தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, October 24, 2011

தீபாவளி - மாறி வரும் கொண்டாட்ட முறைகள்.



'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள்  ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
இவை எல்லாமே புராணப் புளுகுகள் என்று பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்திவிட்டார் என்றாலும் மக்களிடையே இக்கொண்டாட்ட மரபு இன்றும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள் சமணர்களும் கூட ஈப்பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
, தங்கக் கோயில் கட்டுமான பணிகள் 1577-இல் இத்தினத்தில்தொடங்கியதால் சீக்கியர்கள் இந்நாளில் தீபாவளியகக் கொண்டாடுகின்றனர்.
மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, தீபாவளியாக சமணர்கள் கொண்டாடுகின்றனர்.
தீபாவளி கொண்டாட்டம் என்பது இன்று முற்றிலும் வணிகமயமாகிவிட்டது. சில காலங்களுக்கு முன்பு வரை ஆடை வணிகம் மட்டுமே தீபாவளிக்குக் கொடி கட்டிப் பறந்தது. இன்றோ சகல துறைகளும் தீபாவளிக்கு தங்களின் வியாபாரத்தில் இயன்ற வரை லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகள் குழந்தைத் தொழிலாளர்களை வதைத்து தங்களின் வணிகத்தை விரிவாக்கி பல கோடிகளை லாபமீட்டுவதும் , சுற்றுச்சூழல் பற்றியெல்லாம் கவலைப்படாத நூர்பாலைகள் ஜவுளியில் லாபம் பார்ப்பதும், மக்கள் தங்களின் பாரம்பரிய பலகாரங்களை வீட்டில் செய்த நிலை மாறி அனைத்து வகை இனிப்புகளையும்  இனிப்பகங்களில் வாங்கிக்கொள்ளும் சோம்பேறிகளாக, காட்சி ஊடகங்கள் தீபாவளி ஸ்பெஷல் என்று மக்களை வீடில் முடக்கிப்போட, பத்திரிகைகள் தீபாவளி சிறப்பிதழ்கள் மூலம் தங்களின் வணிகத்தில் கண்ணும் கருத்துமாக, தங்கவிற்பனையும் குறைவில்லை (விலையும் குறைவில்லைதான்) இப்படி தீபாவளிப் பண்டிகை என்றால் அது முற்றிலும் வணிகம் மட்டுமே என்ற நிலைக்கு வந்துவிட்டது. இவை ஒரு புறமிருக்க, நினைத்தால் புத்தாடை, அன்றாடம் பலகாரம், மகிழ்ச்சியை பட்டாசு வெடித்து பகிர்ந்து கொள்வது என வாழ்க்கையே சிலருக்கு தீபாவளியாகிவிட்டது.
ஆனால் ஏழ்மை நிலையில் கிராமங்களில் வழும் பாமர மக்களுக்கு இவை அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை வரும் தீபாவளியில் மட்டும்தான் சாத்தியம் என்பதால் ஒருமாதத்திற்கு முன்பே தீபாவளிக்கு தேவையானவற்றைத் திரட்ட வேண்டிய நிலை அவர்களுக்கு.

தீபாவளிக்கு திபாவளி எண்ணை தேய்த்துக் குளிப்பவர்களும் புத்தாடை உடுத்திக்கொள்பவர்களும் கிராமங்களில் இருக்கின்றனர். ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த இந்தசமூகத்தில் குழந்தைகளுக்கு வேண்டுமானால் தீபாவளி மகிழ்ச்சியாக இருக்கலாம். ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோர்களுக்கு தீபாவளியன்றாவது தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே என்ற கவலைதான் மிகுதி.
 

 
 பட்டாசு, புத்தாடை, பலகாரங்கள் இவை தீபாவளியின் தனித்த அம்சங்களாக இருந்தன ஒருகாலத்தில். இன்று நினைத்தால் பத்தாடை வாங்குகிறோம் , தினந்தோறும் பலகாரம்என விழாவின் அனைத்து அம்சங்களும் சில நாட்களுக்கு முன்பே குழந்தைகளின் மன்த்தில் கூடுகட்டத் தொடங்கிவிடும்.



தீபாவளி என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மட்டும்தான்.
 பெண்கள் பலகாரங்கள் செய்வதற்கு தானியங்களைத் தயார் செய்யத்தொடங்கி விடுவார்கள். முருக்கு, முட்டாய் உண்ட(லட்டுதான்),அதிரசம்,பொர்லங்கா உண்ட(பொருள்விளங்கா உருண்டை) என பாரம்பரிய பலகாரங்களுக்கான ஆயத்தப் பணிகளில்  ஈடுபடுவர். அரிசி களைந்து உலரவைப்பது பெண்கள் பணி அவற்றை அரிசி ஆலையில் அரைத்துக் கொண்டு வருவது ஆண்கள் பணி. பார்ப்பதற்கு ஆண்களுக்கு எளிதான பணிபோல் தோன்றும் ஆனால் அதுதான்  மலையை மடுவாக்குவதுவதுபோல். சரியான பதத்தில் அரைத்துக் கொண்டுவரவேண்டும்   வேண்டும் அதற்கு முன்பு ஆலையில் கேழ்வரகு கம்பு போன்ற தானியங்கள் அரைத்திருந்தால் முருக்கரிசி அரைக்கக்கூடாது (முருக்கு சிவப்பதோடு தின்பதற்குக் கடினமாக இருக்கும் என்பதால்)
பக்கத்து வீட்டில் பட்டாசு சத்தம் கேட்டால் நம் வீட்டு குழந்தை மனத்தில் ஏக்கம் வரக்கூடாது என்றுத்

தீபாவளி அன்றுதான் சிறப்பான உணவுகள் கிடைக்கும் அதிகாலை எழுந்து சுழியான் என்னும் இனிப்பு உருண்டை செய்து இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளையும் செய்து ஆவலாய் உண்ணும் மக்கள் இன்றும் இருக்கின்றனர். லட்டு அதிரசம், பொருள்விளங்கா உருண்டை, முருக்கு ஆகிய பலகாரங்கள் தீபாவளிக்கு தீபாவளி நிச்சயம் உண்டு.
தீபாவளி லேகியம் என்பது வழக்கத்திற்கு மாறாக சில சிறப்பு உணவுகளும் பலகாரங்களும் சாப்பிடுவதால் சீரண சிக்கலிருக்கும் என்பதால் சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய வற்றை இடித்துப் பொடியாக்கி நீரிலிட்டு வேக வைத்து நெய்யும் பனைவெல்லமும் கலந்து லேகியமாக்கி உண்பதுண்டு. இந்த லேகியமும் இன்று கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
 அன்று கிடைக்கும் என்பதால் தி

புத்தாடைக்காக தையல் கடையில் தவம் கிடப்பதும் பட்டாசு வாங்கிவரும் அப்பா எந்த பேருந்தில் வருவார் என்று ஏங்கிக் கிடந்ததும் அதிரசம் செய்வதற்காக வைத்திருக்கும் மாவை அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்து ருசிப்பதும் பாட்டிலில் ராக்கெட் வைத்து மேலெ சென்றதும் நிலவுக்கே சென்றதைப் போல் குதூகலித்ததும் ,பொட்டு வெடியை கூழாங்கல் வைத்து நசுக்குவதும்  வெடிக்காமல் கிடக்கும் வெடிகளின் மருந்தை சேகரித்து புதிய வெடி தயாரிப்பதும் வாணக்காரர்கள் தயாரித்த நாட்டு வெடி சத்ததிற்கு காதுகளை பொத்திக்கொள்பவர்களைப் பார்த்து ரசிப்பதும் இன்றைக்கு கிராமங்களில் கூட காணக் கிடைக்காத கால் நூற்றாண்டு கதைகளாகிவிட்டன.
நன்றி : நிலாப்பெண்ணே அக்டோபர் 2011

Friday, October 7, 2011

என் ஊர் - விருத்தாசலம்.









யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும், சொந்த ஊரைப்பற்றி நினைக்கும் போது என் ஊர் என்ற பற்றுதல் அடி மனத்திலிருந்து வெளிப்படத்தான் செய்கிறது.
தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான  ஊர்களில் விருத்தாசலமும் ஒன்றுமுதுகுன்றம் என்பது விருத்தசலத்தின் பழமையான பெயர். சங்க இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும்   இவ்வூர் முதுகுன்றம் என்றே குறிப்பிடப்படுகின்றது. விருத்தம் என்றால் பழமை, அசலம் என்றால் மலை அதனால் பழமலை என்ற பெயரும் உண்டு இங்குள்ள இறைவனின் பெயர் பழமலை நாதர் அவர் முதுகுன்றீசுவரராகி இன்று விருத்தகிரீஸ்வரராகிவிட்டார். இக்கோயில் மிகவும் பழமையானது. பதிமூன்றரை கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த இரிடேசியஸ் வகை சுண்ணாம்புப் பாறைகள் மீது இக்கொயில் கட்டப்பட்டிருப்பதாக நிலவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். நம் ஊரின் பெயர் தமிழில் இல்லையே என்பது இவூர் மக்களின் ஆதங்கம் அதனால் ஊர்ப் பெயரைத் தமிழில் மாற்றும் கோரிக்கை சட்டமன்றத்தில் குழந்தை தமிழரசன் உறுப்பினராக இருந்தபோது முன்மொழியப்பட்டு டெல்லி வரை சென்றது. ஆனால் அது நிறைவேறாமல் போனது. அதற்காக  திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி போராடிப்பார்த்து விட்டோம். அரசுகள் அசைந்துகொடுக்கவில்லை.  
            1760 ஆங்கில் ஆட்சியாளர்கள் இக்கோயிலைச் சுற்றி அகழி அமைத்து கோட்டையாக்கினர். அதன் அடையாளமாகத்தான் இன்றும் கோயிலைச்சுற்றியுள்ள வீதிகள் தென்கோட்டை வீதி, வடக்குக்கோட்டை வீதி
என்று குறிப்பிடப்படுகின்றன. 1803 ஆம் ஆண்டு கார்ரோ என்ற ஆங்கில ஆட்சியர் அகழியைத் தூர்த்து மீண்டும் கோயிலாக்கினார் என்ற வரலாறு உண்டு. இக்கோயில் கல்வெட்டுகளை தமிழகத்தொல்லியல் துறை பதிப்பித்துள்ளது.விடுமுறை நாட்களில் நண்பர்களோடு இக்கோயிலில் அமர்ந்து பாடங்களைப் படித்திருக்கிறேன்.
            இங்குள்ள இன்னொரு முக்கியமான கோயில் கொளஞ்சியப்பர் கோயிலாகும். இந்த கோயில் நிலத்தில்தான் அரசு கல்லூரி அமைந்துள்ளது அதனால் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
            ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ் என்பார்கள். விருத்தாசலத்தின் அழகை மெருகூட்டுவது  மணிமுத்தாறு. புண்ணிய நதி என்று மக்களால் நம்பப்படுகிறது. இதனால்தான் காசிக்கு வீசம் ஜாஸ்தி விருத்தாசலம் என்பார்கள். கோயிலை ஒட்டிய ஆற்றின் பகுதியை புண்ணிய மடு என்பர். ஒன்பத்தாம் நூற்றாண்டில் சுந்தரர் பழமலை நாதர் மேல் திருப்பதிகம் பாடி பன்னிரண்டாயிரம் பொற்கசுகளைப் பெற்று அக்காசுகளை இப்புண்ணிய மடுவில் இட்டு திருவாரூர் கமலாலயக் குளத்தில் எடுத்ததாகக் கதைகள் உண்டு. மாசி மகத்தன்று மணிமுத்தாற்றில் முன்னோர் வழிபாட்டிற்காக சுற்றியுள்ள கிராமத்து மக்கள் மணிமுத்தாற்றில் கூடுவர். காணும் பொங்கலன்று உள்ளூர் மக்கள் திரளாகக் கூடி சிறுவர்கள் பட்டம் விடுவதையும், பெண்கள் கும்மி யடிப்பதையும் இளைஞர்கள் கபடி ஆடுவதையும் கண்டு களிப்பர். 70 களில் அரசியல் கூட்டங்கள்  மணிமுத்தாற்றில்தான் நடக்கும். எம்.ஜி.ஆர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது கண்விழித்திருந்து நள்ளிரவில் நாங்கள் சொற்பொழிவைக் கேட்டதுவும் இந்த மணிமுத்தாற்றில் தான். இன்று மணல் குவாரிகளாலும் கழிவுநீராலும் சிதைந்து கிடக்கிறது மணிமுத்தாறு.
                 தமிழகத்தின் ஒரே பீங்கான் தொழில் நுட்பக்கல்லூரி விருத்தாசலத்தில் தான் அமைந்துள்ளது. அரசு பீங்கான் தொழிற்சாலை மூடப்பட்டாலும் பல தனியார் தொழிற்சாலைகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பீங்கான் பொருட்கள் இங்கிருந்து அனுப்பிவைக்கப் படுகின்றன.
            பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் விருத்தாசலத்திற்கு பெருமை சேர்க்கிறது. ஆசிய அளவில் அமைந்துள்ள பெரிய தனி நபர் நூலகங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள அரசு நூலகம் பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுதமிழகத்தின் முக்கியமான் எழுத்தாளர்கள் பலர்  விருத்தாசலத்தில் வசிக்கின்றனர். பல முக்கிய இலக்கியக் கூட்டங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. திரைத்துறையிலும் இவ்வூர் படைப்பாளிகளின் பங்களிப்பு கணிசமானது.
            திராவிட நாடு பெறும் வரை திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என்று பெரியாரிடம் ரத்தத்தால் கையெழுத்திட்டு கொடுத்த வாக்குறுதியை சாகும் வரை காப்பாற்றிய கொள்கை மறவர் அண்ணன் ராஜு வாழ்ந்தது இவ்வூரில்தான்.
            கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறை படாது என்ற தமிழர்களின் வணிக அறத்தைக் காப்பாற்றும் இவூர் வணிகர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள இன்றைய தலைமுறையினர் மிகுதியாக இந்த சிறு நகரத்தை நோக்கி வந்து குடியேறிய வண்ணம் உள்ளனர்.
             அண்மையில் இங்கு அமைக்கப்பட்ட புறவழிச்சாலையால் நகரத்தின் பரப்பளவு விரிவடைந்துள்ளது . அதனால் விளை நிலங்கள் வீட்டு மனைகளாகி வருகின்றன. மனைகளின் விலையும் சென்னையைதாண்டி விற்கிறது.குறிப்பாகக் கடலூர் சாலையில் அமைந்துள்ள பெரியார் நகர் கடந்த 10 ஆண்டுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளது . பெரியார் நகரில் பல புதுமைகள் உண்டு இங்குள்ள தெருக்களின் பெயர்களில் சங்ககாலப் புலவர்கள் வாழ்கின்றனர். சங்கப்பலகையும் இங்கு உண்டு. சங்க இலக்கிய்ப்பாடல்களை உரையோடு தினமும் மக்கள் பார்வைக்கு இப்பலகை வழியாகக் கொண்டு செல்கிறார் பழமலை என்ற முதியவர். நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் ஒன்று சேர்ந்து நடைப்பயிற்சி கழகத்தை ஏற்படுத்தியுள்ளனர். புதிதாகத் தோன்றிய புற நகர்கள்தான் உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டுகின்றன.
இங்கு நடைபெறும் கட்டுமானத் தொழில் சுற்றுவட்டார ஏழை எளிய மக்களுக்கு  வேலை வாய்ப்பினை வழங்குகிறது. காலை 8 மணியளவில் பாலக்கரையில் குவியும் கட்டடத் தொழிலாளர்களே இதற்கு சாட்சி.
            இங்குள்ள மண்டலஆராய்ச்சி நிலையம் முந்திரி, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களில் பல புதிய ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உழவர்களுக்கு பயிற்சியையும் வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது.
            அரசியலிலும் இலக்கியத்திலும் பல திருப்பு முனைகள் நிகழ்ந்தது விருத்தாசலத்தில்தான் எல்லாவற்றுக்கும் மேலாக, கன்னியாகுமரியையும் காஷ்மீரையும் இணைக்கும் தொடர்வண்டிகள் விருத்தாசலம் வழியாகத்தான் செல்கின்றன