்டு வாய் குடித்துவிட்டு கொடுத்ததும் காந்தி கேட்டேவிட்டான் நானும் பாத்துகிட்டுதான் வரன் இம்மான் தாகத்தோட வரீங்கள ஒரு தண்டி பாட்டிலுதான் வாங்குனா என்ன..? நம்ம வசதிக்கு பதினைஞ்சு ரூவா குடுத்து தண்ணி வாங்கி குடிக்க முடியுங்களா?

Saturday, June 13, 2009

பேராசிரியர் ஆறு.இராமநாதனின் ஆய்வுப்பணிகள்



படைப்பு என்பது புனைவு மட்டும்தானா என்கிற வினாவுக்கு இல்லை என்றுதான் விடையளிக்க வேண்டியுள்ளது. இக்கருத்தில் இலக்கியப் புலமும் கல்விப்புலமும் எதிரெதிராய்த்தான் நிற்கின்றன.புனைவிலக்கியவாதிகள் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகளை படைப்பாக ஏற்றுக்கொள்ளாதது ஒரு வகை இலக்கிய அவலம் என்றுதான் கூறவேண்டும். ஒரு சில பேராசிரியர்கள் படைப்பிலக்கிய வாதிகளாகவும் திகழ்கின்றனர், அவர்கள் புனைவிலக்கியத்திலும் ஆய்வுகளிலும் தங்கள் திறமைகளை ஒருசேர வெளிப்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய பேராசிரியர்களில் ஒருவராகத் திகழ்பவர் முனைவர் ஆறு.இராமநாதன். எழுபதுகளில் வெளி வந்த குமுறல் என்ற சிறுகதைத் தொகுதி அவரின் புனைவிலக்கிய படைப்பிற்கு சான்றாகும். சிற்றூர் மக்களின் வாழ்நிலைகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்தியம்பும் பல கதைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில கதைகள் அப்போதே பரிசு பெற்றவையாகும். அண்மையில் இவர் எழுதிய நொண்டிப் பிள்ளையார் என்ற சிறுகதை அண்ணல் நினைவுப் பரிசினைப் பெற்றது.இது பேராசிரியர் நன்னன் அவர்கள் நிறுவிய அறக்கட்டளையால் வழங்கப்படும் பரிசாகும். பிற மொழி கலவாமல், சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கருவாகக் கொண்ட படைப்புகளுக்குத்தான் மேற்படி பரிசு வழங்கப்படும் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். பேராசிரியர் புதுக்கவிதைகள் எழுதும் ஆற்றல் படைத்தவர் என்பது அவரது படைப்பிலக்கியத் திறமைக்குக் கூடுதல் வலுச்சேர்க்கும் செய்தியாகும். நடவு, வையம் போன்ற இலக்கிய இதழ்களில் இன்றும் கவிதை எழுதி வருகிறார். கவிதைகளிலும் பகுத்தறிவு, பெண்ணியம் போன்ற சிந்தனைகளை முன்னிறுத்துகிறார். புனைவிலக்கியத் தளத்தைவிட ஆய்வுலகில் அவரது படைப்பாக்கப் பங்களிப்பு மிகவும் பிரமிக்கத் தக்கதாகும். தமிழில் புதிர்கள் என்ற ஆய்வு நூல் இரண்டு பதிப்புகள் வெளி வந்துள்ளன. அதில் புதிர்களின் வகைகள், சமுதாயத்தில் புதிர்களின் பங்கு, புதிர்களில் வெளிப்படும் பண்பாட்டுக்கூறுகள் பற்றியெல்லாம் சான்றாதாரங்களுடன் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து எளிய வாசகர்களும் படிக்கும்படியான தெளிந்த நடையில் படைத்துள்ளார். நாட்டுப்புறவியல் என்ற நூலும் இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது. அந்நூல் ஆய்வு உலகம் கண்டிராத பல புதிய கதவுகளைப் பேராசிரியர் நமக்கு திறந்து காட்டுகிறார். தெருக்கூத்துக் கலைபற்றிய முதன்முதலான ஆய்வு இவருடையது. நாட்டுப்புறப் பாடல்களைப் பொருள்கொள்ளும் முறை, மனிதர்களுக்கு வழங்கப்படும் காரணப்பெயர்கள் எனப் பல புதிய தளங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல் என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வு. அதனையும் நூலாக வெளியிட்டுள்ளார். அதற்காக எழுபதுகளில் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டம் முழுக்கக் களப்பணி மேற்கொண்டார். அப்போது திரட்டிய பாடல்களைக்கொண்டு ஆய்வு நிகழ்த்தியதோடு நில்லாமல் அப்பாடல்கள் எதிர்காலத்தில் ஆய்வு நிகழ்த்துவோருக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாட்டுப்புறப் பாடல் களஞ்சியமாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். பத்துத் தொகுதிகளில் முதல் ஐந்து தொகுதிகள் பேராசிரியர் தொகுத்தவை அடுத்த ஐந்து தொகுதிகளுக்கு இவர்தான் முதன்மைப் பதிப்பாசிரியர். இவர் வெளியிட்ட நூல்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை என்பதாகும். ஒரு கதை வாய்மொழியாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பரவும்போது நிலவியல் கூறுகள் அக்கதையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்துள்ளார். பல பேராசிரியர்களால் இன்றும் வியந்து போற்றத்தக்க ஆய்வு அது. நாட்டுப்புற கலைகள்-நிகழ்த்து கலைகள் என்ற நூலில் நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளார். இந்நூலுக்கு 2001 ஆம் ஆண்டுக்கான காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறவியல் என்பது எளிமையான ஒரு துறை, அதில் ஆய்வு செய்வது மிகவும் எளிது என்ற எண்ணம் பரவலாக உள்ளது.ஆனால் பேராசிரியரிடம் ஆய்வு செய்யும் ஒருவர் அந்தக் கருத்தோடு உடன்பட மாட்டார். ஏனெனில் நாட்டுப்புறவியல் ஆய்வு என்பது பல்துறை கலப்பாய்வாகத் திகழ வேண்டும் என்ற கருத்துடையவர் பேராசிரியர். நாட்டுப்புறவியலுக்கென்று சில கோட்பாடுகள் உள்ளன, அக்கோட்பாடுகளை ஆய்வு மாணவர்கள் முறையாகப் பயில வேண்டும் என்பதற்காக நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள் என்ற நூலைப் படைத்துள்ளார். களப்பணியின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் ஏறாளம் உண்டு. ஆய்வுக்காகத் தான் மேற்கொண்ட களப்பணிகளில் ஏற்பட்ட பட்டறிவி னடிப்படையில் நாட்டுப்புறவியல் கள ஆய்வு நெறிமுறைகள் என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். 1982 இல் இவர் வெளியிட்ட காதலர் விடுகதைகள் என்ற நூல் தமிழ் வாய்மொழி இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் ஒரு படைப்பாகும். படிப்போருக்கு சுவையேற்படுத்தும் ஒரு மாறுபட்ட படைப்பு அது. பேராசிரியர் தன் நண்பர்களோடு இணைந்து பதிப்பித்த நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் பதினைந்து தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அது வெகு மக்கள் இலக்கிய வகைமையைப் பறைசாற்றும் ஓர் அரிய முயற்சியாகும். எழுதப் படிக்கத் தெரியாத நம் முன்னோரிடம் புதைந்து கிடக்கும் படைப்பாற்றல்களை அத் தொகுப்பிலுள்ள பல கதைகளில் காணலாம். இன்றைய படைப்பிலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் தாயாக நம் முன்னோர்களின் படைப்பாற்றல் அமைந்திருப்பதை அக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. சிற்றூர் மக்களின் வழிபாட்டு முறைகளை ஆய்வு செய்து, அது மேல்தட்டு மக்களின் நிறுவன வழிபாட்டு முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்துள்ளார். சிறு தெய்வக்கோயில்கள் பெருந்தெய்வக் கோயில்களாகக் காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளன என்ற கருத்து ஆய்வுலகில் உண்டு ஆனால் அதற்கான ஆதாரப்பூர்வமான எடுத்துக்காட்டுகள் நம்மிடம் இல்லை. அக்குறையைப் போக்கியவர் என்ற பெருமை பேராசிரியருக்கு உண்டு. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிலுள் தீப்பாஞ்சாயி என்ற சிறு தெய்வம் எவ்வாறு தீப்பாய்ந்த நாச்சியம்மன் திருக்கோயிலானது என்பதைத் தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்தும் கட்டுரை இவரது ஆய்வுப் பயணத்தில் ஒரு மைல் கல்லாகும். இவருடைய ஆய்வுகள் அனைத்தும் தனித் தன்மையுடையவை. இராமநாதன் பாணி ஆய்வுகள் என்று குறிப்பிடுமளவிற்கு முன் மாதிரியானவை. இவரது ஆய்வுகள் பலவற்றை மேல்நாட்டு அறிஞர்கள் பாராட்டியுள்ளனர். தன் மாணவர்களின் கட்டுரை என்றாலும் உரிய முறையில் மேற்கோள் காட்டுவதோடு அவர்களின் பெயரையும் குறிப்பிடும் ஆய்வு நேர்மையுடைய பண்பாளர். இதுவரை வெளிவந்த இவரது ஆய்வுகளில் குறிப்பிடத் தக்கனவற்றை மேம்படுத்தி மேலும் பல புதிய கட்டுரைகளை இணைத்து தமிழர் கலை இலக்கிய மரபுகள் என்ற நூல் 672 பக்கங்களில் மிகச்சிறப்பாக மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிறந்த நாட்டுப்புறவியல் நூலூக்கான தமிழக அரசின் பரிசு பெற்றுள்ள இந்நூல் தமிழர்களின் அசலான பண்பாட்டு மரபுகளை அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கு ஆகச்சிறந்த ஆவணமாகத் திகழும். சிதம்பரம் வட்டம் வீராணம் ஏரிக்கருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற சிற்றூரில் ஆறுமுகம் சீதாலட்சுமி இணையருக்கு மகனாகப்பிறந்த இவர் பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலும் கல்லூரிப்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை உலகத்தமிழாராய்ச்சி நிறூவனத்திலும் பெற்றவர்.தற்போது தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியராகவும், தமிழ்ப்பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி நிறுவன இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.